என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – தெலக்ஸ் புவனா 1942

”சார், புவனா உங்க அத்தங்கா காருவா?”

”பின்னே இல்லியா?”

”சார், கண்ணே பட்டுடும்.. அதான் முன்னாடி சொல்லல்லே.. புவனாவை பார்க்க இன்னும் நூறு தடவை தசாபதி பார்ப்பேன்..”

நான் புவனா தாசனாக நெக்குருகி நின்றேன்.

பந்துலு சந்தோஷமடைந்து பெருந்தெய்வத்தின் ஆராதகனான சிறு தெய்வமாக வாய் மலர்ந்தார் –

”உம்மை ஒரு தடவை அத்தங்கா வீட்டுக்குக் கூட்டிப் போறேன்..”

நான் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவரைத் தொழவோ புவனாவை அவரில் கண்டு முத்தமிட்டு அணைக்கவோ செய்யாமல் நன்றி சொல்லி ஆபீஸ் வாசலுக்கு வந்தேன். ட்ராம் எனக்கென வந்ததுபோல் நின்றது

சாயந்திர வெய்யில் மஞ்சள் பூச எங்கள் தெரு அழகாகத் தெரிந்தது. இதற்கு முன்னால் இத்தனை அழகாகத் தெரிந்தது ரத்னா என்னைக் கல்யாணம் செய்துகொண்டு குதிரை வண்டியில் இங்கே வந்து இறங்கிய மாலை நேரத்தில் தான். புரசைவாக்கமே கூடி வரவேற்ற மாதிரி தெருவில் உற்சாகம்.

தெரு பரபரப்பாக இருந்த மாலை நேரம். மேற்கிலிருந்து இளம் பெண்கள் ஓரிருவராக கையில் சுருட்டிப் பிடித்த வெள்ளைக் காகிதங்களோடு அன்னநடை நடந்து வந்தார்கள். கிழக்கிலிருந்து மேற்காக, மீசை அரும்ப ஆரம்பித்த, அரும்பிய பையன்கள் பேப்பரோடு நடந்து போனார்கள்.

ராமய்யங்கார் டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுபாங்கி அம்மாள் வீட்டுக்கு எதிரே வந்ததிலிருந்து இந்தக் கூட்டம் குறைவதே இல்லை.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி வந்தவர்கள் வக்கீல் குமாஸ்தா காகர்லா பக்தவத்சலத்தின் இரட்டையர்களான புத்ரிகள். வரும்போதே என்ன அவசரமோ சிரிப்போடு கடக்கும்போது அவர்கள் பிடித்திருந்த காகிதங்களில் இருந்து ஒன்று நழுவி விழுந்தது.

காற்றில் அது பறந்துபோக முகத்தில் ஏமாற்றத்தோடு, ”ராமா அண்ணா ரத்னாக்கா இன்னிக்கு என்ன டிபன் செஞ்சிருக்காம்? கமகமன்னு வெங்காய வாடை இங்கே வரைக்கும் வருதே” என்று சொல்லிப் போனார்கள்.

நான் அந்தக் காகிதத்தைப் பாய்ந்து எடுத்து நிமிர்ந்தபோது இடந்தலை மிருதங்க வித்வான் வேலப்ப நாயக்கர் மருமகன்கள் மேல் மோதிக் கொண்டேன். அவர்கள் எனக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாரி சார் என்று ஒரே நேரத்தில் சொன்ன அவர்கள் முகத்திலும் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்ததைக் கவனிக்கத் தவறவில்லை.

கையில் பிடித்த பேப்பரைப் பார்த்தேன். ’The quick brown fox jumps over the lazy dog’ என்று இம்போசிஷன் எழுதின மாதிரி டைப் அடித்திருந்த காகிதம் அது. ரெண்டு பக்கத்திலும் அந்த நரி சோம்பேறி நாய் மேல் பாய்ந்து கொண்டிருந்தது தான் டைப்ரைட்டிங் என்றால் நான் நரி மேய்க்கக் கற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஏதோ சொல்ல மனதிலிருந்து எட்டிப் பார்த்த தெலக்ஸ் புவனாவை அவளுடைய அறைக்குள் வைத்துப் பூட்டினேன். மனமெல்லாம் இப்போது ரத்னா தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன