ராமோஜியம் – என் அடுத்த புதினத்திலிருந்து – தசாபதி பார்த்து

விலாசினி என்னை விட்டுவிட்டு ரத்னாவிடம் படம் எப்படி இருந்துதுன்னு கேட்டாள். அது எனக்குமான கேள்விதானென்று தெரியும். ரத்னா என்ன பதில் சொல்கிறாள் என்று ஒரு வினாடி ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தேன்.

”படம் நல்லா இருக்கு தான். ஆனா ஹீரோயின் தான் சகிக்கலே. ஒட்டடைக்குச்சிக்கு புடவை சுத்திவிட்ட மாதிரி ஒரு உடம்பு.. அதுலே என்னதான் கண்டாங்களோ ஆம்பளைங்க எல்லாம்”. ரத்னா சொன்னாள்.

”எல்லோரும் இல்லே.. எனக்கு ஸ்கூல் வாத்தியாரா வரும் சக்ரபாணியை ரொம்ப பிடிச்சிருந்தது”.

கேளப்பன் படு சீரியஸ் ஆகச் சொல்ல நான் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன். சக்ரபாணி நடிப்பு பிடித்திருந்தால் அது சரிதான். அவரைப் பார்த்து கேளப்பன் காமுற முகாந்திரம் யாதும் இல்லையே.

”அவரை விட பரண்லே உட்கார்ந்து பலகாரம் திங்கற அவர் வீட்டம்மா நல்லா துருதுருன்னு இருந்தது. பார்க்கவும் லட்சணமான சுந்தரி பெண்குட்டி”.

இருக்கலாம். புவனாவோடு ஒப்பிட்டால் ஹாலிவுட் பேரழகி என்று போற்றப்படும் ரீட்டா ஹேவொர்த் கூடப் பேரழகி இல்லை.

வீட்டுக்குப் போக ரிக்ஷா கிடைத்தது. எங்கேயும் நர வாகனமான கை ரிக்ஷாவில் போகக் கூடாது என்று தீர்மானம் செய்திருந்தது அந்த ராத்திரி பயணத்தால் மீறப்பட்டது.

தெலக்ஸ் புவனா வேறே மனம் நிறைய, புத்தி நிறைய நிறைந்து இன்னும் தசாபதி படம் எனக்கு ஓயவில்லை. இதை ரத்னாவிடம் இனியும் சொன்னால் வீண் சண்டை, இல்லை, அது ஊடல், ஏற்படும்.

ஜப்பான் குண்டு வீசித் தாக்குதலோ, வீட்டில் ஊடலோ, அல்லது இரண்டுமோ நான் சந்திக்க வேண்டி இருக்கும். அதற்குள் வீட்டுக்கு நடக்க முடியாது.

ரத்னாவோடு ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புதுவருஷப் பிறப்பன்று மைலாப்பூர் வந்துவிட்டு ஏக சிரமமாகி விட்டது. நானே பயந்து போன முன்னிரவு அது. வீட்டுக்குப் போய்விட்டால் எந்தப் பிரச்சனையையும் ஒரு மாதிரி சமாளிக்கலாம். போனோம்.

நாலைந்து பாத்திரங்களை சமையல்கட்டில் இருந்து எடுத்து வந்தாள் ரத்னா. பெரிய விருந்துதான் என்று தீர்மானித்தேன். இது ஒண்ணு இவளிடம், சண்டை போட்டாலும் வயிற்றுக்கு குறை வைக்க மாட்டாள்.

எலுமிச்சம்பழ சேவை, தேங்காய் சேவை, மிளகு சேவை, புளி சேவை, தயிர் சேவை என்று அட்டகாசமாக ராச்சாப்பாடு. தேங்காய்ப் பாலும் துண்டு மாங்காய் ஊறுகாயும், தக்காளி ரச வண்டலும் கூட்டணி.

”அதென்ன சேவை? இடியாப்பம்னு சொல்லுங்க” என்று கல்யாணமான புதிதில் ரத்னா என்னைத் திருத்த முற்பட்டது நினைவு வந்தது. நான் அப்போது அழுத்தந் திருத்தமாகச் சொன்னது –

“வேக வைத்து அப்படியே சாப்பிட்டால் இடியாப்பம். உதிர்த்து சாப்பிட்டால் சேவை”.

”என்ன ரொம்ப சேவை மனப்பான்மையிலே இருக்கறாப்பல இருக்கு” என்று கேணைத்தனமாக ஆரம்பித்தேன். அவள் இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு வைத்திருக்கும் நொடிப்போ, நல்ல ரொமாண்டிக் மனநிலையில் இருந்தால் பொங்கும் சிரிப்புமோ இல்லாமல், ராத்திரி கடை அடைக்கும் நேரத்தில் வந்த கஸ்டமருக்கு கேட்டதைக் கொண்டு வந்து வைக்கும் ஒட்டல்காரர் போல சேவையைத் தட்டில் போட்டுப் போனாள். அது இடியாப்பமாக இருந்தால் வீசியிருப்பாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன