மாலை நேரக் குறிப்புகள்
இந்த யூனிட்டில் காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் உண்டு. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் கதையைப் பற்றியோ, யார் யார் பங்கு பெறுகிறார்கள் என்பதைப் பற்றியோ வெளிவட்டத்தில் விவாதிப்பதோ தகவல் பரிமாறுவதோ இல்லை என்பதை ஒரு எழுதாத கோட்பாடாக எல்லோரும் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் பூடகத் தன்மை படைப்பு குறித்த ஆர்வத்தைத் தூண்டி சுவாரசியமான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்க வைக்கிற நேசமான ஒரு விளையாட்டு. இதை எல்லோரும் ரசித்து ஈடுபடுகிறது தன்னிச்சையாக நடைபெறும் ஒன்று. பத்திரிகைகளிலும் மற்ற ஊடகங்களிலும் அவ்வப்போது மர்ம யோகி பற்றி வெளியாகும் ஊகக் கச்சவடத் துணுக்குகளைப் பகிர்ந்து கொண்டு ரசிப்பதும் இதில் அடங்கும்.
யூனிட். நான் நுழைந்தபோது இளைஞர்களே பெருவாரியான ஓர் உற்சாகமான கூட்டத்தைப் பார்க்கிறேன். வாசல் வரை வந்து வழக்கமான அந்நியோன்யத்தோடு வரவேற்ற இவர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைக்கிறார். ரெட் ஒன் அல்ட்ரா ஸ்பெஷல் காமிராவைக் கையாளும் நிபுணர், கிராபிக்ஸ் கலக்கல் விற்பன்னர்கள், ஒளிப்பதிவில் முத்திரை பதித்தவர்கள், வெகு சீக்கிரம் பதிக்கப் போகிறவர்கள், லைன் டிராயிங்கிலும் சார்க்கோல், மிக்ஸ்ட் மீடியாவிலும் உலக அளவில் புகழ்பெற்ற நவீன ஓவியர் … பல மாநிலத்து இந்தியர்கள், மேற்குத் திசை நாட்டினர், கீழைத் திசையர் என்று அந்த வட்டத்தின் பரந்த உலகத் தன்மை சட்டென்று மனதில் படத் தவறவில்லை.
மைக்கேல் மதன காமராஜனில் க்ரேஸி எழுதின மாதிரி ‘கில்லாடி’பா. அங்கே ஒரு தடியாள். இங்கே ஒரு பொடியாள்னு சைஸ் வாரியா ஆள் வச்சிருக்காரு’.
‘இது என் பையன். அட, சினிமாவிலே சார். அந்தப் படத்திலே என் பிள்ளையா துறுதுணுன்னு வந்து கார் பிரேக்கைப் பிடுங்கிப் போடறானே சின்னப் பையன். இவரேதான். இப்ப அண்ணா யூனிவர்சிட்டியிலே முடிச்சு வெளியே வந்திருக்கார்.
நான் அந்த இளைஞனோடு அந்தக் காட்சியை உரக்க ரசித்துச் சிரித்தபடி இன்னொரு தடவை கைகுலுக்குகிறேன். தொழில்நுட்பத்தோடு இலக்கியம், தத்துவம் என்று ஆழமான படிப்பாளியாக மலர்ந்திருக்கிறார் அந்தப் பழைய விஷமக்காரப் பிள்ளை.
விடுமுறை நாள். சில்லென்ற கடற்காற்று வந்தும் போயும் போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் பின்மாலைப் பொழுது. அந்த விசாலமான கடற்கரையோர இல்லத்தில் இந்தத் கலை – தொழில்நுட்பக் குழுவோடு இனிமையாகக் கடந்து செல்கிற சந்தியாகாலம் அமைதியான இரவில் மெல்ல நீள்கிறது.
முருகன், இதைக் கேட்கணும் நீங்க.
பரீட்சார்த்த முறையில் இசை மேதை உருவாக்கிய தீம் ம்யூசிக்கை குறுவட்டாகச் சுழல விடுகிறார். உடலின் தசைகளை, நரம்புகளை லயத்தோடு அதிர வைக்கும் அந்தத் தாளத்தோடு குரல் எடுத்துப் பாடுகிறார். அவரே எழுதிய கவிதை வரிகள்.
இருக்கையிலிருந்து எழுந்து அவரைக் கவனித்துப் பார்க்கும் அண்மையில் நிற்கிறேன். ஒளிர்ந்து எதிர்ப்பட்டதைத் துளைத்து கூராகப் படிந்து மீளும் தீட்சண்யமான விழிகள். முகத்தை கிட்டத்தட்ட மூடி இருந்த தாடி கொஞ்சம் கனம் குறைந்து கம்பீரத்தைக் கூட்டுகிறது. அந்தக் குரல் கனவின் அடித்தளத்தில் இருந்து ஒலிக்க ஆரம்பித்து மனக்குகையில் கதவுகளைத் தட்டித் திறந்து உட்புகுந்து நிரம்பி வழிகிறது. நூறு நூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துப் போகிறது அது. ஆணையிடுகிறது. தோளில் கைபோட்டுத் தோழனாக அழைக்கிறது. உலகைத் துச்சமாக நோக்கி வானுக்கு உயர்கிறது. ஆழமான ஆத்திகமும் அடிப்படை பகுத்தறிவும் எந்தச் சிக்கலும் இல்லாமல் குழைத்தும் குழைந்தும் வருகிறது. பாட்டு நடுவில் சின்னச் சின்ன சைகைகள். கதை போகும் போக்கு புரிந்த எனக்கு அர்த்தமாக, அவை எல்லாம் அர்த்த புஷ்டியோடு இன்னொரு பரிமாணத்தை இந்த அற்புதமான கணங்களுக்கு இழைத்துச் சேர்க்கின்றன. உறைந்தும் உணர்ந்தும் அமிழ்ந்தும் அனுபவித்தும் நிற்கிறபோது சட்டென்று அந்த அற்புதமான கணங்கள் முடிகின்றன.
என்னை அறியாமல் கைதட்டுகிறேன். எல்லோரும் கைதட்டுகிறார்கள். அந்த வெளிநாட்டுக் கலைஞர்களும் தான். மொழி புரியாவிட்டால் என்ன? இசையும் லயமும் காத்திரமான கவிதையும் சொல்லும் குரலும் எல்லாவற்றையும் புரியவைத்து விட்ட அற்புதத்தை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
என் நண்பரான ஓவியர் தத்ரூபமான காட்சி அமைப்புகள் மூலம் இவருடைய திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். அவரிடம் சினிமா பற்றிப் பேசாமல் பூபேன் கக்கரின் சர்ரியலிச ஓவியங்கள், அர்பணா கவுரின் நிலம்-நீர்-வானம் கோட்பாடு சார்ந்த வண்ணச் சித்திரங்கள், சமீபத்தில் பார்வதி ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்ட அவருடைய பெயரிடப்படாத இரண்டு அற்புதமான கோட்டோவியங்கள், நண்பர் டிராட்ஸ்கி மருதுவின் கலை என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. மற்ற கலைஞர்கள் – தொழில்நுட்ப விற்பன்னர்களோடும் அதே படிதான். எல்லா உரையாடலிலும் இவர் சேர்ந்து கொள்ளும்போது அந்தச் சின்ன வட்டத்தில் முழுதாகத் தோய்ந்து கருத்துப் பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. நிறையப் படிக்கிறார். சிந்திக்கிறார். எல்லாவற்றைப் பற்றியும்.
சாப்பிடலாமே. அன்போடு அழைக்கிறார். வைக்கம் முகம்மது பஷீரின் ‘பர்ர்ர்’ சதத் ஹுசைன் மாண்டோவின் ‘டோபா டேக்சிங்’. சிறுகதைகளின் கதையாடல் பற்றி அவரோடு தொடர்ந்தபடி உள்ளே நடக்கிறேன்.
செப்டம்பர் 3, 2008 புதன்கிழமை