ராமோஜியம் : வீரையா ஞானமருளிய இன்னொரு 1942 அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

வீரையாவின் லீலைகள் எந்த நிலையிலே இருக்கு? ஆபீஸ் நேரத்தில் வம்பு பேசமாட்டேன். அதுவும் இந்துநேசன் தனமானவை. இப்போது கதைக்கச் சொல்கிறது மனம்.

அதை ஏன் கேக்கறீங்க என்றபடி உற்சாகமாக என் மேஜைக்கு முன் வந்து நின்றான் அவன். யாருமே வரக்கூடிய சாத்தியம் இல்லை என்றால் அங்கே உட்காரவும் தயங்க மாட்டான் அவன். ’தோஸ்த் சார் ஹம் தோனோ’ என்று ஹிந்தியில் எல்லாம் பெருந்தன்மை காட்டியிருக்கிறான் வீரையா.

அவன் சற்று விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தான்.

”என்ன கால்லே கட்டுப் போட்டிருக்கே?”, அவனைக் கேட்டேன்.

“என்னத்த சொல்ல, போன வாரம் பௌர்ணமிக்கு மரத்தடியிலே ஊஞ்சல் கட்டி ஆடும்போது விளுந்துட்டேன் சார்.. நொண்டிக்கிட்டே போய் நானே மருந்து போட்டுக்கிட்டேன்” என்றான் வீரையா.

”வீட்டுலே யாரும் இல்லையா?”

“பவுர்ணமி ராத்திரி ஆச்சே.. வீட்டுக்குள்ளே எப்படி கூப்பிடறது? தெரு முழுக்க தெரிஞ்சுடுமே.. அமாவாசையா, நாலு குட்டிங்களை ஒண்ணொண்ணா கூப்பிட்டு விட்டு …”

அவன் அமாவாசைக்கு கொஞ்சம் முன்னால் சுறுசுறுப்பாவான், தெரியும்.

”எப்படி இத்தனை அஃபயர் கையாளறே வீரய்யா? ஒவ்வொண்ணும் ஒண்ணொண்ணு கேட்குமே .. டென்ஷன் ஆக மாட்டியா? மனசு இதிலேயே சுத்திச் சுத்தி வராதா?”

தெலக்ஸ் அடியெடுத்து கொடுக்க, தெலுங்கில் அவனைத் துணிந்து கேட்டே விட்டேன்.

”அபயர்னா, தீ பத்திக்கறதா?” அவனும் தெலுங்கில் வந்தான்.

“ஆமா, வேறே மாதிரி தீ பத்த வைக்கறது.. ஒரே நேரத்திலே இத்தனை பொண்ணுங்களை ..”

“ஓ கசமுசாவா .. ஒரு பிரச்சனையும் இல்லே சார்.. மங்கா வந்தாளா .. வாடி மங்கா.. மனசுலே கெளக்கு மூலையிலே உக்காரு.. அங்கே இருந்து எழுந்திருக்காதே.. ஆட, பாட, சிரிக்க, அழ, என்னோட சரசம் பண்ண இதுதான் உன்னோட இடம்.. தனம்.. நீ வடக்கு வசத்திலே இரு.. இந்தா ஒரு முத்தா.. ராணி, உதட்டை கடிக்காதே.. இந்த ஓரமா உக்காரு.. சின்னி, நீ என்ன பண்றே பின்னலை முன்னாடி போட்டுக்கிட்டு மேற்கு பாத்து.. ஆளாளுக்கு மனசிலே இடத்தை பகிர்ந்து வச்சுட்டா, ஒருத்தியோட இருக்கறபோது இன்னொருத்தி தலை காட்டறது, ஒருத்தி நினைவிலே இருக்கும்போது வேறே ஒருத்தி மூக்கை நுழைக்கிறது எதுவும் இல்லே சார்.. எனக்கு சுதந்திரம் எல்லாம் காந்தி வாங்கித் தரவேணாம்.. நானே வாங்கிட்டேன்”.

*”நானும்” என்றபடி அந்த குருதேவனை மனசில் கை கூப்பித் தொழுதேன். அப்புறம் மனசில் யாருமே வராமல் முழு மனமும் புத்தியும் ஆபீஸ் வேலை என்றானேன்.

(ராமோஜியம் – வளர்ந்து வரும் புது நாவலில் இருந்து)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன