கல்கி டிஜிட்டல் கேண்டீன் பத்தியில் அண்மையில் வெளியானது
டிஜிட்டல் கேண்டீன்-20
பழைய கருப்பு வெள்ளை சரித்திரப் படங்களில் பக்கம் பக்கமாகப் பேசும் வசனத்தில் தவறாமல் ஒரு வரி இடம் பெற்றிருக்கும். ‘மன்னரின் நாவசைந்தால் நாடே அசையும்’. ராஜாவின் கூஜா யாரும் இப்படிக் கூறாமல் சாமானியனும் நாவை அசைக்கலாம். கம்ப்யூட்டர் நாட்டை அசைக்காது. நடமாட உதவி செய்யும்.
பெரிய விபத்துகளில் சிக்கினால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. உடல் உறுப்புகளை அசைத்து இயக்க மூளை கட்டளையிட முதுகுத் தண்டின் ஒத்துழைப்பை நாட வேண்டி இருக்கிறது. விபத்துக்குப் பிறகு கை, கால் அதிக சேதம் இல்லாமல் இருந்தாலும், முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் மூளை கட்டளையிட முடியாமல் போய், அசைவு முழுக்க நின்று போகிறது. பேச்சும் தான்.முதுகு பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் எந்த சேதாரமும் இன்றித் தப்பிப்பது நாக்கு. இது நேரடியாக மூளையோடு நரம்பு வழியாக இணைக்கப் பட்டிருக்கும் ஒரே மனித உறுப்பு. உடம்பே மரத்துப் போனாலும், நாக்கு மட்டும் அசையும்.
முடக்குவாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளி நாவசைத்து அங்கே இங்கே நடமாட தொழில் நுட்பம் துணை புரிகிறது. பச்சரிசி சைசில் ஒரு குட்டியூண்டு சிலிக்கன் சில்லு. அதை நோயாளி நாக்கில் உபத்திரவம் இல்லாமல் ஒரு ஓரமாகப் பதிக்க வேண்டும். அவர் அமர ஒரு சக்கர நாற்காலியும் தேவை. நாக்கை மடித்து அல்லது இடம் வலமாக அசைத்தால் மட்டும் போதும். நாக்கில் பதித்த சில்லு அந்த அசைவை அர்த்தப்படுத்திக் கொண்டு சக்கர நாற்காலியில் பொருத்திய சென்சருக்கு சிக்னல் அனுப்பும். நாற்காலி நகரும். திரும்பும். நிற்கும்.
கம்ப்யூட்டர் சில்லு இப்படிப் பயன்பட்டால், கம்ப்யூட்டர் சின்னத் திரையை வேறு மாதிரி உபயோகப் படுத்தலாம். வேறே எதற்கும் இல்லை. நேரத்தில் தூங்கி நேரத்தில் எழுவதற்கு. முக்கியமாக மாணவர்களுக்கான மருத்துவக் கண்டுபிடிப்பு.
படிக்கும் வயதில் ராத்திரி நேரம் கழித்து தூங்குவது வாடிக்கை. நண்பர்களுடன் ஈமெயில் சாட்டில் அரட்டை, டெலிவிஷன், சினிமா. இப்படியான சாக்குகள் தொடங்கி தேர்வில் முதல் மதிப்பெண் வாங்க உழைப்பது போன்ற நல்ல முயற்சி வரை இதற்கான காரணங்கள் பல உண்டு. ராத்திரி தாமதமாக உறங்கி காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கூடம் ஓடினால் நாள் முழுக்க ஒரு சோர்வு. அடுத்த இரவு மறுபடி தாமதமான உறக்கம். அல்லது உறக்கமின்மை. திரும்ப அசதி.
இருட்டு வந்ததும் உறங்கி சூரியன் வந்ததும் எழவைக்கும் உயிரியல் கடியாரம் மரபணு வழியாக ஆதி மனிதனில் தொடங்கி நமக்குள் தொடர்கிற ஒன்று. அந்தக் கடியாரத்தின் இயக்கம் இரவினில் நீண்ட நேரம் கண்விழித்து காலையில் சீக்கிரம் எழும்போது தாறுமாறாவதால் ஏற்படும் அசதி இது. வெளிச்ச சிகிச்சை மூலம் அசதியும் தூக்கமின்மையும் போகும் என்கிறது புதிய மருத்துவக் கண்டுபிடிப்பு.
அயர்வோடு காலையில் எழும்போது நீல நிற ஒளிக்கதிர்கள் கண்ணில் படாமல் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். நேரமாக ஆக உடலின் குறைந்த பட்ச வெப்ப அளவு கூடும். அப்போது பள்ளியில் நீல வெளிச்சம் வெளிப்படும் கம்ப்யூட்டர் திரைக்கு முன் மாணவர்களை உட்கார்த்த வேண்டும். அவர்களுடைய தூக்க நேரமும் விழிப்பு நேரமும் எந்தக் கோளாறும் இல்லாமல் பழையபடிக்கு வரும். அசதியும் களைப்பும் ஓடி மறையும்.
மருத்துவமும் தொழில் நுட்பமும் இப்படி ஒரு பக்கம் நன்மையைக் கொண்டு வரப் பாடுபட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று ரெண்டுங்கெட்டானாக பயன் கொடுக்குமா கெடுக்குமா என்று முழிக்க வைக்கிறது.
தினசரி தவறாமல் ஒரு மணி நேரமாவது வியர்த்து விறுவிறுத்து உடல் பயிற்சி செய்தால், உடல் வலுப் பெறும். உடல் பயிற்சி இல்லாத உடம்பு ஊளைச் சதை பிடித்து ஊதிப் போகும். இது காலம் காலமாக படித்தும் அனுபவித்தும் தெரிந்து கொண்ட பாடம். உடல் பயிற்சி செய்த உடம்பு கொழுப்பைக் கரைப்பதால் உடல் டிரிம்மாக இருக்கும். ஓடியாடி உடல் பயிற்சி செய்ததாக மூளையை ஏமாற்றி நம்ப வைத்தாலும் கொழுப்பு கரைவது ஆரம்பமாகிவிடும் என்கிறது புதிய ஆராய்ச்சி. இந்த ஏமாற்று மாத்திரையை சாப்பிட்டால் எத்தனை கொழுப்புச் சத்துள்ள உணவை உண்டாலும் வெயிட் போடாது என்பதோடு, ஒலிம்பிக் வீரர்கள் போல் பலத்தோடும் சக்தியோடும் எப்போதும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஒலிம்பிக்ஸின்போது இதைச் சாப்பிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு செயற்கையாகச் சக்தி கூடினால் கண்டுபிடிக்க இன்னொரு பக்கம் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தீவிரமாகி இருக்கின்றன. ஜெயிக்கப் போவது யாரு?