ராமோஜியம் நாவலில் இருந்து – The quick brown fox jumps over the lazy dog

ரத்னாவிடம், ஏதோ சாதனை செய்த மாதிரி, கையில் பிடித்திருந்த காகிதத்தை நீட்டினேன்.

“இது எதுக்கு எனக்கு டைப் அடித்த காகிதம்? தெலக்ஸ் புவனாவை வச்சுக்க என் சம்மதம் கேக்கறீங்களா?” என்று கேட்கவில்லை. என் சிரிப்பைப் பார்த்து அவளும் சிரித்தாள். ”தெருவிலே கிடக்கிற காகிதத்தை எல்லாம் ஏ ஆர் பி வார்டன் பொறுக்கி எடுக்கணுமா என்ன?” என்றாள்.

”சாப்பிட என்ன பண்ணியிருக்கே அன்பே, வயிறு இரையுது” என முறையிட்டேன். உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியுமாம்.

அவள் சொல்லி முடிக்கும் முன் கை கூடக் கழுவி வராமல் சமையல்கட்டு சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்து, அவசரமாக ஓடிக் கொண்டிருந்த எறும்பைப் போகவிட்டு ரத்னாவை இழுத்துத் தரையில் சாய்த்து முத்தமிட்டேன்.

ஊறுகாய் ஜாடிகள் பார்த்துக் கொண்டிருக்க தரையில் உருண்டோம் ஒரு நிமிடம். நேரம் காலமே கிடையாதா என்று தப்பி எழுந்து, தலைமுடியை நேர்த்தியாக ஒதுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள் ரத்னா. நான் எதிர்பாராத விதமாக என்னை வாரி எடுத்து மடியில் போட்டுக்கொண்டு முகம் முழுவதும் முத்தமிட்டாள் அவள். இன்னும் மயங்கிக் கிடந்தால் ராச்சாப்பாடே இங்கே ஆகிவிடலாம் என்று தோன்ற நான் அவள் தோளைப் பிடித்தபடி எழுந்து பின்னால் போனேன்.

கை அலம்பி வந்தபோது அவள் மாடப்புரையில் வைத்த சந்தனப் பேழையிலிருந்து எடுத்த சிமிட்டா பட்டணம் பொடியை ஆழ முகர்ந்து புத்துணர்ச்சி பெற்று நின்றாள்.

வேகமான நரி துரத்தும் சோம்பேறி நாயின் காகிதமூலம் சொன்னேன்.

”உங்க பின்னாடி மிருதங்க ரெட்டையர்கள் வந்தாங்களா?” நேரே பார்த்த மாதிரி கேட்டாள் ரத்னா.

”எப்படி தெரியும் உனக்கு?”.

”அவங்க லவ் பண்றாங்க”.

”யாரை யார்?”.

”ஒரு பொண்ணை ஒரு ஆண்… ரெண்டு ஜோடி இருக்கு அங்கே” என்றாள் நமுட்டுச் சிரிப்போடு. நானும் சிரித்தபடி ஒரு உப்புமா குழக்கட்டையை அவளுக்கு ஊட்டி பாதியில் விண்டு வாயில் போட்டுக் கொண்டேன்.

“அந்த நரி பாயற சோம்பேறி நாய் பத்தி காகிதத்திலே மாஞ்சு மாஞ்சு டைப் அடிச்சு வச்சிருக்கறது என்ன ரகசியமான காதல் சங்கேதமா?”

“அய்யே, ஐயங்கார் இன்ஸ்டிட்யூட்லே டைப் அடிச்சா லவ் லெட்டர் அனுப்புவாங்க? அந்த வாக்கியத்திலே ஏயிலே இருந்து இஜட் வரை இருபத்தாறு இங்க்லீஷ் எழுத்தும் வர்றதாலே எல்லா எழுத்துக்கும் விரல் பயிற்சி.. தெரியுதா? கையை எடுங்க.. நான் டைப் ரைட்டர் இல்லே”

”இதென்ன உப்புமா குழக்கட்டை தித்திப்பா இருக்கு?” என்று விசாரித்தேன்.

”சும்மா புருடா எல்லாம் விட வேணாம்”, என்றாள் ரத்னா.

“அப்போ, நீ புருடா இல்லாத சமாச்சாரம் சொல்லு”.

“வேலப்ப நாயக்கர் கோழி முட்டை மொத்த விற்பனை காண்ட்ராக்ட் எடுத்திருக்காராம்.. சுபாம்மா சொல்லிச்சு.. தட்டித் தட்டி மிருதங்கம் வாசிச்சு ஒரு வருமானம், முட்டை வித்து இன்னொண்ணு..” ரத்னா தகவல் அறிவித்தாள்.

நரி – நாய் டைப் அடித்த காகிதத்தை என் கைப்பையில் வைத்தேன். அந்தப் பெண்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது அந்தப் பையன்களிடம்.

excerpt from RAMOJIUM novel – Deluxe Bhuvana 1942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன