ஓசிக் கடுதாசி

 

குங்குமம் பத்தி – அற்ப விஷயங்கள்

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்தாலும் வந்தது. மின்னஞ்சல் என்ற ஈ-மெயில் விலாசம் இருக்கிற சிநேகிதர்கள் அதிகமாகி விட்டார்கள். தபால் அட்டை, இண்லெண்ட் லெட்டர் வாங்க அஞ்சல் அலுவலகப் படியேறியே வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மரக் கதவு, கம்பி கிராதி அடைத்த கதவு, அதில் கதவு இலக்கம், தெருப்பெயர், ஊர், பின்கோடு என்று இருக்கப்பட்ட பழைய நாள் நண்பர்களோடு தொடர்பு போயே போச்சு. கல்யாணம், காது குத்தல், சாவு, பிறப்பு போன்ற சமாச்சாரங்களை அவர்கள் கடிதம் எழுதிப் பகிர்ந்து கொள்ளும்போது கூட வாழ்த்தியோ வருந்தியோ உடனே மனதுக்குள் மறுமொழி கொடுப்பதோடு சரி. தபால் ஆபீஸில் அஞ்சல் அட்டை வாங்கி அதை எழுதி அனுப்ப ஏனோ சோம்பல்.

ஆனால், உப்புப் பெறாத விஷயத்தை எல்லாம் ஈ-மெயிலில் அனுப்பி, பெற்றுக் கொண்டிருக்கிறோம். ‘காலையில் இருந்து அடி வயிற்றில் அரிக்கிறது’ என்று பல் விளக்காமல், ஆவின்பால் காப்பி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கலிபோர்னியாவில் சிநேகிதிக்கு மின்னஞ்சல். அவளும் உடனே கர்ம சிரத்தையாக ‘குளியாமல் இருக்கியா’ என்று ஆண்பால் பெண்பால் வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் விசாரிக்கிறாள். உலகமே ஒரு நொடியில் விரல் நுனிக்கு வந்து சேரும் காலம். கம்ப்யூட்டர், இண்டர்நெட் இணைப்பு, மின்சாரக் கட்டணம். இது மட்டும் தான் செலவு. இண்டர்நெட் அரட்டை, மின்னஞ்சல் என்று மற்ற சகலமானதும் இலவசம்.

மின்னஞ்சல் சேவை அளிக்கிற எல்லோருமே காசு வாங்காமல்தான் அளிக்கிறார்கள். அந்த இலவச ஈ-மெயிலோடு இணைப்பாக வந்து சேர்கிற தொந்தரவு கொஞ்சமா நஞ்சமா? ஜிமெயில் என்று ஒன்று. இன்றைக்கு கம்ப்யூட்டர் பரிச்சயமாகி உலகத்தில் எங்கெங்கோ சுவாசித்துக் கொண்டிருக்கும் பதினைந்திலிருந்து அறுபது வயது வரையானவர்களில் பாதிப் பேர் – என்னையும் சேர்த்து – பயன்படுத்திக் கொண்டிருக்கும் சேவை இது. மற்ற ஈ-மெயில்காரர்கள் கொடுப்பதைவிட அஞ்சல் பெட்டி அளவு ஜி-மெயிலில் வெகு அதிகம். அதாவது, மற்றவர்கள் கால் ஏக்கர் இலவச மனைப் பட்டா வழங்கினால். ஜி-மெயில் ஆளாளுக்கு நூறு ஏக்கர் ‘இந்தா பிடி’ என்று தானமாகக் கொடுக்கிறது. ஆதாயம் இல்லாமலா ஜிமெயில் இப்படி அளக்காமல் கொள்ளாமல் ஆற்றில் போடுகிறது?

அக்காவின் கடைசிப் பிள்ளை கல்யாணப் பத்திரிகையை ஸ்கேன் செய்து ஈ-மெயிலில் அனுப்பி அவசியம் வரச் சொல்லி அழைத்திருந்தான். கூடவே மொபைல் தொலைபேசியிலும் ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி. கல்யாணம் இங்கே இல்லை. தாய்லாந்தில். சயாமியப் பெண்ணைக் காதலித்துக் கைப்பிடிக்கிறான்.

ஜி-மெயிலில் வாழ்த்து அனுப்ப உட்கார்ந்தேன். ‘கல்யாண வெள்ளிவிழா கொண்டாடும் நானும் உன் மாமியும் தம்பதி சமேதராக பாங்காங் உடனே வர முடியாத காரணத்தாலும், மாமியை ஈ-மெயில் அட்டாச்மெண்டாக அனுப்ப முடியாமல் போனதாலும், இங்கிருந்தே உங்கள் இருவரையும் வாழ்த்துகிறோம்’.

இந்த வாழ்த்தை அனுப்பிய அடுத்த நிமிடம் அக்கா பிள்ளை பதில் அனுப்பி விட்டான். அதை நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஜி-மெயில் சிவனே என்று சும்மா இருக்கவில்லை. கடிதத்தை அலசி உடனடி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. கல்யாணம், இருபத்தைந்து வருட மகிழ்ச்சியான தாம்பத்யம், இப்படிக் கடிதப் போக்குவரத்தில் காணப்பட்ட சமாசாரத்துக்குத் தகுந்தாற்போல் விளம்பரங்களை சடசடவென கம்ப்யூட்டர் திரையில் பரத்தியது. எனக்கு ஒத்தாசையாகவாம்.

எனக்குக் காட்டப்பட்ட விளம்பரங்கள் இந்த தினுசில் இருந்தன – ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போக குறைந்த செலவில் விமானக் கட்டணம். கல்யாணப் பரிசுகளை இண்டெர்நெட்டிலேயே வாங்கி அனுப்ப வசதி விவரம். ‘நாற்பது வயதும் மேலே ஆகியும் கட்டு விட்டுபோகாத வெள்ளைக்காரி பெண் சிநேகிதி வேண்டுமா?’. இதுபோக, ‘ஐம்பது வயதில் இருபத்தைந்து போல் இன்பத்துக்கு மூலிகை வயாக்ரா. குறைந்த செலவு. முழுத் திருப்தியில்லாவிட்டால் பணம் வாபஸ்’.

ஏன்’யா, நான் உங்க கிட்டே சிட்டுக் குருவி லேகியம் விலை கேட்டேனா? இல்லே, வீட்டுக்காரிக்குத் தெரியாமல் லண்டனில் ஒரு மாஜி அழகியை ஃபிரண்ட் பிடிக்கச் சொன்னேனா? நான் யாருக்கோ ஏதோ எழுதினா, உமக்கு என்ன போச்சு?

கேட்க முடியாது. ஜி-மெயில் இலவச சேவை. அதை நான் உபயோகிக்கும்போது என் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்க அவர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுக்கிறேன் என்று அர்த்தம். சம்மன் இல்லாமல் ஆஜர் ஆக அழைப்பும் தான்.

ஆங்கிலத்தில் எழுதினால் தானே மோப்பம் பிடித்து தோளில் கைபோட்டுக் கொண்டு அறிவுரை சொல்கிறார்கள்? தமிழில் எழுதினால் என்ன செய்வாங்களாம்?

அடுத்த திருமண வாழ்த்தைத் தமிழில் தட்டியபோது ‘ஜாதகப் பொருத்தம் பார்க்க அணுகவும்’ என்று தலைப்புச் செய்தி தட்டுப்பட்டது. தமிழில் தான். கில்லாடிகள் நொடியில் த்ரீ பீஸ் சூட்டில் இருந்து தழையத் தழையக் கட்டிய எட்டு முழ வேட்டிக்கு மாறி வாங்க சார் என்று கூப்பிடுகிறார்கள்.

நண்பர் புதுக்கவிதை கேட்டார். ‘விளக்கு அணைந்த இரவில் தெரு ஓரம்’ என்று கம்ப்யூட்டரில் தட்டினேன். பயம் எட்டிப் பார்த்தது. தெரு ஓரம் கக்கத்தில் தோல்பையை இடுக்கிக் கொண்டு ஈ-மெயில் சேவையாளர் நிற்கக் கூடும்.

(குங்குமம் – கடந்த வார இதழில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன