ராமோஜியம் – நாவலிலிருந்து – இன்னொரு 1942ம் ஆண்டு அத்தியாயம்

நாங்கள் பத்தே நிமிடத்தில் கிளம்பினோம். பந்துலு சார் தன் ஜோல்னாப் பையையும் நான் என்னுடையதையும் எடுத்து மாட்டிக் கொண்டோம்.

சாப்பாட்டு பாத்திரம்? எதுக்கு இங்கேயே இருக்கட்டும். பெரிய ஸ்டார் வீட்டுக்கு எச்சில் பட்டு கழுவாத அலுமினியப் பாத்திரத்தோடா போவது?

பந்துலு சார் முன்னேற்பாடாக இன்று எலுமிச்சை சாதம் இலையில் பார்சலாகக் கட்டி நியூஸ் பேப்பரில் பொதிந்து கொண்டு வந்திருந்தார். அவருக்கு அத்தங்காளைப் பார்க்கப் போவது ஏற்கனவே தெரியும். எனக்கும் தெரிந்திருந்தால் அதேபடி செய்திருப்பேன். போகட்டும், புகார் செய்ய நேரமில்லை இது.

எலக்ட்ரிக் ட்ரெயின் கோட்டை ஸ்டேஷனில் பிடித்து மாம்பலம் போகலாம் என்றார் பந்துலு சார். எங்கே அவங்க ஜாகை என்று கேட்டேன்.

”புது மாம்பலத்துலே. புது மாம்பலம் போயிருக்கீர் இல்லே?” புது மாம்பலம் என்ன சந்திரமண்டலத்திலா இருக்கு? மெட்றாஸுக்குள்ளே தானே.

“போயிருக்கேன் சார், ஸ்டேஷன் பக்கமா, அப்புறம் பனகல் பார்க்”.

“இது பனகல் பார்க்குக்கு அடுத்து நாராயணசாமி செட்டி தெருவிலே”.

அவர் கையில் கித்தான் பை. தூக்க முடியாமல் தூக்கி வந்த அது கம்மென்று கதம்ப வாடை கிளப்பியது. மண்வாசனை, மண்புழு வாடை, மழைக்காலத்தில் சமுத்திர வாடை, சேறான பாதையில் மெலிசான தாரையாக மழை பெய்யும்போது ஏற்படும் கந்தம், இன்னும் கற்பனை செய்வது எல்லாம் அப்படியே வாடையாக அடிக்கிறது. மாகாணிக் கிழங்கு.

”நான் எடுத்துட்டு வரேன் சார்”.

கையில் வாங்கிக் கொண்டேன். கையையும் தோளையும் ஒருசேரப் பிடித்து இழுக்கிற சுமை அது. ஐந்து படிக்குக் குறையாமல் இருக்கும்.

தெலக்ஸுக்குத் தர என்று நினைத்தால் சுமை சுகமானது. சுமந்து போகவும், கோவில் திருவிழாவில் புஷ்பப் பல்லக்கு சுமந்து போவது போல் ஆனந்தம்.

எலக்ட்ரிக் ட்ரெயினில் கூட்டம் இல்லாததால் குளிக்காத குழந்தை மாதிரி இருந்த கித்தான் பையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.

“அத்தங்காவை பார்க்கப் போறபோது அவங்க வீட்டிலே இருப்பாங்கன்னு எப்படி சார் நிச்சயம்? ஷூட்டிங் இருந்துச்சுன்னா?”

”அது என் பெண்டாட்டியே அத்தங்கா கிட்டே பேசிட்டா. இன்னிக்கு முழுக்க நம்ம ஆபீஸ் மாதிரி சும்மா நாற்காலியைத் தேச்சுண்டு இருக்கறபடி நோ ஷூட்டிங்காம்”.

அவர் ஆபீசில் பெஞ்சைத் தேய்த்து வெட்டியாகப் புல் வெட்டிக் கொண்டிருந்த நேரக் கணக்கில் என்னோடு தன்னையும் சேர்த்துக் கொண்டதால் நான் உள்ளபடிக்கு மும்முரமாக வேலை பார்த்ததைச் சொல்லவில்லை. அந்த லெட்ஜர்கள் எல்லாம் அவருக்கு நாளை இரண்டாம் கையெழுத்துக்குப் போகும். அப்போது தெரியும். இது தெலக்ஸ் நேரம்.

பந்துலு சாரோடு மாம்பலம் ஸ்டேஷன் வந்தேன். இங்கிருந்து நீள நடந்தால் பதினைந்து நிமிடம் கழித்து பனகல் பார்க் வரும். அதுக்கு அருகே எங்கேயோ தெலக்ஸ் மாளிகை.

ரிக்ஷாவில் போயிடலாம் என்றார் பந்துலு சார். எட்டணா கேட்டான் கை ரிக்ஷாக்காரன். அடுத்த பத்து நிமிடம், கல்பகோடி யுகமாகத் தெரிய அவர் பேரம் பேசி அதை ஏழணாவாக்கினார்.

உஸ்மான் ரோடில் கை ரிக்ஷா இழுக்கப்பட்டு ஓடும்போது எனக்கு இறங்கி ரிக்ஷாவோடு நடக்கலாம் போல் இருந்தது. இந்தக் கை ரிக்ஷா எப்போது ஒழியுமோ. பந்துலு சொன்னால் கேட்க மாட்டார். இல்லாவிட்டால் நடந்தே வந்திருப்போம்.

சைக்கிளில் சவாரி செய்கிறவர்கள், நடந்து போகிறவர்கள், அபூர்வமாக மோட்டார் விட்டுப் போய்க் கொண்டிருந்தவர்கள் என்று ரிக்ஷா பக்கத்தில் வர, மாகாணிக் கிழங்கு வாடையில் கிறங்கிய அபிமானிகள் ஆஹா என்று மூக்கு விடைத்து தீர்க்கமாக முகர்ந்தார்கள். பிடிக்காதவர்கள் மூக்கை சுருக்கி கடந்து போகிற வரை மூச்சை இழுத்துப் பிடித்து பிராணாயாமம் செய்தபடி போனார்கள்.

“கருவாட்டுக் கடைக்காரங்க போலிருக்கு” என்று ஒருத்தன் பின்னால் சொன்னது காதில் கேட்டது. கழுத்தில் ருத்ராட்சம், காதில் கடுக்கன், சின்னஞ்சிறியதாகப் பின்னந்தலை மத்தியில் மிகச் சிறு உச்சிக்குடுமி என்று இருந்த பந்துலு சாரை கருவாட்டுக் கடைக்காரராகக் கற்பனை செய்யக் கஷ்டப்பட்டேன்.

”இங்கேதான், நில்லுப்பா”.

அவர் சொல்ல மெல்ல ஜாக்கிரதையாக விழுத்தாட்டாமல் ரிக்ஷாவை தரை நோக்கிச் சாய்த்து இறங்க உதவியாக நின்றான் ரிக்ஷாக்காரன். பந்துலு சார் குடுகுடுவென்று எதிரே ஒரு பங்களா போர்ட்டிகோவுக்கு ஓட, நான் ரிக்ஷாக்காரனுக்கு ஒரு முழு ரூபாயைக் கொடுத்து அவனுடைய நல்வாழ்த்தோடு தெலக்ஸைப் பார்க்க மாகாணிக்கிழங்கு மூட்டையோடு நடந்தேன்.

“அந்தர் ஜானா மனா ஹ. சலோ சலோ பாஹர் சலோ”

கூர்க்கா குறுக்கே புகுந்து ஹிந்தியில் கர்ஜிக்க, ரெண்.டடி முன்னால் போயிருந்த பந்துலு சாரை ஒரு அல்சேஷன் நாயும், கூடவே ஒரு கோம்பை நாயும் வாடா மச்சான் என்று கூப்பிட்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தன.

அம்மா நஹி அம்மா நஹி என்று கூர்க்கா சொன்னான். ஆமா என்றன கட்டிப் போட்டிருந்த கோம்பையும் அல்சேஷனும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன