ராமோஜியம் – 1707-ஆம் வருடம் – எலிப்பொறி சத்திரத்து மானியங்கள் – காரைக்கால் புவனி ஏற்படுத்தியவை

கண்களில் நீர் திரையிட்டிருக்க, பேஷ்காரிடம் கேட்டான் ராம்ஜி – தாசிப்பெண் எங்கே போனாள்?

பேஷ்கார் தலை குனிந்து இருந்தார். பின் தயங்கித் தயங்கிச் சொன்னார்-

“யாரோ அவள் மேல் குறளி வேலை ஏவி அல்லது செய்வினை செய்து, உடம்பெல்லாம் கொப்பளம் எழுந்து கடலில் விழுந்து இறந்து போனது இந்த நாளுக்கு சரியாக இரண்டு வருடம் முன்பு. அவள் கணக்குகளை சரிபார்க்க ராவ்ஜி வருவார் என்று இங்கே மாதம் மூன்று நாள் நீங்கலாக தினம் வந்து காத்திருந்தாள் பிரபோ”.

ராமோஜி ஆங்கரே யாத்ரிகனின் மோனத்தை அடர்ந்து பகரும் கருந்தாடி மண்டிய கன்னங்களில் கண்ணீர் நனைக்கக் கைகூப்பி இருந்தான். சில்வண்டு ஒன்று எங்கிருந்தோ ‘போனால் போகுது’ என்று தொடர்ந்து சிலுப்பிக் கொண்டிருந்தது. இருளைக் கிழித்துக்கொண்டு ஏதோ ராப்பறவையோ, கூடு தொலைத்த நாள் பறவையோ தனித்து வட்டமிட்டு சிறகடித்துப் போனது.

“வருடா வருடம் அவள் ஏற்படுத்திய மானியம் கிடைக்கிறது தானே?”

பேஷ்கார் அமைதியாக இருந்தார். கடல் காற்று சத்தமிட்டு ஜன்னல் சாத்திப் போனதைக் கேட்டபடி ராமோஜி அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.

”அது வந்து கொண்டிருந்தது. நடுவில் பஞ்ச காலத்தில் விளைச்சல் பொய்த்துப் போனதால் மானிய நிலத்திலிருந்து பாதி நெல் தான் தர முடிந்தது. மழை பெய்து நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்தபோது நிலத்தில் வேலை செய்தவர்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க எங்கெங்கோ போய்விட்டார்கள். இன்னும் பாதி மானியம் தான் வருகிறது”

ராமோஜி கணக்குப் புத்தகத்தைப் பார்க்க, ஆயிரத்து முன்னூற்றைம்பது பொன் இந்த வருடக் கணக்கில் ராமோஜி கட்டளைப் பணமாக வந்திருப்பதைப் பார்த்தான். இது எப்படி?

”சாஹூஜி போன்ஸ்லே மகராஜின் கொடை அது. இந்த சத்திரம் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு உடையது என்று அவருக்குத் தெரியும். புவனலோசனி அம்மாள் அரசரோடு உங்களைப் பற்றி சர்வ உயர்வாக நிறையப் பேசியதாகத் தெரிகிறது. இல்லாவிட்டாலும் உங்களை இங்கே ஆராதனை செய்கிறவர்கள் தான் நாங்கள் எல்லோரும். புவனலோசனி தாசி சார்பில் துண்டு விழும் சத்திர மானியப் பணத்தை யாரிடமும் கேட்காமல் அரசு மானியம் கொடுக்க மன்னர் சாஹூஜி ஏற்பாடு செய்திருக்கிறார். இதே போல் திருநள்ளாறு அருகே இன்னொரு சத்திரத்தையும் புவனலோசனி பெயரில் போன்ஸ்லே மன்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அதையும் உங்கள் மானியமாகக் காட்ட உத்தரவு உண்டு” என்றார் பேஷ்கார்.

ராமோஜி எலிப்பொறிச் சத்திரத்தின் வரவு செலவுக் கணக்கைப் புரட்டிப் பார்த்து விட்டு, சரியாக உள்ளது என்று கையெழுத்திட்டு எழுந்தான்.

அதே ராத்திரியில் அதே நேரத்தில் ரங்கீலா கப்பலில் துயில முயற்சி செய்த விட்டோபா கனவா நினைவா என்று சொல்ல முடியாத ஸ்திதியில் உடம்பெல்லாம் கொப்புளத்தோடு வந்த புவனலோசனியைக் கண்டார்.

“பிரபோ, சேனாதிபதிக்கு நான் எழுதிய லிகிதம் ஒன்று கூட அவரிடம் போய்ச் சேரவில்லையே. நீங்கள் அவற்றைப் பெற்று என்ன செய்தீர்கள்?” அவள் விட்டோபாவைக் கேட்டாள். அவளுடைய புண்கள் நிணம் கசிந்திருந்தன,

”கனோஜி ஆங்கரே” என்றார் விட்டோபா. ராமோஜி பெண்பித்து பிடித்து காரைக்கால் தாசி பின்னால் போகாமல் இருக்கக் கண்காணிக்கும்படி அவர் தான் விட்டோபாவுக்குச் சொன்னது. காரைக்கால் என்று இலச்சினையோடு எந்தக் கடிதம் வந்தாலும் அதைக் கீறிக் கடலில் எறிந்து வந்தார் விட்டோபா. அப்புறம் கடித வரவு நின்று போனது

கனோஜி ஆங்கரே சொன்னதற்காக மற்றவரின், அதுவும் ஒரு நல்ல நண்பரின் அந்தரங்கத்தில் தலையிட்டது தவறென்று அந்த நொடியில் வருந்தினார் விட்டோபா.

“புவனலோசனி, மன்னித்து விடம்மா”.

அவர் எழுந்து உட்கார்ந்து சொல்லச் சுற்றிலும் அலையடித்திருந்த கடல் ஆமோதித்து அலைபாய்ந்தது. புவனியைத்தான் காணோம்.

புவனியை நினைத்தபடி விளக்கு அமர்த்தித் தன் அறைக்கு உறங்கச் சென்றான் ராமோஜி. மணல் கடிகையைக் கைப்பையில் இருந்து மேஜையில் எடுத்து வைத்தான். பைஜாமாவை எடுத்து உடுத்தப்போய் வேண்டாம் என்று வைத்து, எட்டு முழ வேட்டியைத் தட்டுச்சுற்றாக உடுத்திக்கொண்டான்.

நாளை எழும்போது அவன் ராமோஜி ஆங்கரேயாக இருப்பானா, ராமோஜி பத்மநாப ராவ்ஜியாக ஆகிவிடுவானா? அது நாளைக்குத் தெரியும். அதுவரை, மணல் கடிகையில் சன்னமான தாரையாக மணல் விழுந்து கொண்டிருக்கட்டும்.

அறையில் வைத்திருந்த எலிப்பொறியில் எலி விழும் ஓசையைக் கேட்டபடி உறங்கிப் போனான் அவன்.
 ———————————————————————————–
(ராமோஜி ஆங்கரே – சுவர்ணதுர்க்கம் 1698 அத்தியாயம் நிறைவு.

அடுத்து ‘துபாஷ் ராமோசி ராயன் 1745 புதுவை – சில குறிப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன