ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – 1942 இன்னொரு அத்தியாயம்

”இன்னிக்கு ஏ ஆர் பி டியூட்டி இல்லைதானே?”

எங்கே நான் மறந்துவிட்டேனோ என்று நினைவு படுத்திக் கேட்டாள். இல்லை என்றேன். இந்த வாரத்துக்கான நாலு இரவு ரோந்தும் நான் முடித்திருக்கிறேன்.

பார்க் போய் விட்டு வரும்போது சுபாங்கி அம்மாள் வீட்டு வாசலில் இருந்து ரத்னாவைப் பார்த்துக் கேட்டாள் –

“ஏண்டி பொண்ணே, ரேஷன்லே உளுத்தம்பருப்பு நாளைக்கு போடறாங்களாம். போகலாமா?”

ஏதோ ரேஷனில் ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் வெகுமதியாகக் கொடுப்பது போல் இரண்டு பெண்மணிகளும் வெகுவாக சந்தோஷப்பட்டார்கள்.

”வீரப்பன் நாளை மறுநாள் வெறகு வரும்னார்.. நேரே அவங்க தொட்டியிலே தான் வருதாம் .. அரிவாளோட யாரையாவது அனுப்பி வைக்க பாரு”.

”தோட்டக்காரரை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கு அம்மா”

‘தம்பிக்கு தான் இதெல்லாம் கவலை இல்லே.. தேசக் கவலை, மாகாணக் கவலை, ஊர்க் கவலை இப்படித்தான் எப்பவும்’

சுபாங்கி அம்மாள் சிரித்துக்கொண்டே என்னை தூக்கித் தூர எறிந்துவிட, நான் பேச்சை ரசிப்பதாகத் தலையை ஆட்டினேன்.

”பாருங்க, இங்கே உளுத்தம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் நாம அல்லாடறோம் .. எங்கேடா கிடைக்கும் எம்புட்டு கிடைக்கும்னு ஓடிக்கிட்டு இருக்கோம். சில பேர் சொல்றதைக் கேட்டா பயமா இருக்கு. இனி இட்லி தோசை செய்யறதுக்கும், சாப்பிடறதுக்குமே தடை வந்துடுமாமே.. விறகுக்கு ரேஷன்.. அதையும் பதுக்கறானுங்க.. அடுத்து என்ன அடுப்புக் கரியா…?”

ரத்னா அவசரமாகக் குறுக்கே புகுந்து, ”இட்லி தின்னாதேன்னு ஒரு நாள் சர்க்கார் சொன்னா அடுத்த நாள் இங்க்லாந்துக்கு இவங்க அத்தனை பேரையும் திரும்ப கப்பலேத்தி அனுப்பிச்சுடுவோம்” என்று வீரம் மொழிந்தாள்.

”சும்மா இரு, அதெல்லாம் வேணாம்”, என்று அசல் கவர்மெண்ட் ஊழியனாகச் சொன்னேன். நாளாக நாளாக ஆபீஸ், ப்ரமோஷன், இன்க்ரீமெண்ட் என்று யுத்தகால சூழ்நிலையில் அடிபட்டு அடிபட்டு சர்க்கார் விரோதம் என்றால் ஒரு மைல் அகன்று ஓடச் சொல்லி உடம்பு கெஞ்சுகிறது. மனம் போ போ என்று கடந்து போகச் சொல்கிறது.

ரத்னா அப்படி இல்லை. காந்தி, காங்கிரஸ் ஆதரவை அவள் மறைத்துக் கொள்ள அவளுக்குத் தேவையே வரவில்லை. அடுத்த காங்கிரஸ் மகாநாட்டுக்குக் கதர்ப்புடவை உடுத்தி, காந்தி குல்லா வைத்து, சற்றே சரிந்த குழலாட, பிரசங்கம் செய்யப் போனாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

இந்த மாதம் எட்டாம் தேதி பம்பாயில் காங்கிரஸ் மகாநாடு கூட்டி ஆகஸ்ட் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், க்விட் இந்தியா போராட்டம் என்று நாடு முழுக்க காந்தி கட்டளைப்படி போராட வந்தபோது ரத்னா நியூஸ்பேப்பர் படித்து விட்டுச் சொன்னாள் –

”நீங்க ஆபீஸ் போறதுக்கு இடைஞ்சலாகக் கூடாதுனு தான் போகலே.. இல்லேன்னா பம்பாய் மகாநாட்டுலே காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருப்பேன்”, என்றாள் என்னிடம் அன்றைக்கு.

” பருப்பு, மிளகாய் வத்தல் லைசன்ஸ் மண்டிக்காரர் தங்கப்பன் முதலாளி சளைக்காம பதுக்கிட்டு இருக்காரே தெரியுமா?” சுபாங்கி அம்மாள் காகர்லா பக்தவத்சலம் வீட்டுப் பக்கம் காட்டியபடி ரகசியம் பேசினாள்.

”குமாஸ்தா ஏன் மிளகாய் வத்தலை பதுக்கணும்?” நான் விசாரித்தேன்.

குமாஸ்தா வீட்டுக்கு அடுத்த வீடு தங்கப்பன் முதலாளியின் சின்ன மாளிகை என்பதை ரத்னா எனக்கு ஞாபகப் படுத்தினாள்.

எனக்கு ஊர் உலகமே தெரியாது என்று உறுதிப்பட சுபாங்கி அம்மாள் ரத்னாவைப் பார்த்துச் சொன்னாள் –

”ராத்திரி வரைக்கும் பருப்பு மூட்டைங்களை வீட்டுலே வச்சுட்டு ராத்திரியிலே வேறே எங்கேயோ எடுத்துப் போயிடறார்.. அது ஜாஸ்தி விலை படிஞ்சு விற்க ப்ளாக் மார்க்கெட்டுக்குப் போவுது. நீங்க தான் தம்பி இதை என்னான்னு கேக்கணும்”.

சுபாங்கி அம்மாளுக்கு இந்த ஏஆர்பி வார்டன் மேல் இருந்த நம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது. உணவுப் பொருள் கடத்தலையும் கருப்புச் சந்தையையும் வார்டு அளவில் நான் ஒழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது புரிந்தது. அமைதியாக நடந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன