ராமோஜியம் – பிட்மேன் ஷார்ட் ஹாண்ட்டும் தசாபதியும் 1942

அட்டெண்டென்ஸில் கையெழுத்துப் போட்டு உள்ளே போகும்போது சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் கூப்பிட்டார் –

ராமோஜி இது என்ன உங்க கையெழுத்து போடாம லக்ஸ்னு என்னமோ எழுதியிருக்கீர்.. அது லக்ஸம்பர்க் ஸ்ட்ரோக் ஆச்சே… ஷார்ட் ஹேண்ட் படிக்க ஆரம்பிச்சிருக்கீரா?”

சுதாரித்துக் கொண்டேன்.

“பிட்மென் ஷார்ட்ஹாண்ட் புக் செகண்ட் ஹேண்ட் காப்பி மூர்மார்க்கெட்டுலே கிடைச்சது.. நானே பழக ஆரம்பிச்சிருக்கேன் சார்” என்றேன்.

”இந்த ஷார்ட் ஹாண்டே இப்படித்தான் … பழக ஆரம்பிச்சா மனசுலே ஷார்ட்டா ஆக எல்லாத்தையும் குறுக்கி அதை ஸ்ட்ரோக்காக கன்வெர்ட் பண்ணும்.. எனக்கு ரொம்ப பிடிச்சது கல்பீட்டர் – க்ளியோபாட்ரா ..”.

எனக்கு ஷார்ட் ஹேண்ட் இல்லே.. ப்ராட் ஸ்மைல்ஸ்.. தெலக்ஸ் புவனா. லக்ஸ் ஸ்ட்ரோக் போட்டா லக்ஸம்பர்க் இல்லே ..தெலக்ஸ் புவனா .. என் கல்பீட்டர்..

வீட்டுக்கு ரத்னா. மனசிலே அசோகா பாக்கு மாதிரி அசை போட்டபடி ஆபீசில் வேலை பார்க்க புவனா.

ஆபீஸ் மேஜையில் எனக்கு எதிரே தொடுக்கி உட்கார்ந்து என்னையே பார்த்தபடி தெலக்ஸ் புவனா.

பென்ஷன் கணக்குகளை லெட்ஜரில் இருந்து சப்ளிமெண்டரிகளில் பெயர்த்தெழுதி, வகைப்படுத்தி, ட்ரஷரியில் இருந்து வந்த தொகையை டாலி பண்ணிக் கொண்டிருந்தபோது, பென்சிலைப் பிடுங்கி, லெட்ஜரை மூடி வைத்து, மேஜையின் மேல் அவள் நாட்டியமாடுவதைப் பார்க்கச் சொல்லி என்னை நச்சரித்தவள் அவள்.

நேற்றைக்கெல்லாம் ஆராதிக்க வேண்டியவளாகத் தெரிந்த புவனா இப்போது அணைத்து முத்தமழை பொழிந்து நெஞ்சோடு இறுக்கிக் கொள்ள வேண்டியவளாக மாறிப் போனாள்.

நான் புவனாவின் ஆட்டத்தில் மனம் பறிகொடுத்து, தியாகராஜ பாகவதராக பைரவி ராகத்தில் எதிர்ப்பாட்டு பாடத் தூண்டப்பட்டேன் –

”உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ”

”சார் உடம்பு சரியில்லையா”?

ப்யூன் வீரையா என் பக்கத்தில் வந்து நெற்றியில் கைவைத்துப் பார்க்க தெலக்ஸ் புவனா மேஜையை விட்டு இறங்கி மறைந்து போனாள்.

”உடம்புக்கு ஒண்ணும் இல்லே வீரையா.. நீ விடிகாலையிலேயே கோங்குரா சட்னி சாப்பிட்டு வருவியா? வாசனை தூக்குதே”

”அது ராத்திரி சாப்பிட்டது சார், கை சரியா கழுவலே”.

(Excerpts from my forthcoming novel RAMOJIUM – another 1942 chapter)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன