புவனா இன்னும் என் மனதிலும் அவள் மனதிலும் நிழலாடிக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. என்றாலும், நான் புவனா மீது பித்தாகிப் போனது என்னமோ நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக்கொண்டு இருக்கிறதே தவிர குறையவில்லை.
படுக்கையில் சுமுகமான இரண்டு விலங்குகளாக ரத்னாவும் நானும் காதல் பரிமாறிக்கொண்டோம். எல்லாம் முடிந்து உறக்கத்தில் நழுவும்போது தெலக்ஸ் புவனாவின் சிரிப்பு என்னைச் சுற்றிச் சுழன்றது. கொடிமின்னல் வெட்டிப் பளிச்சிடும் ஒளியோடு அலையும் ஓர் அழகான பிசாசாக புவனா என் விழிகளுக்குள் மின்னி வர நான் எப்போது உறங்கினேன் தெரியாது.
சினிமா படம் பார்த்து பயந்தது உண்டு. இன்விசிபில் கோஸ்ட், கிங்க் ஆஃப் த ஸோம்பீஸ் போன்ற இங்க்லீஷ் படங்களில் பிசாசு வரப் பார்த்து ராத்திரி முழுக்க இனம் புரியாத பிசாசு பயம் தூக்கம் கெடுக்க காலை எழுந்ததும் அதெல்லாம் போயிருக்கும். ஆனால் தெலக்ஸ் புவனா அப்படி இல்லை. மனதில் அழுத்தமாகப் பதிந்து போயிருக்கும் நினைவும் யட்சிக் கனவும் அந்த வெண்சிறகுத் தேவதை.
காலையில் குளித்து விட்டு பூஜை அலமாரிக்கு முன் நின்று ஐந்து நிமிடம் வீட்டுக்கும் தேசத்துக்கும் உலகத்துக்கும் நல்லது நடக்கப் பிரார்த்திப்பேன். குளித்து விட்டு தட்டுச் சுற்று வேட்டி உடுத்து நாற்காலியில் உட்கார்ந்தால் கலகலவென்று சிரிப்புச் சத்தம். அறைக்குள் தெலக்ஸ் புவனாவின் சாந்நித்யம் முழுக்க நிரம்பி வழிகிறதாக ஒரு பிரமை.
ருசியாக பெசரெட் தோசை செய்து காலை ஆகாரம் கொடுத்தாள் ரத்னா. அந்த ருசி நாக்கில் பரவி மனம் தோய்ந்தபோது மறுபடி புவனா உயிரில் கலந்து நிறைந்து நிற்க, மிரள மிரள நாலு திசையும் பார்த்தேன்.
ரத்னா பதறிப்போய் ‘என்னாச்சுங்க.. என்ன ஆச்சு?” என்று சத்தமாகக் கேட்டு சமையலறைத் தரையில் என் அருகே இருந்து என் தலையை ஆதரவாகத் தன் மார்புக்கு நடுவே புதைத்துக் கொண்டாள். நான் இருக்கிறேன் உனக்கு என்று அதிக பட்ச பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை அது.
ஒரு நிமிடம் குடிகூரா பவுடரும் மஞ்சள் பொடியும், மைசூர் சாண்டல் சோப்பும், நிறைந்த வியர்வை நறுமணமுமாக நான் ரத்னாவோடு நெருங்கி கட்டுண்டு மயங்கிக் கிடந்தேன்.
அடுத்த நிமிடம் புவனா பாடிக்கொண்டே குறும்புப் பார்வை பார்த்தபடி என் தலையைத் தடவினாள். இது ஆராதிக்க வேண்டிய அழகு என்றால் உயரத்தில் இருந்து அருள் செய்ய வேண்டியதுதானே. ஏன் கீழே இறங்கி என் அந்தரங்க நொடியில் குறுக்கே புக வேண்டும்?
”நல்ல பிசாசு இல்லையா?”.
நான் ரத்னாவிடம் சந்தேகம் தெளிவு பெறக் கேட்டேன். அவள் மேலும் பதறி, ‘நிமிஷாம்பா, இவருக்கு மோகினிப் பிசாசு பிடிச்சிருக்கே. காப்பாத்து.. கற்பகாம்பா.. காப்பாத்து’ என்று மனம் ஒப்பிக் கை கூப்பிக் கண்மூடித் தொழுதாள்.
நான் அதற்குள் சாப்பிடுவதாகப் பெயர் பண்ணி பெசரட்டை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் பிய்த்துத் தின்று விட்டு எழுந்தேன்.
ஒவ்வொரு தடவை ரத்னா கைச்சாப்பாட்டை ருசிக்கும்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் அது எப்படி ருசியும் பிரியமும் சூடும் சுவையுமாக இருந்தது என்பதை அவளிடம் சொல்லாமல் கை கழுவப் போகமாட்டேன். இன்றைக்கு எழுந்து ஒன்றும் பேசாமல் கை கழுவ, பக்கத்தில் நின்று அவள் கண் கலங்கினாள்.
“என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு சரியில்லைன்னா ஆபீஸ் போக வேணாம். ஒரு நாள் லீவு சொல்லிடுங்க”.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் உத்தியோக உடுப்பு தரித்து ஆபீசுக்குக் கிளம்பினேன். ஒரு நிம்மதியான புன்சிரிப்போடு, “பார்த்துப் போயிட்டு வாங்க” என்று வாசல் வரை வந்து அனுப்பி வைத்தாள் ரத்னா.