விருந்துக்குப் போனவர்கள் – வெளிவர இருக்கும் ராமோஜியம் நாவலில் இருந்து

உள்ளே இருந்து நடு வயது அம்மையார் ஒருவர், கொஞ்சம் சுபாங்கி அம்மாள் ஜாடையும், அவளைப் போல் மூன்று பேரை ஒரே உடம்பில் அடைத்த பருமனுமாக வந்து ரண்டி ரண்டி என்று வரவேற்க, இந்தியில் இல்லை, தெலுங்கில் என்று மனதில் திடமாகச் சொல்லிக்கொண்டு கைகூப்பினேன். தெலக்ஸ் புவனாவோட சித்தி என்று பந்துலு சார் காதில் சொன்னார்.

கித்தான் பையைப் பிரியத்தோடு தூக்கி பந்துலு சார் சித்திகாருவிடம் கொடுத்தார். அந்த சுந்தரமான வாசனையில் மனம் பறிகொடுத்த மாதிரி ஒரு வினாடி கண் மூடி இருந்துவிட்டு சைட் டேபிள் கீழே எதையோ தேடினாள் சித்திகாரு. அது கிடைத்த சந்தோஷத்தோடு கையை வெளியே எடுக்க, பட்டணம் பொடி அடைத்த சிமிழ். நான் தினசரி வீட்டில் பார்க்கும் லாகவத்தோடு ஒரு சிம்ட்டா பொடியை எடுத்து நாசியில் முகர்ந்து தும்ம, ரத்னா நினைவு வந்தது. தெலக்ஸ் புவனாவும் பொடி போட்டுக் கொண்டிருந்தால் எனக்கு ஆச்சரியம் வந்திருக்காது.

”டிபன் சாப்பிடுங்க அத்திம்பேர்.. சார் நீங்களும்..”

தெலக்ஸ் எழுந்து நின்றபடி சொன்னாள். இந்தத் தரிசனம் இத்தோடு முடிவடைகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அவள் என்ன நினைத்தாளோ ஒரு வினாடி நின்றாள். கொஞ்சம் தலை சாய்த்து அன்போடு என்னைப் பார்த்து, ”ராமோஜி சார், மெட்றாஸ்லே எங்கே இருக்கீங்க?” என்று கேட்டாள்.

புரசவாக்கத்தில் என்று சொல்ல, ஆர்வமாக, அங்கே எங்கே என்று கேட்டாள். முத்தியால் நாயக்கன் தெரு எனச் சொன்னதும் திரும்ப உட்கார்ந்து விட்டாள்.

”உங்க தெருவிலே தானே ராமண்ணா ஜோசியர் இருக்கறது?” தெலக்ஸ் கேட்க, ஆமாம் என்றேன். எங்கள் தெருவோடு தெலக்ஸுக்கு ஏதோ தொடர்பு இருப்பது மனதுக்கு இதமாக இருந்தது.

”ஆமா என் வீட்டுக்கு நாலு வீடு தள்ளித்தான். நல்ல பிரண்டு” .

”ரொம்ப நல்லதாப் போச்சு”. தெலக்ஸ் சொன்னபடி எதிர் சோபா மூலையில் எனக்கு முகத்துக்கு முகம் நெருங்க அமர்ந்தாள். இன்றைக்கு இன்னும் எத்தனை மெய்சிலிர்ப்பு பாக்கி இருக்கிறதோ. வீட்டுக்குப் போகும்போது முள்ளம்பன்றி போல சிலிர்த்தபடி தான் படி இறங்கப் போகிறேன்.

”ராமண்ணா ஜோசியர் தான் எனக்கு ஆஸ்தான ஜோசியர்”. தெலக்ஸ் புவனா அழகாக எனக்காக சிநேகபாவத்தில் புன்னகைத்தாள்.

அவள் வியப்பும் சந்தோஷமுமாக இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் இலவம் பஞ்சாக வெடித்து விடக் கூடும். நல்லவேளை மாகாணிக் கிழங்கைக் கொடுத்துத் தகவலை வாங்கிக்கொள்ள நான் வந்து விட்டேன். கூடவே, போனால் போகிறதென்று பந்துலு சாரையும் கூட்டி வந்திருக்கிறேன்.

”ஃபீல்ட்லே கால் வச்சபோது, அது மூணு வருஷம் முந்தி.. முழுப் பெயர் புவனலோசனின்னு தான் டைட்டில்ஸ்லே என் படங்களிலே வரும்.. அப்புறம், தசாபதி படத்திலே ரோல் எடுத்துக்க முன்னாடி, புவனலோசனின்னு பெயர் வைச்சுக்கறதா, புவனேஸ்வரின்னு வச்சுக்கறதா, இல்லே எங்க பாட்டி பெயர் புண்யாம்பான்னு போடலாமா… என்ன பெயரா மாற்றிக்கலாம்னு தேடிட்டு இருந்தபோது ஜோசியர் இங்கே டைரக்டர் கன்னய்யா வீட்டுக்கு, அது துளசி குடீரம் ஆயுர்வேத வைத்யசாலை பக்கம் இருக்கு… அங்கே வந்துட்டு கன்னையா கூட்டி வந்தார் இங்கே.. சோழி எல்லாம் உருட்டி பாத்துட்டு புவனான்னு மட்டும் பெயர் வச்சா போதும், பெயருக்கு முன்னே இனிஷியலை விட பிரபலமா நாலு எழுத்து சேரப்போறது.. அதிர்ஷ்டம் தான் இனி எப்பவும்னு சொல்லிட்டுப் போனார்…”

ஏற்கனவே நாலைந்து சினிமாவில் தெலக்ஸ் தலை காட்டியிருந்தாலும், தெலக்ஸ் புவனாவாக அவள் தசாபதி சினிமாவில் வந்ததில் இருந்து தமிழில் எந்த ஹீரோயினையும் விட அதிகமாக பாராட்டும் புகழும் அவளுக்குக் குவித்திருக்கிறது நினைவு வந்தது. எங்கள் தெரு புகையிலைக்கட்டை ஜோசியர்தான் இதற்கெல்லாம் காரணமா? சந்தோஷமாக இருந்தது.

”ராமண்ணா ஜோசியர் ஊரிலே இல்லியா?”, தெலக்ஸ் என்னைக் கேட்டாள்.

நான், நான் மட்டுமில்லை தெருவில் பொதுவாகவே ஜோசியரைக் கண்டுகொள்வதில்லை. வாயைத் திறந்தால் யந்திரம், பரிகாரம், நாலாம் இடம், ஏழரை, எட்டிலே குரு என்று புரியாத கணக்கெல்லாம் போட்டுக்கொண்டிருப்பவர் அவர். புதுவருஷ பலன் சொல்கிறேன் என்று கோவிலில் கூட்டம் கூட்டி, பெருமழை, பஞ்சம், யுத்தத்தில் இழப்பு என்று பாகற்காயைக் கடித்த மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் பிரசங்கம் செய்ய, இனியும் கேட்டுக் கொண்டிருந்தால் வானம் சரிந்து தலையில் விழுந்துவிடும் என்று பயந்து வெளியே வந்தபிறகு அவரைத் தெருவில் பார்த்தாலும் தலையக் குனிந்து கொண்டு அவசரமாக நடந்து போகிறேன். இப்போது அவர் தெலக்ஸ் மதிக்கும் ஜோசியர். சுமுகமாக அவரோடு பழக வேண்டிய காலம் வந்திருக்கிறது.

”அவர் கிட்டே கேட்டுத்தான் தசாபதிக்கு அடுத்து ’என் புருஷன்’ படமும் எடுத்துக்கிட்டேன். ஜனவரியிலே ரிலீஸ். அதைத் தவிர இன்னும் ரெண்டு படம் கமிட் ஆகியிருக்கு .. இப்போ ஏகப்பட்ட பேர் ப்ரொட்யூசர்னு வந்து நடிக்கக் கூப்பிட்டுட்டு இருக்காங்க… ஜோசியர் சொன்னால் தான் எடுப்பேன்.. நானும் ஒரு வாரமா ஃபோன் பண்ணி அவரைப் பிடிக்கப் பாக்கறேன்.. போன் போவுது.. சைலண்ட் ஆயிடுது..”

”உள்ளபடிக்கே கஷ்டம் தான்.. போன் லைன் எல்லாம் இப்படித்தான் இருக்கு .. மழைகாலம் வேறே வந்தாச்சா… நல்ல நாள்லேயே டெலிக்ராம் அண்ட் டெலிபோன் ஸ்டாஃப் வரமாட்டாங்க.. இப்போ கேக்கவே வேண்டாம்..”

டெலிபோன் உபயோகிக்கிறவர்கள் பேச்சில் நீ என்ன செய்கிறாய் என்று என்னைத் துச்சமாகப் பார்த்தபடி சம்பாஷணையில் ஈஷிக்கொண்டார் பந்துலு சார்.

”சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே”.

என்னது, தெலக்ஸ் என்னை யாசிக்கிறாளா? இது நிச்சயம் நடக்கவில்லை. என் கனவு. என் சொப்பனம் கூட இல்லை. பந்துலு சாரின் கனவில் நான் மாகாணிக்கிழங்கு அடைத்த கித்தான் பையோடு கடந்து வந்திருக்கிறேன். சொப்பன சுந்தரியாக தெலக்ஸ் கிழங்கு வாடையோடு என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். விடியலில் பால்காரன் வந்து கதவு தட்டப் போகிறான்.

”சார் தயவு செய்து ராமண்ணா ஜோசியர் கிட்டே நான் அவரைப் பார்க்க அடுத்த திங்கள்கிழமை.. திங்கள் வேணாம், சதிர்க்கச்சேரி தலைமை வகிக்கணும்.. செவ்வாய்க்கிழமை சாயந்திரம் வரேன்னு சொல்றீங்களா? அடுத்த படம் எதை சைன் பண்ணாலாம்னு இன்னும் ஒரு வாரத்திலே முடிவு செஞ்சாகணும்.. சரி வாங்க டிபன் சாப்பிடலாம்… பசி உயிர் போவுது.. சித்தி ”.

தெலக்ஸ் புவனாவின் சித்தி உள்ளே போய் யாரிடமோ ஏதோ சொன்னதைக் கேட்டேன். எங்கள் தலையைக் கண்டதும் கிண்டிய, நெய்யும் டால்டாவும் கசியும் ரவாகேசரியும் சேமியா உப்புமாவுமாகத் தீனி வந்தது. தெலக்ஸ் புவனாவே சிரத்தையாகப் பரிமாறினாள். அதெல்லாம் தேவாமிர்தமாக, அந்த அற்புதமான மாலை நேரம் முடிந்து கொண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன