ராமோஜியம் -தெலக்ஸ் புவனா 1942 – சில பகுதிகள்

நாலு மணிக்கு வீட்டுக்குப் போகிறேனா என்று பார்க்க சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் சீட்டுக்கு வந்துவிட்டார்.

இதோ போறேன் சார் என்று அவசரம் காட்டி சாப்பாட்டுப் பையில் ஸ்பூனைத் தேடி எடுத்து மறுபடி உள்ளே போட்டேன். நெய் வாசனை அடிக்க இன்னும் ரெண்டு கரண்டி அவல் கேசரி, ரத்னா கை கிண்டிய அமிர்தம் உள்ளே பாக்கி இருந்ததை போகிற வழிக்குப் புண்ணியமாகத் தின்றபடி கிளம்ப உத்தேசம்.

“நானும் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பறேன்.. இன்னிக்கு எங்க அத்தங்கா வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு” என்றார்.

அத்தங்கா என்றால்?

அத்தை பெண் என்று விளக்கம் சொன்னார் அவர்.

“ தமிழ் பிராமின்ஸ் – அரவவாடுஸ் சொல்ற மாதிரி இருக்கே சார்”

“தமிழே தான்”

“நீங்க தெலுங்கு ஆச்சே சார்”

“என்ன பண்ண? நாலு தலைமுறையா இங்கேயே இருந்து தெலுங்கு மறந்து போயிடுத்து. அதான் தமிழ்லே சொல்லிட்டு ஒரு காரு சேர்த்துப்போம்”

அத்தங்கா காரு. அத்திம்பேர் காரு என்று வாயைத் திறக்காமல் சொல்லிப் பார்த்தேன். திராபையாக இருந்தது.

”தசாபதி சினிமா பார்த்துட்டீரா? போடு போடுன்னு போடுறதாமே?”

பந்துலு சார் விசாரிக்க தெலக்ஸ் மனதில் இருந்து வெளியே வரவா என்றாள். இப்போ வேணாம்.

அட, சூப்பரிண்டெண்ட் கூட சினிமா பார்ப்பாராமே. சூப்பரிண்டெண்ட்டுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு என்று அடையாளம் தெரியாத யாரோ ஒரு பெண் கண்ணை அகல விரித்துத் தெலுங்கில் சொன்னாள். புன்சிரிப்போடு ஃபைல் எடுத்து வந்த வீரையா மனசில் இருந்து ’நேனு சின்னி’ என்று எட்டிப் பார்த்தவள் அவள்.

”ரொம்ப நல்லா இருக்கு சார் படம்”

பாராட்டு நல்கினேன். அருமையான நடிப்பு வேறே என்று ஆரம்பித்து நிறுத்தி, சக்ரபாணியோட பெண்ஜாதியா பரண்லே உக்காந்து பலகாரம் சாப்பிடற பொண்ணு என்று முடித்தேன்.

”உமக்கு ரசனையே இல்லை அய்யா.. என் அத்தங்கா உசிரைக் கொடுத்து நடிச்சிருக்கா அது உம்ம கண்ணுலே படலியா?”

பந்துலுவுக்குக் கோபம் வந்து இதுவரை பார்த்ததில்லை. காது மடல் குண்டூர் மிளகாய் போல சிவந்து வந்தது. பின்பலகை நீக்கிய மண்டை வால்வ் ரேடியோ போல காட்சி அளித்தார் அவர்.

”உங்க அத்தங்கா மாதிரி வருமா? யார் சார் தசாபதியிலே அந்த பொண்ணு?”

”நாசமாப் போச்சு.. ஹீரோயினே அவதான்.. தெலக்ஸ் புவனா”.

என் கண்ணுக்குள் புவனா திரும்ப ஆட ஆரம்பித்து மனதில் எல்லா அறைகளிலும் நுழைய ரத்னா தன் இடத்தில் கதவை சத்தமெழ அடைத்துக் கொண்டு உறங்கப் போனாள். இருக்க இடம் பத்தாமல் தெலக்ஸ் புவனா பந்துலு மனம், வீரையா இன்னும் குடித்தனம் விடாத வெற்று மன இடம் என்று ஆக்கிரமிக்க யத்தனித்தாள்.

FROM my next novel RAMOJIUM – DASAPATHI chapter

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன