முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானால் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?
அந்த மனுஷனைப் பாவம் வாரம் முழுக்க, நாள் முழுக்க மதாம் தியூப்ளே துரைசானியம்மாள் கையில் —– வாகாகப் பற்றி நெறித்து ’ஆடுறா ஆடு, கிழட்டு குரங்கே ஆடு, தியூப்ளே குரங்கே ஆடு’ என்று ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாள். அதிலெல்லாம் இருந்து தப்பித்து, கொஞ்சம் தென்னங் கள்ளு, கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் அதிகார ஆர்ப்பாட்டம் என்று பொழுது போக்கிவிட்டுத் திரும்ப, தியூப்ளே துரை முரட்டாண்டி சாவடிக்கு வந்து விடுவது வழக்கம். ஊர் ரொம்ப இஷ்டமாகி, அதன் பெயரையே தியூப்ளே பேட்டை என்று தனதாக மாற்றினார் அவர்.
தோப்பு மண்ணும், மர நிழலும், பறவைகளின் சத்தமும், பக்கத்தில் சிறிய நீர்த்தடமாகச் சுற்றி நடக்கும் ஓடையும், கடலில் இருந்து புறப்படும் காற்றும், சுத்தமான சூழ்நிலையுமாக அவருக்கு மிகவும் பிடித்துப்போன பிரதேசம் அது. அதை அசுத்தப்படுத்த அவரால் முடிந்ததனைத்தும் செய்வார், ஆமாம்.
இந்த வாரக் கடைசி சனிக்கிழமை இது. இன்று காலை ஏழு மணிக்கு மதாம் அசதியோடு தூங்கிக் கொண்டிருக்கும்போதே, துரை சாரட்டை சித்தம் செய்து வைக்க ஏற்பாடு செய்து விட்டார். ஆனால் நாம் நினைப்பது போலவா நாள் நடக்கும்? பிரஞ்சு கவர்னர் தியூப்ளே துரைக்கு எத்தனை பிரச்சனைகள்!
துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை உடம்பு சரியில்லாமல் போன பிறகு துரையின் பிரதான வேலையான கபுறு கேட்டல் என்ற தகவல் கேட்பது தடைப்பட்டுப் போயிருக்கிறது.
பிள்ளைவாள் பார்த்துப் பார்த்து கவர்னர் துரை உத்தியோக ரீதியில் தெரிந்து கொள்ள வேண்டிய பிரத்தியேக கபுறு, மற்றபடி உளவு வார்த்தை, ஊர் வம்பு, ஹேஷ்யம், அனுமானம், ஹாஸ்யம் எல்லாம் அனுதினமும் வந்து இருந்து விஸ்தாரமாக முகவார்த்தை சொல்லி, அனுப்பிவித்துக்கொண்டு போவார். லிகிதமாகவும் சிலதை எழுதி அனுப்பி வைப்பார். அது பிள்ளைவாள் சுகவீனம் அடைந்த பிற்பாடு, எப்போதும் போல் தியூப்ளே துரைக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் உடனடியாக வந்து சேர்வதில்லை.
ஆனந்தரங்கம்பிள்ளை ஒற்றை மனுஷ்யராக ஆள் அம்பு குதிரை நிர்வகித்து இத்தனையும் திரட்டுகிறதை மற்றவர்கள் செய்தால் பல பேர் அதுக்கு வேண்டியிருக்கும்.
சர்க்கார் கபுறுக்கு ஒருத்தன், ஊர் வம்புக்கு ஒருத்தன், உளவு வார்த்தைக்கு ஒருத்தன், உளறுமொழிக்கு இன்னொருத்தன் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒருத்தனாக நியமித்தால் புதுச்சேரி பிரஞ்சு சர்க்காரின் கஜானா காலியாகி விடும்.
மேலும், எவனுக்கும் சர்வ வியாபகமான அறிவோ, சமத்காரமாகவும், சட்டென்று பதில் சொல்வதாகவும் மதிநுட்பமோ கிடையாது. வெற்றிலையும் பாக்கும் நாள் முழுக்க மென்று மென்று அசமஞ்சமாகத்தான் அரையில் சொறிந்தபடி அவனவன் வேலைக்கு வரான். பல் துலக்கும் நேரம் தவிர, அப்படி ஒன்று இருந்தால், பல் துலக்கும் நேரம் தவிர, சம்போக நேரம் அடங்கலாக இவர்கள் வெற்றிலை பாக்கு மெல்லாத பொழுது இல்லை.
ஈதெல்லாம் சேர்ந்து தியூப்ளே துரையின் சனிக்கிழமை விடுமுறை நாளைப் பாழ் பண்ணுவதாக ஆக்கியது. புறப்பட்டதுமே அவருக்கு நிலைமை சரியில்லாமல் போனது.
சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது.
இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை ஒருத்தனும் லட்சியம் செய்வதில்லை.
சொல்லக் கஷ்டமாக இருப்பதாக அவனவன் சலித்துக் கொண்டபோது தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளே பேட்டை, தூப்ளே பேட்டை, துப்ளேப் பேட்டை என்று கொஞ்சம் அங்கே இங்கே தட்டிக்கொட்டி மாற்றிப் பெயரை உச்சரிக்கவும் அனுமதி கொடுத்தாகி விட்டது. இருந்தும் இன்னும் நீட்டி முழக்கி மொரட்டாண்டி சாவடி என்று தான் சொல்கிறான்கள்.
நிகழ்ந்து போன குரோதன வருடம் வைகாசி மாதத்தில் ஒருநாள் சாயங்காலம் முனிசிபல் கவுன்சிலில் இருந்து கவர்னர் அவரது மாளிகைக்கு வந்தார். அலமுசு பண்ணிவிட்டு (காப்பி குடித்து) கவர்னர் துரை இருந்துகொண்டு துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் சொன்னது என்னவென்றால் –
”ரங்கப்பா இதொண்ணும் சரியில்லை, கேட்டாயா.. இந்த சாமானிய ஜனங்களுக்கு பெரிய இடத்து வார்த்தை ஏதும் அர்த்தமாகுவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை எடுத்து அதைப் புரிய வைக்கப் போகிறோம் இனி”.
உத்தரவாகணும் என்று பிள்ளையவர்கள் வாய் பார்த்திருக்க துரை சொன்னது –
”இந்த நாள் தொடங்கி இனி எப்போதும் முரட்டாண்டி சாவடி என்று யாரும் பழைய பெயரைச் சொல்லக் கூடாது என்று உத்தரவு போடுவோம். பிடிவாதமாகவோ, வாய் மறதியாகவோ முரட்டாண்டி சாவடி என்று சொன்னவன், சொன்ன பெண்பிள்ளை காதை அறுத்து, நாக்கில் மாட்டுச் சாணத்தைத் தடவி புதுச்சேரி பட்டண எல்லையில் விடுத்து, மறுபடி உள்ளே வரவொட்டாமல் செய்ய வேண்டியது”.
Excerpts from my forthcoming novel RAMOJIUM – chapter in which Ramosi Raayan (Ramoji Rao) meets Joseph Dupliex in the Year 1745