சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது.
இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை ஒருத்தனும் லட்சியம் செய்வதில்லை.
சொல்லக் கஷ்டமாக இருப்பதாக அவனவன் சலித்துக் கொண்டபோது தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளே பேட்டை, தூப்ளே பேட்டை, துப்ளேப் பேட்டை என்று கொஞ்சம் அங்கே இங்கே தட்டிக்கொட்டி மாற்றிப் பெயரை உச்சரிக்கவும் அனுமதி கொடுத்தாகி விட்டது. இருந்தும் இன்னும் நீட்டி முழக்கி மொரட்டாண்டி சாவடி என்று தான் சொல்கிறான்கள்.
நிகழ்ந்து போன குரோதன வருடம் வைகாசி மாதத்தில் ஒருநாள் சாயங்காலம் முனிசிபல் கவுன்சிலில் இருந்து கவர்னர் அவரது மாளிகைக்கு வந்தார். அலமுசு பண்ணிவிட்டு (காப்பி குடித்து) கவர்னர் துரை இருந்துகொண்டு துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் சொன்னது என்னவென்றால் –
”ரங்கப்பா இதொண்ணும் சரியில்லை, கேட்டாயா.. இந்த சாமானிய ஜனங்களுக்கு பெரிய இடத்து வார்த்தை ஏதும் அர்த்தமாகுவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை எடுத்து அதைப் புரிய வைக்கப் போகிறோம் இனி”.
உத்தரவாகணும் என்று பிள்ளையவர்கள் வாய் பார்த்திருக்க துரை சொன்னது –
”இந்த நாள் தொடங்கி இனி எப்போதும் முரட்டாண்டி சாவடி என்று யாரும் பழைய பெயரைச் சொல்லக் கூடாது என்று உத்தரவு போடுவோம். பிடிவாதமாகவோ, வாய் மறதியாகவோ முரட்டாண்டி சாவடி என்று சொன்னவன், சொன்ன ஸ்த்ரி காதை அறுத்து, நாக்கில் மாட்டுச் சாணத்தைத் தடவி புதுச்சேரி பட்டண எல்லையில் விடுத்து, மறுபடி உள்ளே வரவொட்டாமல் செய்ய வேண்டியது”.
அந்த யோசனைக்கு ஆனந்தரங்கம்பிள்ளையவர்கள் இருந்து கொண்டு தகுந்த உத்தரமாகச் சொன்னது-
”மெத்தவுஞ்சரி. கவர்னரவர்கள் இந்த விஷயத்துக்காக காதை அறுப்பது என்று புறப்பட்டால் அறுந்து விழுகின்ற காதுகளை எடுத்து அகற்றி வைக்க சிப்பந்தி, தொட்டி வகையறா என்று நிறையத் தேவைப்படும். இன்னொன்று யார் இப்படி சொல்கிறான் என்று கேட்டுக்கொண்டு சுற்றிவர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ருசுப்பிக்க சாட்சிகளை தயார் செய்ய வேண்டும். இந்த சின்ன காரியத்துக்கு அத்தனை பிரயத்தனம் தேவை இல்லையே”.
அந்த மட்டில் அங்கே வந்த மதாம் துரைசானியம்மாள் துரைக்கும் தனக்கும் கபே கொண்டு வர குசினிக்கார குப்பையா செட்டியிடம் உத்தரவிட்டுவிட்டு இருந்து கொண்டு, ஆனந்தரங்கப் பிள்ளையிடமும், அவர் முகாந்திரம் கவர்னரிடமும் மொழிந்ததோ இந்தத் தரத்தில் இருந்தது –
”காலையில் சாவடியிலோ நெல் விளையும் வயலிலோ, கள் இறக்கவும், குடிக்கவும் போகும் தென்னந்தோப்பிலோ ஜனங்கள் கூடும்போது சுவாமியை ஸ்மரிக்கிறதுபோல் பத்து தடவை எல்லோரும் சேர்ந்து ”தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளெக்ஸ் பேட்டை” என்று உச்ச ஸ்தாயியில் சொல்லி அதன்பிறகு அவனவனுக்கான கிரமத்தில் புத்தி செலுத்த வேண்டியதென்று சட்டம் போடலாம். வீடுகளிலும் காலையில் உலையேற்றும்போது இதேபடி ஸ்திரிகளும், வயசு ரொம்ப ஆகி வீட்டோடு கிடக்கிற கிழங்களும் ஓசை எழுப்பப் பண்ணாலாம்.
”இதற்கு அப்புறமும் முரட்டாண்டி சாவடி என்று உச்சரிக்கிறவன் பல்லை ஒரு தடவை சொன்னதற்கு ஒன்று வீதம் உடைத்துப் போடலாம்.
”ஷாம்பினா பாதிரியார் இந்த மாதிரி தண்டனைகளை அவிசுவாசிகளுக்கு அளிக்க பரீஸிலிருந்து தளவாடம் வாங்கி வந்திருக்கிறார். பல் உடைக்கும்போது சத்தத்தை பெருக்கி கேட்க நன்றாக உள்ளது. பல் உடைபட்டவன் தீனமாக அலறுவதும் கேட்க நேர்த்தியாக உள்ளது”.
அப்போது துரையவர்கள் இருந்து கொண்டு சொன்னது –
”பெயரை மாற்றிச் சொல்வதில் தான் நாம் கருத்து செலுத்த வேண்டுமே தவிர, பழைய பெயரைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து தண்டிப்பதில் நேரம் செலுத்தினால், நமக்கு சித்திரவதையில் தான் நாட்டம் என்று புலனாகிவிடும். ஏற்கனவே அவிசுவாசிகளுக்கு இதுபோல் தண்டனை தர ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பிரசங்கித்தது ஊரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாம். இதிலே முரட்டாண்டிச் சாவடிக்காகப் பல் உடைப்பதையும் சேர்த்து இன்னும் கஷ்டமாக்க வேண்டாம். என்ன ரங்கப்பா நீ நினைப்பது என்ன?”
ஆனந்தரங்கம் பிள்ளை அதற்கு பதிலாகச் சொன்னது-
”நானும் அது தான் சொல்ல உத்தேசித்தேன். வேலியில் போகிற ஓணானை எதுக்கு இடுப்பில் எடுத்து விட்டுக் கொள்ளவேணும் என்று இங்கே பழமொழி ஒன்று உண்டு. மதாமுக்கு தமிழ் புரியுமென்பதால் தெரிந்திருக்கக்கூடும்”.
மதாம் அபூர்வமாக தே (டீ) வேணாமென்று வைத்து கபே பருகியபடி இருந்துகொண்டு இதுக்கு உத்தரமாகச் சொன்ன யோசனை பின்வருமாறு இருந்தது –
”அங்கங்கே தெருவிலே கூட்டம் போட்டு பெயர் மாற்றத்தை ஜனங்களின் புத்திக்குக் கொண்டு போகணும் ரங்கப்பா. அப்படியே பயப்படுத்தணும்”.
அந்த யோசனை இன்னும் நடப்பாக்கப்படவில்லை. நேற்றுக்கூட மதாம் ஞாபகப்படுத்தினாள். கவர்னர் துரைக்கு ஆயிரம் ஜோலி. முரட்டாண்டி சாவடி புத்தியில் முன்னால் வந்து நிற்கவில்லை நேற்று வரை. காரணம் இதுதான் –
மதப் பிரசாரம் போல் தெருக்கோடியில் கூட்டம் கூட்டிப் பேச ஆட்கள் வேண்டும். கவுன்சில் உத்தியோகத்தில் இப்படி யாரும் இல்லாத காரணத்தால் வெளியே ஆட்களைத் தேட வேண்டும். குறைந்த செலவாக ஆளுக்கு நாலைந்து துட்டு, ஒரு தினத்துக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இலவசமாகக் கொடுத்து விடலாம்.
அது ஒரு பிரச்சனையைத் தீர்க்கிற வழிமுறையாக இருக்கும்.
மற்றபடி சில லிகிதங்களை இங்க்லீஷில் எழுதுவிக்கவும், கபுறு வந்ததில் தமிழை, வேறே அந்நிய பாஷையை கவர்னரிடம் பிரஞ்சில் சொல்லவுமாக, துவிபாஷி தேவை.
ஆனந்தரங்கம் பிள்ளை மறுபடி ஆரோக்கியம் கொள்ள இன்னொரு மாதமாவது ஆகும் என்றார்களாம் பிள்ளையின் வைத்தியர்கள். தாற்காலிகமாக ஒரு துபாஷை வேலைக்கு தயார் பண்ண வேணும். பிள்ளைக்கு வேண்டியவர்களில் யாரையாவது அவரே ஒரு மாதம், பத்து நாளுக்கு விரல் சுட்டலாம்.
துரை இளநீரை ஒவ்வொன்றாக சீவித்தரச் சொல்லி குடிக்க தொண்டையும் கழுத்தும் கண்ணும் குளிர்ந்ததாக தோன்றியது. பின்னால் பூட்ஸ் அணிந்த கால்களின் சத்தம். இளநீரைத் தரையில் தவறவிடாமல் இறுகப் பற்றி மடியில் இருத்தியபடி திரும்பிப் பார்த்தார் அவர். வந்தவன் மெய்க்காப்பாளன் ஆன முசியெ அந்த்வான் மொர்சேன். தமிழ் கற்ற கும்பினி பிரஞ்சுக்காரன் அவன்.
”என்ன மொர்சேன், கள்ளு எடுத்து வரவா என்று கேட்கிறான்களா? வேணாம். இவ்வளவு சீக்கிரம் கள்ளு குடித்தால் அப்புறம் எனக்கு தூக்கம் வந்துவிடும். மதியத்துக்கு நண்டும், இறால் மீனும் சமைத்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன். தூங்கினால் அதெல்லாம் இல்லாமல் பசியோடு சாயந்திரம் ஆகிவிடும்.. பகலுக்கு ஒரு மணி தள்ளி கள்ளு எடுத்துவரச் சொல்”.
”மன்னிக்க வேணும் முசியே கவர்னதோர், கவர்னர் அவர்களே, உங்களைப் பார்க்க ஒரு துபாஷி வந்திருக்கிறார். தமிழ்க்காரர். சோமாசி ராயரென்றோ ராமோசி ராயர் என்றோ பெயர் சொன்னார்”.
தியூப்ளே நெஞ்சுக்குக் குறுக்கே பூணூல் தரிப்பது போல் அபிநயம் செய்து காட்டி, வந்தவன் பிராமணனா என்று விசாரித்தார். நூல் எதுவும் கண்ணில் படவில்லை என்றான் எய்ட் தெ காம்ப் அந்த்வான் மொர்சேன்.
”நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று வந்த இடத்திலும் தொல்லைதானா? நாளைக்கு.. நாளைக்கு வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை. கோவிலுக்கு பூசை வைக்க நேரம் போய்விடும். பனிரெண்டு மணிக்கு மறுபடி முரட்டாண்டி.. நாசம்.. தூப்ளெக்ஸ் பேட்டைக்கு வருவேன் மிச்சமீதி ஓய்வெடுக்க. அவனை திங்கள்கிழமை என் பீரோவில் (ஆபீசில்) வரச்சொல்லு”.
கவர்னர் துரையவர்கள் சலித்துக்கொண்டார். முரட்டாண்டி நாக்கை விட்டு இறங்க மாட்டேனென்கிறது.
”மன்னிக்கணும் முசியே, இந்த துபாஷ் முசியே ரங்கப்பிள்ளே அனுப்பி வச்சவராம். அவரை முரட்டாண்டி சாவடியில் வந்து பார்க்கச் சொன்னீர்களாம் ப்ரபோ”.
திரும்பவும் முரட்டாண்டி. எய்ட் தெ காம்ப் அனர்த்தம் விளைவித்ததை உணர்ந்து உடனே பேச்சை நிறுத்தினான்.
இப்படி தன் சொந்த நாக்கே, பக்கத்தில் இருந்து குற்றேவல் செய்கிறவர்களே, சொன்ன பிரகாரம் கேட்காதபோது ஊர்க்காரன் காதை எங்ஙனம் அறுப்பது? தியூப்ளே துரை முகம் சுளித்துக் கொண்டார்,
அவர் இன்னொரு இளநீரை எடுத்தபடி, அந்த மனுஷரை வரச்சொல்லு என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். துணிக் கூடாரத்து நீலத் துணி படுதாவாகவும் சுவராகவும் கூரையாகவும் காற்றில் சலசலத்தது.
”உம் பெயர் என்ன?”
கவர்னர் தியூப்ளே துரை வடக்கு பிரான்சில் லாந்த்ரொசி பிரதேசத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் ராமோஜியைக் கேட்டார்.
”ராமோஜி பத்துஜி ராவ்”.
ரொம்ப பெரிசா இருக்கே என்றார் ழோசப் பிரான்ஸ்வா தியூப்ளே.
தன்னை ராமோஜி அல்லது ராமோ என்று கூப்பிடலாம் என்று அடக்கத்தோடு பதில் சொன்னபோது சர்வ ஜாக்கிரதையாக அவனும் வடக்கு பிரான்ஸ் உச்சரிப்புக்கு மாறினான். துரை முகம் துளி சந்தோஷத்தைக் காட்டியது.
”குடும்பம் எப்படி? கல்யாணம் ஆனவரா நீர்?”
ஆம் என்று பணிவோடு சொன்னான் ராமோஜி.
“பெண்டாட்டியையும் ரெட்டை பிறவிகளான எட்டு வயது மகள்கள் இருவரையும் ஆறு வருஷம் முன் கப்பல் பிரயாணத்தின்போது பறி கொடுத்தவன் நான். தனியனாக என் வாழ்க்கை போகிறது பிரபோ”.
தியூப்ளே தலையைக் குலுக்கியபடி துக்கம் அபிநயித்தார். தேவனுக்கு மகிமை என்று அவருடைய கரங்கள் யந்திரமாக விரிந்து வானத்தைப் பார்த்து நொடியில் தாழ்ந்தன.
”பிரான்ஸ் கூட்டிப் போய்க்கொண்டிருந்தீரோ?”
“இல்லை மகாப்ரபு, சந்திரநாகூர் காட்டுவதற்காகக் கூட்டிப் போனபோது இரண்டு கப்பல்கள் மோதி..”
ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான்.