நான் எழுதும் ராமோஜியம் நாவலில் இருந்து – பேரகானில் சினிமா 1942

அடுத்த நிமிஷம் பிரிட்டீஷ் யுத்தப் பிரச்சாரப் படம். அப்புறம் சிக்கனம் பேணுவோம் என்று ஒரு சர்க்கார் விளம்பரப்படம். எல்லாம் முடிந்து தசாபதி.

படம் என்னை குப்புற விழுத்தாட்டியது.

நான் தசாபதியை நாடகமாக ஒற்றைவாடை டிராமா கொட்டகையில் சின்ன வயசில் அப்பாஜி கையைப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் ஹோஹோவென்று சிரிக்க எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை என்றாலும் அப்பா அவ்வப்போது பெரிய பையன்கள் கழுத்தில் மாட்டிய தகரத் தட்டில் வைத்து நொறுக்குத்தீனி, கடலை உருண்டை, பிஸ்கட் என்று நாடகக் கொட்டகைக்குள் விற்றுக்கொண்டு போனதை வாங்கித் தர, சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் கதை புரியாததை சட்டை செய்யவே இல்லை. எல்லாம் சாப்பிட்டு அலுக்க ஒரு மணி நேரம் ஆக வேண்டி இருந்தது. அப்புறம் வீட்டுக்குப் போகலாம் என்று பாதி நாடகத்தில் அழுது அப்பாஜியிடம் திட்டு வாங்கிக்கொண்டு அவரும் முழுதும் பார்க்காமல் வீட்டுக்குத் திரும்பினோம்.

அதே தசாபதியை இப்போது எம்விஎம் செட்டியார் ஃபிலிம் ஆக்கி, காளிங்க ரத்தினத்தையும் ராமசந்தரையும் நடிக்க வைத்திருக்கிறார். தற்போது ஊரெல்லாம் பேச ஆரம்பித்திருக்கும் மருதூர் கோபாலன் ராமச்சந்தர் இல்லை இவர். டி டி ராமசந்தர்.

தசாபதி பார்க்கத் தொடங்கி, முதலிலிருந்தே ரத்னா கையைப் பற்றிக் கொண்டு சிரித்துச் சிரித்துப் புரை ஏறிவிட்டது. எல்லாம் சிரிப்பாகப் போய்க் கொண்டிருக்க, வந்தாளே கள்ளியங்காட்டு யட்சி.

நாலு சீன் கடந்து, ஹீரோயினாக புவனா வந்து என்னை ஸ்தம்பித்துப் போக வைத்தாள். வெறும் புவனா இல்லை. தெலக்ஸ் சோப் விளம்பரத்தில் பத்திரிகை ஒன்று விடாமல் சிரித்துக் கொண்டிருக்கும் தெலக்ஸ் புவனா.

இப்படி ஒரு பேரழகை நான் சத்தியமாக இதுவரை பார்த்ததில்லை. ரத்னா குடத்துக்குள் இட்ட விளக்கு போல அடக்கமான அழகு. ஆனால் புவனாவோ, லைட் ஹவுஸில் வைத்த மகாதீபம் போல ஒரு பெரும் கூட்டத்தையே ஏங்க வைக்கிற அழகு. கும்பகோணத்தில் கோபு சொல்வானே, காதல் செய்ய இல்லை, ஆராதிக்கவென்றேயான அழகு. அது தெலக்ஸ் புவனா தான். ஏன் காதல் செய்யக் கூடாது? ஆராதித்து அணைத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் போல் பூஞ்சை சரீரம் தான். ஆனாலும் அந்த நளினமும், முகம் கொள்ளாத சிரிப்பும். ரத்னாவோ கங்காவோ சிரித்தால் முகத்துக்கு ஒளி ஏற்றுவார்கள். தெலக்ஸ் புவனா சிரித்தால் அந்த இடமே பளிச்சென்றாகும். என்ன குரல் என்ன குரல். ரத்னா குரல் எனக்கு கனவிலும் வருவது. காதில் ஒலிப்பதோடு மனதிலும் ஒலித்துக் கொண்டே இருப்பது. அந்தரங்கமான நேரத்தில் அந்தக் குரல் உடம்பில் ஒவ்வொரு திசுவுக்குள்ளும் கேட்டு எதிரொலிக்க அவளில் ஒடுங்கிக் கிடக்கவல்லாமல் வேறேதும் செய்யேன்.

தெலக்ஸ் புவனா குரல் கொஞ்சம் கிரீச்சிடும். கொஞ்சம் கட்டைக்குரலாக ஜாலம் காட்டும். அந்தக் கண்களின் குறுகுறுப்போடு புவனா குரல் இழைந்து வரும்போது, செய்து கொண்டிருந்த காரியம் எதுவாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும்.

”எவ்வளவு அழகா இருக்கு இந்த புவனா, பார்த்தியா அன்பே”.

நான் ரத்னா காதில் ஓத, அவள் வெடுக்கென்று கையை உதறிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதாகப் பாவனை செய்தாள். விழித்து என் காதில் சொன்னாள் –

“ரொம்ப போரடிக்குது… நான் தூங்கிக்கறேன்… நீங்க நல்லா புவனா தரிசனம் பண்ணிக்குங்க.. போற வழிக்கு புண்ணியம்”.

என் நினைவெல்லாம் தெலக்ஸ் புவனா ஆக்ரமித்துக்கொள்ள கும்பகோணத்தில் கோபுவோடு மானசீகமாகப் பேசினேன் –

”என் ஆராதனைக்கு உரிய அழகை நானும் கண்டேன். இதோ இந்த வெள்ளித் திரையில் மனம் கொள்ளை கொள்ளும் அழகு அது. ராஜூவும் நீயும் கட்டாயம் தசாபதி பாருங்கள்”.

புவனா வந்த காட்சிகளில் எல்லாம் ஆர்வம் காட்டி, நாற்காலியின் முனைக்கே போய் உட்கார்ந்து படத்தில் ஆழ்ந்தேன். ஒரு சீனில் புவனா ”நீ இங்கே வருவாயோ” என்று ஹிருதயத்தைக் கவ்விப் பிடித்துப் பாட்டுப் பாடி, சதிர்க் கச்சேரியாக ஆடும்போது, வந்தேன் என்று திரைக்குள் மானசீகமாகப் போய், புவனா ஆடும் வீட்டுக்குள், வீடு என்று போட்ட செட்டுக்குள் புகுந்து, வெகு அருகே, மிக அருகே, அந்த முகத்தையே பார்த்துத் தியானித்தபடி இருந்தேன்.

சீக்கிரம் படம் முடிந்து விடுமே என்று மனது அங்கலாய்க்க, அருகே ரத்னா தன் அலுப்பைப் போக்கத் தந்தச் சிமிழைக் கைப்பையில் இருந்து எடுத்து கள்ளத்தனமாகத் திறந்து கிர்ரென்று சத்தம் இன்றி நாசுக்காகப் பொடி போட்டாள். அதற்கு தெலக்ஸ் புவனா கூந்தலில் சூட்டியிருந்த ஜாதிப்பூ வாசனை.

மனம் நான் கேட்பதற்குள் முந்திக் கொண்டது – இல்லை தெலக்ஸ் புவனா பொடி போடுவாளாக இருக்க முடியாது. ஆந்திரப் பெண் போல உடம்பு வாகு, லாகவம், சௌந்தர்யம். ஆந்திரப் பெண்போல சுருட்டு வேணுமானல் பற்ற வைத்து தீ எரியும் முனையை வாய்க்குள் வைத்துப் புகைப்பாளாக இருக்கும்.

என்னையும் மீறி சுருட்டோடு தெலக்ஸ் புவனாவைக் கற்பனை செய்ய, ’நாம் கடற்கரையில் யுத்தம் புரிவோம், நாம் தெருக்களில் யுத்தம் புரிவோம்’ என்று அதிகாரத்தோடு சொல்லி சுருட்டுப் புகை விட்டபடி வின்ஸ்டண்ட் சர்ச்சில் மனதின் ஒரு மூலையில் இருந்து மற்றதற்கு மெல்ல நடந்து போனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன