நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நாயக்கரிடம் கேட்டேன் –
”உங்கள் அவசரத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது உங்களுக்கு ஸ்த்ரிகளின் சுஸ்வரமான கச்சேரிக்கு வாசிப்பதில் இஷ்டம் தான். அப்புறம் என்னாத்துக்கு காப்பியம், வெண்பா, வெண்டைக்கா எல்லாம்?”
”அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? தெருவிலே ஒரு பொண்ணு எதிர்லே வந்தாலே ஒதுங்கி வழி விட்டுத் திரும்பி சுவரைப் பார்த்துட்டு நிற்பேன்.. நமக்கு ஒத்து வர்றதில்லேங்க” என்றார் நாயக்கர்.
”ஏன் சார், நேரே பார்த்துட்டு நடந்தா மரியாதையா, திரும்பி பிருஷ்டத்தை காட்டறது நாகரீகமா?” என்று நான் கேட்க பதிலில்லை.
”பத்து அடியாவது விலகி இருக்கணும்னு என் கொள்கை”.
அதைத் தூக்கி அடுப்பிலே போடச் சொன்னேன்.
பெண் பக்கத்திலேயே போக மாட்டாதவருக்கு எத்தனை குழந்தைகள் என்று விசாரிக்க ஒன்பது பேர், ஐந்து மகன், நாலு மகள். பத்து அடி தள்ளிப் படுத்துக்கொண்டு இப்படியான சாதனை எப்படித்தான் நிகழ்த்தினாரோ.
இப்போதைக்கு என் கருத்தாக, பெண் வித்வான் கச்சேரிக்கு நாயக்கர் மிருதங்கம் வாசிக்கலாம் என்று சொல்லி, ஒரு வாரத்தில் லைப்ரரி போய் இது சம்பந்தமாகப் பழந்தகவல் கிடைத்தால் குறிப்பெடுத்து வருகிறேன் என்று அவரை அனுப்பி வைத்தேன்.
ரத்னாவிடம் வேலப்ப நாயக்கரின் சந்தேகத்தைக் கேட்டேன். ”ஏன், ஆண் வித்வான் பாடி, பெண் மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும், வயலினுமாக பக்க வாத்தியம் வாசிக்கக் கூடாது?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
பசியாறும் மும்முரத்தில் அதெல்லாம் யோசனைக்கும் கற்பனைக்கும் இடம் தராத விஷயங்களாக மங்கலாகி நிற்க, ஒரு ஈடு சுடச்சுட உதிர்த்து எடுத்து, கொஞ்சம் போல், லவலேசம், ஒன்றோடு ஒன்று ஒட்ட, கை நீட்டி, சூடு பொறுக்காமல் சின்ன ஊசியாகக் குத்துவதை அனுபவித்தபடி, விரல் முனையால் தொட்டு, மெல்லத் தள்ளப் பிரிந்து, சற்றே நல்லெண்ணெய் வாசம் பூசி, ஆவி பறக்கப் பசுமையான வாழை இலையில் கிடக்கும் இட்லிகளோடு இன்னொரு ஞாயிறு. இன்னொரு காலை விருந்து.
ஆகாரம் நிறைவடையும் நேரத்தில், நேற்றுப் பால் திரிந்து போனதைக் கொட்டாமல் எடுத்து வைத்து, சர்க்கரையும் நெய்யும் ஏலக்காய், முந்திரிப் பருப்பும் கலந்து திவ்யமாக ரத்னா கிண்டி வைத்த பால்கோவா ரெண்டு மேஜைக்கரண்டி இலையின் ஓரத்தில் இட, வாழ்க்கை சுவையானது என்றேன்.
”அடுத்த ஞாயிறும் இதே மாதிரி” என்று ரத்னா தொடங்க, எத்தனை ஞாயிறு இனிமேல் பாக்கி இருந்தாலும் இதே மாதிரி இட்லி, வெங்காய சாம்பார் தான்.. ரேஷன்லே, வெளியே சொல்லி பருப்பு வாங்கித் தர்றது என் கடமை என்று முடியாத விஷயத்தில் வாக்குறுதி அளித்தேன்.
அடுத்த வாரம் இச்சல்கரஞ்சியிலிருந்து மாமனாரும் மாமியாரும் வரப் போகிற செய்தி மனதில் நிற்கிறது. வெறுங்கையோடா வருவார்கள்? எப்போது வந்தாலும் பருப்பும் உளுந்தும் எடுத்து வராமல் இருக்க மாட்டார்கள். ’எங்கள் ரேஷனில் வாங்கி சேமித்து வைத்தது’ என்று யாராவது சோதனைக்கு வந்தால் காட்ட ரேஷன் கார்டு சகிதம் பிரயாணம் வைக்கிற முன் ஜாக்கிரதை உள்ளவர்கள்.
நாயக்கர் புறப்பட்டுப் போன ஐந்தாவது நிமிடம் திரும்பவும் வாசலில் சத்தம்.
வாசல் குறுக்குத் தாழ்ப்பாளை லொடக் லொடக் என்று மெல்லத் திறந்து சாத்தித் திறந்துகொண்டு கவன ஈர்ப்பு நடத்தியபடி அந்தப் பக்கம் விலாசினி டைப்பிஸ்ட் பூத்துச் செழித்த புஷ்பக்கொடி போல நின்று கொண்டிருந்தாள். கையில் ஒரு பெரிய கிண்ணம், அதாவது கும்பா.
குளித்து விட்டுத் தலையாற்றி, கூந்தலில் நுனி முடிச்சு போட்டு, வாசலில் என் கவனத்தைச் சிதறடிக்கவே வந்து நிற்கும் அழகான அந்நிய ஸ்திரி.
உள்ளே வா விலு என்றாள் ரெண்டு கையிலும் காப்பி டம்ப்ளரோடு வந்த ரத்னா. விலு என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி ”ரத்தி, இதையும் சாப்பிட்டு கோப்பி குடிக்கச் சொல்லு” என்று ஒரே வாக்கியத்தில் என் நெஞ்சைக் குளிரச் செய்தாள். கையில் வைத்திருந்த கிண்ணத்தை ரத்னாவிடம் கொடுத்தாள்.
”எங்க அம்மாயி அம்ம, அதான் மாமியார், கருநாகப்பள்ளியிலே இருந்து வந்திருக்கு.. நெய்யப்பமும் உண்ணியப்பமும் உண்டாக்கி எடுத்து வந்திருக்காங்க.. டேஸ்ட் பார்த்து சொல்லுங்க ரெண்டு பேரும்”.
விலாசினி வளரெ பங்கியாயி ஒரு புஞ்சிரி பொழிஞ்சு திரிச்சு நடன்னு. எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் தெரியுமாக்கும்.
அவள் எடுத்து வந்து கொடுத்துப் போனதைச் சாப்பிட்டுப் பார்த்தேன். மணக்க மணக்க, மிகுந்த ருசியாக இருந்தது. அதோடு, காப்பியை ஒரு மிடறு குடித்துக் கிட்டிய சொர்க்கபோதையில் மிதந்தபடி சொன்னேன் –
”கேரள ஐட்டம்னாலே ஒண்ணாம் க்ளாஸ் தன்னே”
ரத்னா திரும்பி என்னைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னாள் – ”விலாசினியை ஐட்டம் அது இதுன்னு சொன்னா வந்து அறைவேன்”.
”சத்தியமா விலுவை இல்லே ரத்து.. இந்த ரெண்டுலே எது உண்ணியப்பமோ அதுவும், இன்னொரு அப்பம் பேரு சொல்லிச்சே அதுவும், வாயிலே போட்டா கரையுது.. என்ன.. நெய்யைவிட தேங்காய் எண்ணெய் வாசனை அதிகம்.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இல்லே.. ஒரு தென்னை மரத்தையே உள்ளே வச்ச மாதிரி தேங்காய் சூழந்த உலகம் இது..”
”சரி, பேத்த வேணாம்.. ஹால்லே ஒட்டடை அடிக்கலாம், அலமாரியிலே புத்தகம் அடுக்கி வைக்கலாம், தோட்டத்திலே செடிகொடிக்கு தண்ணீர் விட்லாம்… எது செய்யப் போறீங்க?” என்று குலை நடுங்க வைத்தாள் ரத்னா.
வாசலில் மறுபடியும் சத்தம். ஓசை எழுப்புகிறவர்கள் வாழ்த்தப்படட்டும்.