காபி எடுத்து வந்தபோது ”உடனே கிளம்பு, பார்க் போகலாம்” என்றேன். போகலாமே என்றாள் ரத்னா, முகம் மலர்ந்து.
அவள் காலையில் நான் நடந்து கொண்டதை மறந்து எப்போதும் போல் ஆகியிருந்தாள்.
”இந்த டைப் இன்ஸ்டிட்யூட் பத்தி எதிர்வீட்டு விலு என்ன சொன்னா தெரியுமா?”
விலுவாமே. ஜாக்கிரதையா இருக்கணும். இவ சொல்றாளேன்னு நானும் விலுன்னு சொன்னா, நேர்லே போய் கொஞ்சுங்க என்று படாரென்று முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட்டுப் போயே போய் விடுவாள்.
”என்ன சொன்னாங்க அந்த பரதேவதை விலாசினியம்மா?”
இது பரவாயில்லை, மரியாதை, கிண்டல் எல்லாம் உள்ளது. ரத்னாவுக்கு ரசிக்கும்.
”பகல் மூணு டூ நாலு பேட்ச், பொண்ணுங்க மட்டும் தான் டைப் பழக. நாலு மணிக்கு பசங்க கூட்டம் அலை மோதும். ஏன் தெரியுமான்னு கேட்டா விலு”.
”ஏனாம்?”. நான் பின்பாட்டு பாடினேன்.
”பொண்ணுங்க ஒரு மணி நேரம் டைப் பழகிட்டு ஸ்டூலை விட்டு எழுந்து போன உடனே அதுலே உக்கார்ற பசங்களுக்கு, அந்த ஸ்டூல்லே பொண்ணுங்களோட உடம்புச்சூடு மிச்சம் இருக்குமே, அதை அனுபவிக்கறது சின்னச் சின்ன சந்தோஷமாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டூல்…”.
எனக்கே தெரியாத விஷயம் இது. பசங்க என்ன என்ன எல்லாம் கண்டுபிடிக்கிறான்கள். சூடு சமாசாரமாக விஷய ஞானம் கைவரப் பெற்ற பிறகு கொஞ்சம் தைரியம் வந்து தொடர்ந்து கேட்டேன்.
“எனக்கு ஒரு சந்தேகம், செல்லம்மா”
“என்னப்பா, என் ராஜா?”
”என்னன்னா எப்படி அந்த மிருதங்க வீட்டு ரெட்டையர்களும் இந்த குமாஸ்தா காகர்லா பக்தவத்சலம் வீட்டு ரெட்டைப் பொண்ணுங்களும் அவங்க அவங்க ஜதையை கண்டு பிடிப்பாங்க?”.
”எதுக்கு கண்டுபிடிக்கணும்?”.
ஓவென்று விஷமப் பார்வையோடு சிரித்து அவள் ஓடினாள். பத்தே நிமிடத்தில் பளிச் என்று கைத்தறிப் புடவையில் கிராமத்து தேவதையாகத் திரும்பி வந்தாள்.