கடமை தவறாத ஏ ஆர் பி வார்டனாக விசில் ஊதிக்கொண்டு இரண்டு ரவுண்ட் அடிப்பதற்குள் நாலு தடவை ஜோசியர் தட்டுப்பட்டு, ஏதாவது தெரிஞ்சுதா என்று கேட்டார். ஜப்பான் விமானம் குண்டு போட வந்தால் கூட அவருக்கு நியூஸ் ஆகாது. அற்ப சங்கைக்குக்கூட ஒதுங்கமாட்டாமல் அவரை புலனடக்கி நிறுத்தி, எதிர்பார்க்க வைத்துக் கட்டிப் போட்டிருக்கிறாள் புவி.
யார் வீட்டு ரேடியோவிலோ அரியக்குடி நேர்த்தியாக ’எல்லே இளங்கிளியே’ என்று பியாகடை ராகத்தில் திருப்பாவை விஸ்தாரமாகப் பாடும் சத்தம், அமைதியான ராத்திரியில் காற்றில் கலந்து கேட்டது. ’வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாயறிதும்’ என்ற வரிகளில் பியாகடை ராக முத்திரையைக் காட்டி, மழைக்கால ராத்திரியில், மார்கழி காலைப் பொழுதைக் கொண்டு வந்து நிறைக்கும் அரியக்குடியின் மாயாஜாலத்தை ரசித்தபடி ரவுண்டில் நடக்கும்போது குடை நினைவு வந்தது.
தங்கப்பன் முதலாளி வீட்டு வாசல் கதவண்டை வைத்ததை எடுக்க எப்படி மறந்து போனேன்? நாளைக்கு சாவகாசமாக எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாம், நிறையப் பேர் புழங்கும் இடம். விட்டுவிட்டு வந்தால், கடத்தலுக்கு என் கல்யாணக் காசியாத்திரைக் குடையும் துணை போகலாம்.
உடனே மீண்டும் அங்கே போனேன். ஆள் நடமாட்டம் அதிகமாகத் தெரிந்தது. பிள்ளையார், சப்பாத்தி, பராட்டா என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக ஏதோ நடக்கிறது அங்கே.
குடையை விட்டுட்டு போயிட்டேன் என்று தங்கப்பனைப் பார்த்து உரக்கச் சொல்லி விட்டு கதவுப் பக்கம் போக, உள்ளே முன் அறையில் விளக்கெரிந்தது. வரிசையாக நாற்காலி போட்டு பத்துப்பேர் அந்த விஸ்தாரமான ஹாலில் தர்ம சங்கடத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்க, நாலு பேர் அதிலிருந்து எழுந்து ஹாலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கே சாப்பிட்டு முடித்த நாலு பேரும் காப்பி தம்ளர்களோடு வெளியே வந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
ஹால் விளக்கும் முன்ஹால் விளக்கும் எரியாமல் அணையத் தெருவே இருட்டில். கரண்ட் போயிருக்கிறது.
“சாரி ராமோஜி சார், கோயில் கட்டினது, எனக்கு அறுபது வயசு நிறைவு, குரோம்பேட்டையிலே இன்னொரு வீடு வாங்கிப் போட்டதுன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ப்ரண்ட்ஸ் சின்னதா பார்ட்டி கேட்டாங்க. அப்படி இப்படி ஒரு டஜன் நெருங்கின சிநேகிதங்களை அழைக்க வேண்டிப் போச்சு.. உங்களை அடுத்த பந்தியிலே..”
அவரைக் கைகாட்டி நிறுத்தினேன். தங்கப்பன் முதலாளி வீட்டுத் தோட்டத்தில் ஏதோ வெளிச்சம் விட்டு விட்டு வந்தது. தடதடவென்று வாசலில் இருந்த மாடிப்படிக்கட்டு மெல்ல அதிரும் சத்தம்.
நான் குடையோடு வெளியே வந்து பார்க்க, இப்போது பக்கத்து குமாஸ்தா வீட்டு மொட்டை மாடியில் விளக்கு வெளிச்சம். தொப்பென்று இங்கே ஏதோ விழுகிற சத்தம். மூட்டை என்று அனுமானித்தேன். என்ன மூட்டையோ?
ஒன்றல்ல, ரெண்டோ மூணோ விழுந்தது. கீழே மோட்டார் ஸ்டார்ட் செய்யும் சத்தம். மினிவேனோ ட்ரக்கோ டொரடொர என்று கியர் விழுந்து கனைத்துக் கொண்டு ஓடும் சத்தம். நான் குடையோடு மாடிப்படி ஏறி ஓடினேன்.
ஹெட்லைட் இல்லாமல் அந்த வாகனம் இருட்டில் ஓடுவது எந்தப் பக்கம் என்று தங்கப்பன் முதலாளி வீட்டு மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி எக்கிப் பார்க்க, பிடி நழுவி விழுந்து கொண்டிருந்தேன்.
நினைவு திரும்பிக் கண் திறந்து பார்த்தேன். என் படுக்கைக்கு வலது பக்கம் ரத்னாவும், இடது பக்கம் தெலக்ஸ் புவனாவும் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்ல வேளை அடிபடலே.. ஊமைக் காயம் தான்.. மயக்கமும் தெளிஞ்சாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு தூக்க மாத்திரை கொடுத்திருக்கேன் .. தூங்கினா விட்டுடுங்க.. காலையிலே ஜம்முனு எழுந்திருச்சிடுவார்“
டாக்டர் நாயர் பெரிய மீசையை நீவிக்கொண்டு ரத்னாவையும் தெலக்ஸையும் பார்த்துச் சொன்னார். நான் அவர் மீசை மறைத்ததை எக்கிக் கடந்து ரம்பையையும் மேனகையையும் பார்வையால் அள்ளிப் பருகினேன்.