”நல்லது, தெய்வானுக்ரஹம் இருந்தால் சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி ராமோஜி நடக்க ஆரம்பிக்க கவிராயர் அவனை நிறுத்தினார்.
”வாருங்கள், நீங்கள் போகுமிடத்துக்கு உங்களைக் கொண்டு போய் விட்டுப் போகிறேன்”, கவிராயர் வண்டிக்குள் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.
”நீங்கள் வில்லியனூரில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்”, ராமோஜி வண்டியில் போனபடி.அவரிடம் விசாரித்தான்.
”நான் இந்தப் பக்கமே இல்லை. தென்காசியில் வசித்து வருகிறேன். பிள்ளையாரிடம் நூலை வாசித்துக்காட்டி, இயன்றால் சில கீர்த்தனைகளைப் பாடிக்காட்டிப் போகலாம் என்று வந்தேன்”.
ராமோஜிக்கு பொறி தட்டியது. முரட்டாண்டிச் சாவடி. ராம நாடகம். இரண்டும் எங்கோ சந்திக்கின்றன. அவனுக்கு மனதில் விளக்கும் எரிந்தது.
”கவிராயரே தாங்கள் எங்கே ராத்தங்கி இருக்கிறீர்கள்? சௌகரியங்கள் நல்ல வண்ணம் உள்ளனவா?”
”அம்பலத்தாடியார் மடத்தெரு சத்திரத்தில் ஒரு ரூபாய் கொடுத்து தனியாக இருக்க ஒரு அறை கொடுத்திருக்கிறார்கள். பிள்ளையவர்களைக் கண்டபிறகு தான் ஊர் திரும்ப வேண்டும்”.
ராமோசி ராயன் தன்னைப் பற்றியும் சுருக்கமாகச் சொன்னான் –
”மூன்று தலைமுறை முன் தஞ்சாவூரிலும் மேற்கு கடற்கரையில் சுவர்ணதுர்க்கத்திலும் வசித்திருந்த குடும்பம் என்னுடையது. கனோஜி ஆங்கரே என்று கேட்டிருப்பீர்களே. அந்த கடற்படை மகா அதிகாரிக்கு நேர்கீழ் ராணுவ உத்தியோகம் செய்த தளபதியின் வாரிசு நான். காரைக்காலில் பிரஞ்சு தேர்ந்து, அதோடு கூட தமிழ், இங்க்லீஷ் என்று மூணு மொழியில் பரிச்சயம் உள்ளதால் பிள்ளையவர்கள் அனுமதிப்படி அவருக்கும் கவர்னர் துரைக்கும் கபுறும் கடுதாசியும் மொழிபெயர்த்துத் தருகிறேன். என்னை பிள்ளைவாள், பிள்ளைமாராக ஜாதியில் இல்லாவிட்டாலும், தாயாதி பங்காளி சம்பந்தம் இல்லாவிட்டாலும், உறவாகக் கண்டு தக்க தருணத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். கல்யாணம் ஆகி, ரெட்டைப் பெண் குழந்தைகளும் பெற்று வளர்த்து மனைவியையும், குழந்தைகளையும் எட்டு வருஷம் முன் கப்பல் பயணத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் பறிகொடுத்தேன். என் துன்பம் என்னோடு இருக்கட்டும். நீங்கள் ஓய்வெடுங்கள்” குரல் கம்ம, ராமோஜி பேசி நிறுத்தினான்.
கவிராயர் நான்கு தலைமுறையாக குற்றாலத்திலும் மேலகரத்திலும் தென்காசியிலும் நெல்லையிலும் வசிக்கும் நிலச்சுவான்தார்களின் குடும்பம். அவர் குடும்பத்தில், நாலு தலைமுறையாகக் கவிராயர்கள் உண்டு. இசையிலும் ஈடுபாடு உள்ள குடும்பம் அது.
நிறைய அந்தாதிகளும், கோவையும், கலம்பகமும், பிள்ளைத் தமிழும், தல புராணங்களும் பாடியிருக்கிறாராம் கவிராயர். ”தற்போது, ராமாயணத்தை கீர்த்தனங்களாக யாத்திருக்கிறேன்” என்றார் அவர்.
“மிக்க சிறப்பாக இருக்கும். நான் அதில் ஒன்றிரண்டு கேட்க முடியுமா? என் வீட்டுக்குப் போய் ராப்போஜனம் முடித்து அம்பலத்தாடியார் மடம் போவோமே. நான் இருக்கும் வைசியாள் தெருவிலிருந்து நடந்து போகிற தூரம் தான்”. ராமோஜி ஆர்வத்தோடு கவிராயரைக் கேட்டான்.
கவிராயர், வரலாமே என்று சொல்லி விட்டார். அவருடைய கீர்த்தனங்களைப் பற்றி ஈடுபாட்டோடு கேட்கிறவர்கள் குறைவு என்பதை அறிவார். கேட்கப் பிடிவாதமாக முன்வந்தால், அதுவும் அதிகார பீடத்துக்கு அருகே இருக்கக் கூடிய இந்த ராமோசி ராயர் போன்றவர்கள் கேட்க விழைந்தால், நல்ல காலம் தான் வந்து கொண்டிருக்கிறது.
வீட்டுக் கதவைத் திறந்தான் ராமோஜி. ஓரிழை தூசி வாடை வீசியது உள்ளே. சுவாமி இடத்தில் காலையில் வைத்த தீபம் எப்போதோ அணைந்து இலுப்பெண்ணெய் நெடி சூழ்ந்திருந்தது. அந்த விளக்கை ஒளிரவிட்டான். நான்கு மெழுகுதிரி விளக்குகளை மாடங்களில் சுடர் கொளுத்தி வைத்தான்.
” தயக்கம் ஏதுமின்றி உள்ளே வாருங்கள். தனியாகத் தான் இருக்கிறேன். இது பரம்பரையாக வரும் வீடு. என் குடும்பம் கப்பலில் துணி அனுப்பி வியாபாரம் செய்ததை இந்தத் தலைமுறையில் நான் தொடர்ந்து செய்கிறேன். நஷ்டம் இல்லை. பெரிய லாபமும் இல்லை. சராசரி வருமானம். அவ்வளவு தான்.”.
ராமோஜி வீட்டு கூடத்தில் கவிராயரை இருத்தி விட்டு ஜன்னல் எல்லாம் விரியத் திறந்து வைக்க கடல்காற்று வீட்டை நிரப்பியது. அவன் தோசை வார்த்துக் கொண்டு வந்ததும், எள் எண்ணெயில் குழைத்த மிளகாய்ப்பொடி தொட்டுக்கொண்டு இரண்டு பேரும் இருந்து கடல் வாசனையோடு உண்டதும் அடுத்து நடந்தது.
அம்பலத்தாடியார் மடத்தெருச் சத்திரத்தில் நள்ளிரவு வரை கணீரென்று ராகத்தோடு பாட்டுச் சத்தம் கேட்டது. கணீரென்ற குரலில் ’ராமனுக்கு மன்னன் முடி தந்தாலே’ என்று தோடியும் ’ஆரோ இவர் ஆரோ’ என்று பைரவியும், ‘ராகவனே சரணம், ரகுராமா உன் சரணம்’ என்று புன்னாகவராளியும், ‘அக்னி பகவானே, வருத்தாதே அனுமனை’ என்று ஆனந்த பைரவியும் கவிராயர் குரலாகப் பரவ, அந்த இசையிலும் தமிழிலும் மூழ்கி தன்னை மறந்து அமர்ந்திருந்தான் ராமோஜி.
ராமநாடக கீர்த்தனைகளை ஒரு குழுவாக அமர்ந்து பாடிப் பிள்ளையவர்களிடம் இருந்து பரிசும், சாற்றுகவியும் வாங்க உத்தேசம் என்றார் அருணாசலக் கவிராயர்.
இத்தனை அற்புதமாக எழுதிவிட்டுப் பாடினால் மட்டும் போதுமா என்று கேட்டான் ராமோஜி.
“இந்த ராம நாடகம் தமிழ் பேசும் பிரதேசம் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் போய்ச் சேரணும் ஐயா. ஆயிரம், லட்சம் ஜனத்துக்கு இது கிடைக்கணும்”.
அவன் சொல்ல, வார்த்தை தடுமாறி உணர்ச்சிவசப்பட்டு கவிராயர் அவனைக் கட்டிக்கொண்டார்.
“சகோதரரே அது நடக்குமா? கண் இல்லாதவன் ராஜபார்வை பார்க்க ஆசைப்படுவது போல் இல்லையா?” என்றார்,
”நடக்கும். நான் இந்த வாரத்தில் ஒரு தீர்வு தருகிறேன்.. கொஞ்சம் பொறுமை காக்க முடியுமா?” என்றான் ராமோஜி. கவிராயரும் தஞ்சை போய் மராட்டா அரசரைக் கண்டு ராம நாடகம் பற்றி எடுத்துச் சொல்லி வர திட்டம் போட்டிருந்தார். அவர் புதுவை வந்துதான் தென்காசிக்குத் திரும்பப் போக இருந்தார் என்று அறிய ராமோஜிக்கு ஆறுதலாக இருந்தது. அதற்குள் நல்லதாக ஏதும் நடக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
வீட்டுக்கு வந்து வெகுநேரம் ’ஆரோ இவர் ஆரோ’ என்று மனதில் யாரோ பைரவி பாடிக் கொண்டிருந்தார்கள். கூடத்துச் சுவரில் ராமோஜியின் மனைவியும், புதல்விகளும் சிரித்தபடி அமர்ந்திருக்கும் ஓவியத்தில் இருந்து அந்தக் குரல் வருவதாகக் கற்பனை செய்தான் அவன். கண்ணில் நீர் திரையிட, ஓவியத்தைக் கையிலெடுத்துத் தடவி விட்டு, “சீக்கிரம் வந்துடறேன்” என்று சொல்லி திரும்ப வைத்து உறங்கப் போனான் ராமோஜி.
Excerpts from my forthcoming novel RAMOJIUM