”அம்மாவுக்கு சொந்தக்காரங்க ஹை, தும் ஜாவ். ஜாவ்” என்று பந்துலு ஏதோ ஹிந்தி பேசுகிற பாவனையில் சொல்ல, தும் ஜா என்று அவரைப் பிடித்துத் தள்ள பிரம்போடு முன்னால் வந்தான் அந்த இளம் கூர்க்கா. சூப்பரிண்டெண்ட், அத்தங்கா, மாகாணிக்கிழங்கு இதெல்லாம் அவனுக்கு அனாவசியம் என்பதோடு, பந்துலு சாருக்கு இதையெல்லாம் இந்தியில் சொல்ல வராது என்பதும் புலப்பட்டது.
“க்யா வேர் இஸ் தட் ஓல்ட் கூர்க்கா ஹை?” அவனுக்கு இதுவும் புரியவில்லை. பந்துலு சார் பயனின்றி உள்ளே நோக்கினார்.
நான் மராத்தியும் இந்தியுமாக பாத் சுனியே என்று ஆரம்பிக்க அவன் ஐந்து நிமிடம் கேட்டுவிட்டு, அந்தர் நஹி ஜா சக்தா என்று பழைய பல்லவிக்கே வந்தான். கோம்பை கட்டறுத்து வந்து பந்துலுவைக் குதறி எடுக்கும் முஸ்தீபுகளோடு குரைத்துக் கொண்டிருந்தது. என்னமோ அவர் மேல் அதற்கு ஈடுபாடு ஜாஸ்தி என்று பட்டது. என்னை அது லட்சியமே செய்யவில்லை.
உள்ளே கதவு திறக்கிற சத்தம். வாசலில் மின்னல் வெட்டியது. நான் கையில் மாகாணிக் கிழங்கு இல்லாவிட்டால் கை குவித்து நின்ற இடத்திலேயே தொழுதிருப்பேன். என் கண் முன் றெக்கைகள் இல்லாத தெலக்ஸ். சினிமாவில் பார்த்ததை விட, மேக் அப் இல்லாமல் நூறு மடங்கு அழகாக கதவில் சாய்ந்தபடி நிலைவாசலில் நின்றிருந்தாள்.
”சாரி, அத்திம்பேர், குளிச்சிட்டிருந்தேன். அப்போ தான் உங்களை பார்க்கறேன்னு சொன்னது ஞாபகம் வந்தது”.
தெலக்ஸ் தலையில் கைவைத்து சூபரிண்டெண்ட் ஆசிர்வாதம் செய்தபடி அவள் கூடப் படியேற நான் வாடை அடிக்கும் மூட்டையோடு வாசலிலேயே நின்று ஒரு தடவை இருமினேன்.
தெலக்ஸ் திரும்ப, அவள் பார்வை முழுக்க என்னை நனைத்தது. குளிரக் குளிரக் குளித்து நின்றேன். குளித்து விட்டு வந்த அப்சரஸ். தெலக்ஸ் நீராட தெலக்ஸ் சோப் பூசியிருக்க மாட்டாள். சந்தன வாடை அவளிடமிருந்துதான் புது மாம்பலம் தொடங்கி, பழைய மாம்பலம் வரையான அந்தப் பிரதேசம் முழுக்க அடிக்கிறது. மைசூர் சந்தன சோப்புக்கு நறுமணம் சேர்த்துத் தேய்த்துக் கொண்டிருப்பாள். சோப்பு எதற்கு, கஸ்தூரி மஞ்சள் கலந்த சந்தனப் பொடியை பன்னீரில் குழைத்துப் பூசி மாலை நீராடி வந்திருப்பாள்.
”சார், வாங்க”.
என்னைத் தான் உள்ளே கூப்பிட்டாள் அவள். மின்னல் மல்லிகைப் பூச்செண்டால் தாக்கியது போல் நிலைகுலைந்து நின்றேன். ”ஐ ஆம் ராமோஜி” என்று ஆரம்பித்துக் குடல் ஏறி இறங்க, குரல் தடுமாற ஏதோ பதில் சொன்னேன்.
”என் ஆபீஸ் தோழன், ஜூனியர் அதிகாரி”.
கச்சிதமாக அறிமுகம் செய்து வைத்தார் பந்துலு. தெலக்ஸின் அழகான பல் வரிசை கொடிமின்னல் வெட்டி மறைய, வைத்த கண்ணை எடுக்க முடியாமல் ஒரு புன்சிரிப்பு, ஒரு தடவை எனக்காக மட்டும் மலர்ந்தது.
என் மனசிலிருந்து விடுபட்டு அந்தப் பெரிய வீட்டுக்குள் என்னோடும் மாகாணிக் கிழங்கு மூட்டையோடும் நுழைந்து காற்றில் கலந்தாள் நான் சதா மனதில் சுமக்கும் தெலக்ஸ். பாரமில்லா மனதோடு உள்ளே நுழைந்தேன்.
நானே எதிர்பார்க்காத விதமாகக் கை குலுக்கக் கை நீட்டினாள் தெலக்ஸ்.
“என்ன சார், உங்க் ஆபீஸ்லே சிறுதொழிலா இங்க் உற்பத்தி பண்றீங்களா?”, சிரித்தபடி அவள் கேட்டாள்.
என் கையைப் பார்த்தேன். அஞ்சு விரலிலும் பேனாவிலிருந்து கசிந்த இங்க். மறைத்துக் கொள்ள மறந்து போயிருந்தேன். கையை சுத்தம் செய்து கொள்ள வாஷ் பேசினைத் தேடிச் சுற்றும் முற்றும் பார்த்தேன்.
”வாங்க, பாத்ரூம் உள்ளே இருக்கு”.
என்னை, எல்லா வாசனையும் கூட வர தெலக்ஸ் புவனா உள்ளே கூட்டிப் போனாள். விசாலமான பாத்ரூமில் நிறுத்தி விட்டுத் திரும்பும்போது வெளியிலிருந்து சொன்னாள் –
”கதவு கொஞ்சம் டைட்டா இருக்கும். திறக்க வரல்லேன்னா தட்டுங்க.. நான் வந்து உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கறேன்”.
சொர்க்கம் இப்படித்தான் பாத்ரூமிலும் இருக்கும்.
ஓரளவு சுத்தமான கரங்களோடு நான் வெளியே வந்ததும் கை துடைக்க மரிக்கொழுந்து செண்ட் வாசனையடிக்கும் துவாலை தந்தாள் தெலக்ஸ். விட்டுப்போன கைகுலுக்கலுக்காக மறக்காமல் கை நீட்டினேன். என் விரல்களை நாசுக்காகப் பற்றி அவள் கையசைக்க, பனிச்சாரல் அனுபவப்பட்டது எனக்கு. தெலக்ஸ் புவனா மேல் ஈர்ப்பும் மரியாதையும் வெகுவாக ஏறிக் கொண்டே இருந்தன.
”என்ன சார் ஒரு பெரிய பையை கட்டித் தூக்கிட்டு வந்திருக்கீங்க? என்ன அது?”
தெலக்ஸ் நான் பக்கத்தில் வைத்திருந்த கித்தான் பையைக் காட்டிக் கேட்டாள்.
”சரியாப் போச்சு, ஊருக்கே வாடை தூக்குது” என்று பந்துலு சார் சொல்லியபடி கித்தான் பையை தெலக்ஸ் புவனா பக்கம் நகர்த்தினார். நான் இன்னும் இந்திரலோகத்தில் இருந்தேன். தெலக்ஸ் குலுக்கிய கையை, இங்க் இருந்தாலும் இப்போதைக்கு மறுபடி அலம்பும் உத்தேசம் இல்லை.
”எனக்கு மூக்கு வீக் சார்… டெட்டால் பாட்டில் உடஞ்சு விழுந்து வீடெல்லாம் ஆஸ்பத்திரி வாடை வந்தாக்கூட நான் பாட்டுக்கு உக்காந்து புஸ்தகம் படிச்சிட்டிருப்பேன்” என்றாள் தெலக்ஸ்.
இதற்கு அப்படியா என்று ஆச்சரியப்படுவதா, காமெடியாகப் பார்த்துச் சிரிப்பதா என்று தெரியாமல் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தில் ஒரு மாசு, மரு கிடையாது. ரகசியமாக உள்ளங்கையில் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கனவில்லை. தெலக்ஸ்தான்
“தேங்க்ஸ் அத்திம்பேர். தேங்க்ஸ் ராமோஜி சார்”. அவள் நன்றி சொன்னது மாகாணிக் கிழங்கு கொண்டு வந்ததற்கு என்று சொல்ல வேண்டியதில்லை. என் பெயரை நினைவு வைத்திருப்பதை சந்தோஷமாகக் கவனித்தேன்.