ராமோஜியம் நாவல் – தெலக்ஸ் புவனா வந்த இன்னொரு 1942 அத்தியாயத்திலிருந்து

இந்தக் காலம் என்கிற விஷயம் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. சில பொழுது, ஒரு யுகம் போன மாதிரி ஒரு மணி நேரம் மிக மெல்ல ஊர்ந்து போகும். இன்னும் சில நேரம் காலம் முன்னால் போய் சட்டென்று நின்று கொஞ்சம் பின்னால் போய் கண் விழித்துப் பார்ப்பதற்குள் மறுபடி முன்னே போக இதெல்லாம் ஏற்கனவே நடந்ததே என்று குழம்ப வைக்கும். சில பொழுது இமை நேரத்தில் ஒரு மாசம் போய் விடும். அது போனது கூடத் தெரியாமல் ஏதாவது ஒன்றில் ஈடுபாட்டோடு மூழ்கியிருப்போம்.

அடுத்த ஒரு வாரம் ஆபீசிலும் வீட்டிலும் அப்படித்தான் சொடக்குப் போடுவதற்குள் கடந்து போனது. ரத்னா சொடக்குப் போட மாட்டாள். அவளுக்கு வராது என்பதோடு அவள் குடும்ப நம்பிக்கை அல்லது இச்சல்கரஞ்சி நம்பிக்கைப்படி சொடக்கு போட்டால் துர்தேவதைகள் சுற்றுப்பாட்டில் இருந்து பார்த்து சத்தம் கேட்க எங்கே எங்கே என்று குவிந்து விடுமாம்.

நானும் எத்தனையோ சொடக்கு சின்ன வயசில் இருந்து, இந்த இருபத்தேழு வருஷத்தில் போட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் துர்தேவதைகள் வந்திருக்குமானால் என்னைச் சுற்றி நனைந்து வாடையடிக்கும் அழுக்கு தார்பாலின் சிறகுகளோடும், சுத்தி செய்யாமல் பல் காரை அப்பிய வாச்சி வாச்சியான பழுப்புப் பற்களோடும் ஒரு கூட்டமே இருக்குமே.

இதைச் சொன்னபோது ரத்னா என் வாயை அவசரமாகப் பொத்தினாள். இப்படியெல்லாம் சொன்னால் அஸ்து தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ஆசிர்வதித்து விடுமாம். இந்த சிறிய வீட்டில் நானும் ரத்னாவும் போக இப்படி ஆசிர்வதிக்கும் தேவதைகளும் இருந்தால் இடமும் போதாமல், சத்தமும் கேட்டபடி இருக்கும். அது வேறே சமாச்சாரம்.

சிவராத்திரி, வரலட்சுமி விரதம், ஆவணி அவிட்டம், ஓணம் என்று பண்டிகைகள் ஒவ்வொன்றாகக் கடந்து போக, ஆபீசிலும் அவ்வளவாக வேலைப் பளு இல்லாமல் போன வாரங்கள் அவை.

திரும்பிப் பார்ப்பதற்குள் ஆகஸ்ட் முடிந்து மழையோடு செப்டம்பரும் வந்து சேர்ந்தது. முதல் வியாழக்கிழமை பென்ஷன் எல்லாம் கொடுத்துக் கையெழுத்து வாங்கி, வெவ்வேறு டிபார்ட்மெண்ட்களில் செலவுக் கணக்கு எழுதி நான் கொடுத்த தொகையை வாங்கி பைசா சுத்தமாக வரவு வைத்து ஸ்டேட்மெண்டும் அனுப்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம். தெலக்ஸ் மனதின் அறைக்கு உள்ளே இருந்து கதவைத் தட்டி வெளியே வரலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தது உள்செவிக்குள் கேட்டது. சொல்றேன் என்று அடக்கியபோது, பந்துலு வேகமாக என் சீட்டுக்கு வந்தார்.

”ஓய் ராமோஜி, நாலு மணி ஆகப் போறதே கிளம்பலியா?”.

”இல்லே சார், தினம் சீக்கிரம் போய் என்ன பண்றது? இன்னிக்கு ரத்னா வேறே கோடி வீட்டு அம்மாகூட பேரகன் தியேட்டர்லே மேட்னி ஷோ தசாபதி பார்க்க போயிருக்கா”.

”ஏன் நீர் அவங்களை ஏற்கனவே கூட்டிப் போகலியா?வேறே யாரை பின்னே?”.

அவர் ராகம் இழுத்ததில் எதிர் வீட்டு விலாசினி டைப்பிஸ்ட் மனதின் இன்னொரு அறைக்குள் இருந்து புன்சிரிப்புப் பொழிந்தது தெரிந்தது.

போன வாரம் ஒருநாள் வீட்டுக்குப் போகும்போது வீரையா தன் மச்சினி என்று கோட்டைக்குள் வாரிப் பெருக்கிப் போன ஓர் இளம் தெலுங்குப் பெண்ணைப் பெருமையோடு அறிமுகப்படுத்தினான். கறுப்பு மின்னல் அவள். பெயர் தான் கொஞ்சம் ராட்சசத்தனமாகத் தெரிந்தது. கம்சலையாம். தளுக்கும் குலுக்குமாக கம்சலையும் வெற்றிலை போட்டுக்கொண்டு என் மனதில் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் இங்கே இருப்பது தெரிந்தால் வீரையா என்னைக் கொன்றே போடுவான்.

”இல்லே சார், ரத்னா அன்னிக்கு சினிமாவுக்கு என்னோடதான் வந்தா. சரியாப் பார்க்க முடியலியாம்”.

எப்படிப் பார்க்கறது? நான் தான் தெலக்ஸ் புவனா பெயரைச் சொல்லி சதா அவளை நச்சரித்துக் கொண்டிருந்தேனே.

மனதில அவளுக்கும் ஒரு இடம், மற்ற அறைகளை விடப் பெரியதாக, ரொம்ப காற்றோட்டம் உள்ளதாக, பளிங்குத் தரை, மதுரை நாயக்கர் மஹால் போல வழவழத்த சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், சிம்மாசனம் போல பெரிய இருக்கைகள், பூத்தூவிய படுக்கை என்று ஏற்பாடு செய்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மனதின் உள்ளே வந்து போகக்கூடும். ரத்னா நிரந்தரமாக அங்கே வசிக்கக் கூடியவளாச்சே. ரெண்டு பேரும் தொண்டு கிழங்களானாலும் அவள் அங்கே.

சொல்லுங்க சார், என்ன செய்யணும்? வேறே லெட்ஜர் டாலி பண்ணனுமா? செய்யலாம் தான். வீட்டுக்குப் போய் சும்மா கூரையைப் பார்த்துக்கொண்டு தனியாக இருப்பது கொடுமை ஆச்சே. ஆபீஸ் ஜன்னல் வழியே ஜிலுஜிலு என்று கடல் காற்று வீசுவதை அனுபவித்துக் கொண்டு இன்னொரு டீ காண்டீனில் சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் போக்கி விட்டால் வெள்ளிக்கிழமை சாயந்திர ஆபீஸ் பூஜை. இன்றைக்கு ஜாங்கிரி பிரசாதம். தேங்காய்ப் பத்தையும் வெல்லமும் வேறே, சின்னப்பையன் மாதிரி ரசித்துத் தின்ற பிறகு வீடு போகத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் பந்துலு சார் வேலை சொன்னால் பார்க்கத் தடையேதும் இல்லை.

”ஓய் சும்மா தானே இருக்கீர்? கூட வாருமே.. பேச்சுத்துணையாச்சு.. உமக்கும் பொழுது போகும்.. அந்தப் பொண்ணு போன வாரம் என் ஒய்ப் போனபோது மாகாணிக்கிழங்கே கிடைக்கறதே இல்லே. ஊறுகாய் சாப்பிடணும்னு ஆசைன்னாளாம். இவ ஓட்ட ஓட்டமா ஓடி வந்து கொத்தவால் சாவடியிலே மலிவா பத்து படி அளந்து வாங்கி, கூலியை ஏற்பாடு பண்ணி மன இண்டிக்கு கொண்டு வந்துட்டா. வீட்டு உபயோகத்துக்கும் தெருவிலே தரவும் அதுலே ரெண்டு படி எடுத்தாச்சு. உமக்கு வேணும்னா சொல்லும் நாளைக்கு எடுத்துண்டு வரேன். நல்ல வேளை நீர் இன்னும் வீட்டுக்கு கிளம்பலே. வாருமே, ஒரு நடை போய் பாத்துட்டு வருவோம்”.

எனக்கு தலையும் புரியவில்லை. வாலும் அப்படியே. நான் நாலு மணிக்கு வீடு போவதற்கும், மாகாணிக் கிழங்கு ஊறுகாய்க்கும், யாரையோ பந்துலு சார் போய்ப் பார்ப்பதற்கும்.. சட்டென்று பொறி தட்டியது. பந்துலு சாருக்கு அத்தங்கா என்ற அத்தை மகள் உறவாச்சே தெலக்ஸ்.

கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து ஆபீஸ் மேஜை ஒன்று விடாமல் ஏறி இறங்கிப் பறந்து தெலக்ஸ் அடுத்த நிமிடம் நினைப்பு எல்லாமாகிப் போனாள். எதிர்பார்த்து ஏங்கியிருந்த சந்தர்ப்பம் இது. ஆபீஸ் பூஜை பிரசாதம் ஜாங்கிரியும் தேங்காய்ப் பத்தையும் வாங்கித் தின்னாவிட்டால் போகுது.

”வரேன் சார், நீங்க ஏதாவது கேட்டு, மாட்டேன்னு சொல்லியிருக்கேனா?”.

தெலக்ஸ் நடனமாடியபடியே அருகே வந்து கண்ணடித்தபோது சூப்பரிண்டெண்டைக் கட்டிக்கொண்டு ஆடலாம் போல உற்சாகம் பீரிட்டது.

”சரி இன்னும் பதினைந்து நிமிஷத்துலே புறப்படறோம். அந்தப் பேனா வேணாம். அதான் ஜோபியிலே செருகி வச்சிருக்கீரே.. கசியறது போல”.

நான் விரல்களை உற்றுப் பார்த்தேன். இங்க் பூசி நீலமாக இருந்த குமாஸ்தா விரல்கள் அவை.

கசியத் தொடங்கிய ப்ளூ பேர்ட் ஃபவுண்டன் பேனாவை மேஜைக்குள் வைத்துப் பூட்டினேன். ராசியான பேனா. அதை சட்டையில் வைத்து எங்காவது போனால் ஆக வேண்டிய காரியம் கட்டாயம் ஆகும். ஆபீசில் முதல் நாள் அந்தப் பேனோவோடு தான் வந்து சேர்ந்தேன். இருக்கட்டும், புளூ பேர்ட் பேனா இல்லாமலேயே போகலாம் இப்போது. இது தெலக்ஸ் நேரம்.

அடித்துப் பிடித்து பாத்ரூமுக்கு ஓடினேன். அங்கே சொட்டுச் சொட்டாகத் தான் வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் வந்தது. சோப்புத் துண்டையும் காணோம். கைக்குட்டையைக் குழாய் துப்பிய ஈரத்தில் நனைத்து, எலும்பு தெரிகிறவரை சுழற்றிச் சுழற்றித் துடைத்து, கையை ஏதோ சுத்தம் செய்ய முயன்றேன். போவேனா என்கிறது மைக்கறை. போகலேன்னா இருந்து தொலை, சனியனே.

மற்றபடி வேலையில் எப்போதுமே நான் கை சுத்தம் தான் என்பது பந்துலு சாருக்குத் தெரியும். தெரியாமலா ஒரு படி இறங்கி வந்து பழகுகிறார்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன