ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – 1942 மழைக்கால இரவு – புது மாம்பலம், மதறாஸ்

வயிறும் மனதும் நிறைய தெலக்ஸ் புவனாவுக்கு நன்றி சொல்லும்போது சட்டென்று பொறி தட்டியது. வரும் செவ்வாய்க்கிழமை ரத்னா எங்கள் வீட்டில் சத்யநாராயண பூஜை வைத்திருக்கிறாள். உடனே ஒரு யோசனை.

“மேடம், செவ்வாய்க்கிழமை எங்க கிரஹத்துக்கும் நீங்க வந்திருந்து சிறப்பிக்கணும்.. என் சார்பிலேயும் என் மனைவி ரத்னாபாய் சார்பிலேயும் கேட்டுக்கறேன்.. ஜோசியர் வீட்டுக்கு எதிர்லே தான்.. சொன்னேனே.. ஒரு நிமிஷம் ஒகடி ஒக நிமிஷமு..”. எனக்குத் தெரிந்த தெலுங்கு அவ்வளவுதான்.

”ஓ அதுக்கென்ன வரலாமே. இந்த மேடம் எல்லாம் வேணாம் ப்ளீஸ்.. ”.

அந்தப் பெருந்தன்மை தான் தெலக்ஸ் புவனா.

பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டபோது பெரிய தூறலாக விழுந்து கொண்டிருந்தது. நின்றதும் போகலாமா என்று கேட்டார் பந்துலு சார்.

ஒண்ணும் கரைஞ்சு போயிட மாட்டோம் சார் என்று தெலக்ஸ் பார்த்து ரசிக்க டயலாக் அடித்து விட்டு தெருவோடு போய்க் கொண்டிருந்த கை ரிக்ஷாவைக் கூப்பிட்டு அவரோடு ஏறி அமர்ந்தேன். கை காட்டலாம் என்று திரும்பிப் பார்த்தால் தெலக்ஸ் மாளிகைக் கதவுகள் அடைத்திருந்தன.

எலக்ட்ரிக் ட்ரெயினில் மாம்பலத்தில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு வரும்போதே மழை கனமாகப் பொழிய ஆரம்பித்து விட்டது. பந்துலு சார் வீடு அங்கே தான்.

“நல்ல மழையிலே வந்துட்டோம்.. ஒரு குடையாவது அத்தங்கா கிட்டே வாங்கிட்டு வந்திருக்கலாம்..”

பந்துலு சார் மழையில் நனைவதற்கு ஆயத்தமாக மூக்கைப் பொடியில் உறிஞ்சி டப்பாவை கைப்பையில் பாதுகாப்பு, பத்திரமாக வைத்தபடி இறங்கிப் போனார். என் அருகில் தெலக்ஸ் புவனா வந்து உட்கார்ந்து விட்டு ரயில் முழுக்க ஈரமா இருக்கு என்று திரும்பிப் போய்விட்டாள்.

என் வீட்டில் அவள் வரும்போது என்ன செய்யலாம் என்று நினைப்பில் மூழ்கியிருந்தேன். முதலில் ரத்னாவிடம் இதைச் சொல்லி தெலக்ஸ் வருகைக்கான சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ரத்னா சத்தம் எதுவும் போடமாட்டாள். என்றாலும் சாந்தமாக இருக்கவைக்க வேண்டும். அவள் ஆசையோடு பார்த்து வாங்காமல் வந்த புட்டா புட்டா சில்க் புடவையை நாளைக்கு போகிற போக்கில் வாங்கிக் கொடுத்து மனதைக் குளிர்வித்து சூழ்நிலையில் எந்த இறுக்கமும் வராமல் பார்த்துக்கொண்டால் போதும்.

பார்க் டவுனில் இறங்கி புரசைவாக்கம் போகிற பஸ் பிடித்து வீட்டில் போய் நிற்க ராத்திரி ஏழரை மணி. சொட்டச்சொட்ட நனைந்திருந்தேன். ரத்னா வந்திருந்தாள். என் நீராடி வந்த கோலம் பார்த்துப் பதைபதைத்துப் போனாள் பேதை. இதமாக அணைத்துத் தலையைக் குனிந்து அவள் மார்பில் தாங்கி துவாலையால் என் தலையை அழுத்தித் துடைத்தபோது அவளை மட்டும் நினைத்தேன். மனதின் எல்லா அறைகளும் அடைத்து இருக்க, ரத்னாவே நிறைந்தாள்.

“படம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டேன். சுபாங்கி அம்மாளுக்கு தசாபதியில் வந்த நடுவயசுப் பெண்களின் ”மச்சி, தேவடியாக் கச்சேரி நடக்குதா மாடியிலே?” டயலாக் ரொம்ப பிடித்திருந்ததாம். அச்சு அசல் முதலியார் வீட்டுப் பேச்சாம். நான் தெலக்ஸ் என்று ஆரம்பிக்க நினைத்து அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருந்தேன்.

“சாப்பிடலாம் வாங்க”, அன்போடு என்னை சமையலறையில் இருத்தி மல்லிகைப்பூ இட்லியும் சின்ன வெங்காய சாம்பாரும் பரிமாறினாள் ரத்னா. வயிறு நிறைந்திருந்தாலும் எப்படியோ சாப்பிட்டேன். அவளை ஏமாற்றமடையச் செய்து விடக்கூடாது. அது முக்கியம்.

”இன்னிக்கு இம்புட்டுதான் முடிஞ்சது, சாரிங்க” என்று கெஞ்சுகிற கோலத்தில் சொல்ல, எச்சில் கையும் எச்சில் வாயும் அவளை அணைத்து முத்தமிட்டன.

ஒரு நிமிடம் மின்சாரம் நிற்க வீடெங்கும் இருட்டு. நான் கருப்புக் காகிதம் ஒட்டிய ஜன்னல் பக்கம் போய்த் திரையை விலக்கிப் பார்த்தேன். தெருவும் இருளில் தான்.

ரத்னா மெழுகுவர்த்தி கொளுத்தி அகல்விளக்கு எடுத்துட்டு வரேன் என்று என் காலை மிதித்து உள்ளே போக, நான் பாய்ந்து அவளை இரண்டு கையாலும் தூக்கி நீள சோஃபாவில் இருத்திப் போகாதே என்றேன்.

’அகத்துக்குத் திரியும் நெய்யும் தேசுறத் தேடவேண்டாம் திருவிளக்கு இவளே போதும்’.

ராமானுஜர் நூற்றந்தாதியில் திருவரங்கத்து அமுதனார் சொல்வதாக ஸ்கூல் தமிழ் வகுப்பில் ராமலிங்கம் பிள்ளைவாள் சொன்னது நினைவு வந்தது. ரத்னாவின் தோளில் கைபோட்டு உட்கார்ந்து சொன்னேன்.

“அப்போ பொம்பளைங்க இருக்கற வீட்டுலே கரண்ட் செலவு மிச்சம்தானே?” அவள் கேட்டாள்.

“ஆழ்வார் காலத்திலே எலக்ட்ரிக் லைட் இல்லே” என்று விநயத்துடன் அவள் பின் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டு அவளுக்குத் தெரியப்படுத்தினேன்.

காற்றில் ஜன்னல் சத்தமாக அடித்துக் கொண்டது. மூடி வச்சுட்டு வரேன் என்று ரத்னா எழுந்தாள். நான் போறேன், மகாராணி.

மூடும் போது தெருவை மறுபடி பார்த்தேன். அங்கே இருட்டில் ஒரு விசேஷம் தென்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன