தம்புராட்டி

 

‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி – யுகமாயினி ஆகஸ்ட் 2008

‘இந்த நாடகத்தில் ஒரு சீன்லே ஹீரோ உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம மேடையிலே நிக்கறான்’. ராயல் லைசியம் தியேட்டரில் டாக்டர் பாஸ்ட் நாடகத்துக்கான டிக்கட் வாங்க கியூவில் நிற்கும் போது எனக்குப் பின்னால் நின்றவள் என் காதில் கிசுகிசுத்தாள். பழைய ஜெர்மனிய இலக்கியம். கத்தே என்ற மாபெரும் படைப்பாளி எழுதியது. பார்க்க இப்படி பனியில் நனைந்தபடி க்யூவில் நிற்கிறேன். ஈவ் டீசிங் போல் ஆடம் டீசிங் செய்கிற துஷ்டை யார்? திரும்பினேன்.

தாட்டியான பெண். சின்னக் கண்ணும் சப்பை மூக்கும் சீனா என்றால், வெளுத்த உடல் லோக்கல் பெண் என வம்ச வரலாறு சொல்கிறது. ஜப்பானிய சுமோ மல்யுத்த பயில்வான்களில் பெண்கள் யாரும் கிடையாது. லங்கோட்டோடு சுமோ யுத்தம் செய்யவேண்டியிருக்காவிட்டால், எனக்குப் பின்னால் நின்றவள் சுமோ பயில்வான் பட்டியலில் இடம் பிடித்திருப்பாள். அவள் சைசுக்கு லங்கோடு என்ன, ஜீன்ஸ், டீஷர்ட் கிடைப்பதே சிரமம். தலையிலிருந்து கால்வரை தீர்க்கமாக பார்க்கிறேன்.

‘சகல உடுப்பும் அழுத்தமான காட்டன் துணியில்தான் தைத்துப் போட்டுக்கறேன்” யட்சிணி மாதிரி என் நினைப்பைப் புரிந்துகொண்டு சொல்கிறாள் ராட்சசி. அப்புறம் நாடகம் தொடங்க வாசல் புல்வெளியில் காத்திருந்த பதினைந்து நிமிட நேரத்தில் உற்ற தோழியாகிப் போனாள் விக்கி. அதாவது விக்டோரியா. வயது 35.

‘என்னமோ ஒரு சில பேரைப் பார்த்ததும் ஜன்மம் முழுக்க பழகின மாதிரி தோணுது. பேச்சு கொடுன்னு மனசு நச்சரிக்குது. நீ அதிலே ஒருத்தன். பங்களாதேஷ் காரன் தானே?” இந்தியன் என்கிறேன். எடின்பரோவில் பங்களாதேஷ்காரர்கள் அதிகம். எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் சின்னதாக ஓட்டல் நடத்தி ரொட்டி விற்கிறார்கள். மதராஸ் சாம்பார் என்று தொட்டுக்கொள்ள ஒரு ஸ்பெஷல் சமாசாரத்தையும் நாலு பவுண்ட் வாங்கிக் கொண்டு குவளை நிறையத் தருகிறார்கள். மதராஸையும் சாம்பாரையும் பார்க்காமல் உத்தேசமாக செய்து ஒப்பேற்றியது அது. சவுக்காரத்தை புளித்தண்ணீரில் கரைத்து வேகவைத்தது போன்ற அதன் சுவைக்கும் மயங்கி ஸ்காட்லாந்துக்காரர்கள் அந்த ஹோட்டல்களை முற்றுகையிடுகிறார்கள். விக்கி மாதிரி. அவள் பாதிதான் ஸ்காட்டிஷ்காரி. அப்பா வகையில் அது. அம்மா நான்யாங் பிரதேச அசல் சீனச்சி.
அரை மூக்கால் அருமையான இங்கிலீஷ் பேசிய விக்கி மலையாள சரித்திரக் கதையில் வரும் அரண்மனைக் காரத் தம்புராட்டி போல் ஏனோ தெரிந்தாள்.

டாக்டர் பாஸ்ட் பார்க்க எனக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து நாடகம் ஆரம்பமான பத்தாவது நிமிடத்தில் தூங்கி விட்டாள் விக்கி. சாத்தான் கதாநாயகனுக்கு உலகத்து இன்பத்தை எல்லாம் வர்ணித்து ஆசை காட்டுகிறான். ‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடத் தயங்குகிறான். அவனை சாத்தான் வற்புறுத்தி கீழ் உலகுக்கு அழைத்துப் போக ஆயத்தமாகிறான்.

விக்கி என் தோளைத் தட்டி ‘சீன் போயிடுச்சா?’ என்றாள். என்னது? அதாம்’பா திகம்பர தரிசனம். சட்டென்று எனக்கு முன்வரிசையில் நாலைந்து பாட்டியம்மாக்கள் பைனாகுலரை முகத்துக்கு நேரே பிடிக்கிறதைப் பார்த்தேன். மொட்டைத்தலை நாயகன் பேண்டையும் சட்டையையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு மேடையில் உரித்த கோழியாக நிற்கிறான். ‘‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’. அவன் வசனத்தில் இன்றைய நாகரீக வர்க்கத்தின் இருத்தலியல் சிக்கலை இனம் கண்டு நான் ரசித்தபடி உட்கார்ந்திருக்கிறேன். ‘சரி, கிளம்பறேன். அந்த முன்வரிசை கிழவிகளை போய்ட்டு நாளைக்கு வரச் சொல்லு’ விக்கி எழுந்து நடக்கிறாள்.

நான் போன சினிமா, நாடகம், பாலே நாட்டியம், வெஸ்டர்ன் கிளாசிகல் இசை நிகழ்ச்சி என்று எல்லா இடத்திலும் விக்கி வரத் தவறவே இல்லை. கூடி இருந்து பியர் குடித்துக் குளிரக் குளிரப் பேசக் கிடைத்த நல்ல சிநேகிதியானாள் அவள்.

பிலிம் ஹவுஸ் தியேட்டரில் கலைப்படம். அங்கே இங்கிலீஷ் படம் என்றாலும் சப் டைட்டில் இருந்தால்தான் போடுவார்கள். கலைப்படத்துக்கு அவங்க இலக்கணம் அது. இன்றைக்கு பெட்ரோ ஆல்மடவார் எடுத்த புத்தம் புது ஸ்பானிஷ் படம். பெயர் வால்வர். காத்திருப்பு என்று பொருளாம். என் கனவுக் கன்னி பெனலோப் க்ரூஸ் கதாநாயகி. ஆல்மடவார் கலைப்படம் மட்டும் தான் எடுப்பார். அதுவும் பெண்களை மையமாக வைத்து. அவருக்குப் பிடித்த சிவப்பு நிறத்தில் இறுக்கமான உடுப்பு அணிந்து கதாநாயகியாக பெனலோப் க்ரூஸ். கொஞ்சம் வயதானாலும் அழகு குறையாத தேவதையாக படம்பூரா வியாபிக்கிறாள். உதட்டழகி, கண்ணழகி, மூக்கழகி, இதர வர்த்தமானங்களோடு நீண்ட கழுத்தழகியும் கூட.

படம் முடிந்து எடின்பரோ திரைப்பட சங்க உறுப்பினர்கள் ஆல்மடவாரின் கலை நேர்த்தியை அணு அணுவாக ரசிக்கிறார்கள். பெனலோப்பின் அம்மா ஆவி ரூபமாக வீட்டுக்குள் வருவது, பெனலோப் கணவனை கொலை செய்வது இப்படி ஷாட் பை ஷாட்டாக விவாதிக்கப் படுகின்றன. என் முறை வந்ததும் எனக்குப் பிடித்த முதல் சீன் கல்லறைக் காட்சியை விவரிக்க வாயைத் திறக்கிறேன்.

‘இவனுக்கு ரொம்பப் பிடிச்சது, பெனலோப் க்ரூஸ் பாத்ரூம் க்ளோசட்டிலே ஒண்ணுக்குப் போறதுக்காக அடி வஸ்திரத்தை முழங்காலுக்குக் கீழே தழைச்சுக்கிட்டு உக்கார்றதுதான்”. என் பின்னால் இருந்து குரல். விக்கிதான்.

என்னையும் விக்கியையும் அறிந்த நண்பர்கள் சிரிக்கிறார்கள். என்னைக் கரடிப் பிடியாகக் கட்டிக் கொண்ட விக்கியை முறைத்துவிட்டு நானும் சிரிக்கிறேன். நிஜம்தான். டாய்லெட் காட்சியிலும் பெனலோப் அழகாகத்தான் இருந்தாள். அற்ப சங்கை தீர்க்க உட்கார்ந்து நீர் பிரியும் பெண்ணை அதிரூப சுந்தரி என்று வர்ணிக்க எதுக்கு சங்கடப் பட வேணும்? அழகுக்கு நேரம் காலம் எல்லாம் ஏது?

அதற்கு அடுத்த வாரம் விக்கி பிறந்தநாள் பரிசு கொடுத்தாள் – அவளுடைய பிறந்த நாளுக்காக எனக்குப் பரிசு. பெட்ரோ ஆல்மடவாரின் எல்லா திரைப்படங்களின் சி.டியும் அடங்கிய அழகான தொகுப்பு அது. வால்வர் தவிர.
**************

ஈழத்து எழுத்தாளர் எழுதிய ஒரு சிறுகதையில் ‘அவள் பானையைத் திறந்து பார்த்து விட்டு பொச்சடித்தாள்’ என்ற வாக்கியத்தைக் கண்டு கொஞ்சம், சரி, துணுக்குற்றேன். இதில் முதன்மையாக வரும் மூன்றெழுத்து சொல் எங்கள் செம்மண் பூமியில் இடுப்புக்குக் கீழே இருக்கப்பட்ட ஒரு உடல் உறுப்பை,க் குறிக்க வழங்கப்படுவது. வசவு உதிர்க்கும்போது சரளமாக வாயில் வந்து போகும்.

ஈழத்து எழுத்தாளர் நல்ல கதை சொல்வதற்கு நடுவிலே ஏன் கெட்ட வார்த்தைக்குத் தாவினார் என்று தெரியாமல் ஈ-மெயிலில் இலங்கையரை விளிக்கக் கிடைத்த விளக்கம் – பொச்சடித்தாள் என்றால் இலங்கைத் தமிழில் உச்சுக் கொட்டினாள் என்று அர்த்தம்.

ப்ச, இவ்வளவுதானா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன