துரை உட்கார்ந்தபடிக்கே தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கிரிமாசி பண்டிதன் போய் வணங்கி நின்றான்.
”ஆகாரம் வந்தாச்சு, அதானே?”
துரை புகைக் குழாயை சித்தம் செய்யும்படி ஒரு சிப்பாயியை ஏவியபடி விசாரித்தார்.
”ஆமாம், அது தவிரவும் கபுறு உண்டு மகாப்ரபோ”. எய்ட் த காம்ப் வந்திருந்து சொன்னான்.
”என்னவோ அது, சொல்லிப்போடு” கவர்னர் அவனை நோக்கினார்.
எய்ட் த கேம்ப்பை முந்திக்கொண்டு கிரிமாசி பண்டிதன் கபுறு சொன்னான்-
”துரைசானி வர முடியவில்லையாம். கான்சொலர் முசியெ தொத்தல் துரைகளோட பெண்ஜாதி மதிய விருந்துக்கு வரச்சொல்லி அழைத்திருப்பதாக கடிதாசு அனுப்பியிருக்கிறார்கள்”.
சொன்னபோதே அபத்தம் பற்றியதாக கிரிமாசி பண்டிதனுக்கு புலப்பட நடுநடுங்கி நின்றான். அது அரசாங்க காகித உறையில் வந்தாலும் துரைக்கு துரைசானி எழுதின அந்தரங்கக் கடிதாசு ஆச்சே. எப்படி மற்றவர்கள் படிக்கலானது?
துரை வேறே தினுசாகக் கேட்டார் –
”ஏனடா கிரிமாசி பண்டிதனே. மூளையை அரைக்குக் கீழே வைத்து அனுப்பி விட்டானா உன்னைப் படைத்தபோது? என் பெண்டாட்டி எனக்கு ரகசிய சந்தேசம் அனுப்பியிருந்தால் அதையும் படித்து விட்டு என்னிடமே அது சாதாரணமான கபுறு என்ற தரத்தில் சொல்வாயா. சரி தொலைந்து போகட்டும், இனி அம்மாள் பெயரைக் கண்டால் கடிதாசைப் பிரிக்காமல் அப்படியே என்னிடம் சேர்ப்பித்துவிடு. போய் சாப்பிடு. அளவாகக் குடி”.
துரை நல்ல சந்தோஷத்தில் இருந்ததால் கிரிமாசி பண்டிதன் பிழைத்தான். அதைத் தவிர அவர் மகிழ்ச்சியடைய இன்னொரு காரணமும் உண்டு. துரைசானி வரப் போவதில்லை என்பதால் கிட்டத்தட்ட முழு பிற்பகலும், அந்திப் பொழுதும், முன்னிரவும் துரைக்கு தனியாக நிம்மதி தேடி இருக்கக் கிடைக்கிறது.
சிப்பாய்களில் சுத்தமாகத் தெரிந்த இரண்டு பேர், கையில் விரல் காணாமல் போகும் அளவு கை அலம்பிக் கொண்டார்கள். பிறகு கோழியும், மீனும், பிரியாணி சோறும் இன்னும் பெயர் விளங்காத கும்பினி ஆகார தினுசுகளும் வந்த பாத்திரங்களை எடுத்துப் போனார்கள். துரைக்கு முன் மேஜை போட்டு, எதிரில் சுகமாக வீற்றிருக்க ஒரு நாற்காலியும் இட்டு, விருந்து சாப்பிட ஏற்பாடு செய்தார்கள்.
நீங்களும் ஆகாரம் செய்யுங்கள் என்றபடி அவர் கையில் முள் கரண்டியும் கத்தியும், கழுத்தில் துவாலையுமாக உட்கார்ந்தார்.
“போன் அபிதெ”
அவருக்கு நல்ல பசி உண்டாகட்டும் என ராமோஜி பிரஞ்சு மொழியில் வாழ்த்த, அவர் மெர்சி சொல்லி ராமோஜிக்கும் போன் அபிதெ சொன்னார்.
சிப்பாய்கள், காரியதரிசி, கிரிமாசி பண்டிதன், ராமோசி ராயன், நட்டுவன் விட்டல ராயன், தாசிப் பெண்கள் என்று இருபது பேர் இருக்க, ஆகாரமோ முப்பது பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட அனுப்பியதாக இருந்தது.
கூடாரத்துக்குப் பின்னால் மரத்தடியில் எல்லோரும் சாப்பிட உட்கார, சோறும், மற்றதும் சமைத்த பாத்திரங்களை கவர்னர் மாளிகையிலிருந்து வந்தவர்கள் அங்கே கொண்டு வந்தார்கள். எல்லோரும் சிறு கூட்டங்களாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
கூட இருந்து உண்ண யாருமின்றி, நட்டுவன் விட்டல ராயன் தனியாகக் கோழிக்கால் கடித்துக் கொண்டிருந்தான். ராமோஜி பக்கம் வந்தான் அவன்.
ராமோஜி அந்த ரெண்டு பெண்கள் அருகில் பேசிச் சிரித்தபடி இருந்தான். . அவர்களுடைய இருப்பு அவன் மனதை இதமாக நிறைத்திருந்தது.
ஏதோ ஒரு யுகத்தில் அவன் ஞாயிற்றுக்கிழமை பகல் உணவை இந்த புத்திரிகளோடும், பெண்டாட்டியோடும் வார்த்தை சொல்லியிருந்து உண்டிருக்கிறதாக நினைவு. எல்லா நாற்காலிகளும் காலியாக நிற்க, மேலே சாப்பாட்டு ஏனங்கள் ஏதுமின்றி அவன் வீட்டில் தீனிமேசை இன்னும் தூசி படிந்து இருக்கிறது.
அந்தச் சிறு பெண்களுக்கும் அவனுடைய அண்மை பிடித்திருந்தது என்று தோன்றியது ராமோஜிக்கு. அவன் குரலும் செயலும் அவனை ஒரு பிரியம் மிகுந்த தகப்பனாகக் காட்டட்டும் என்று ராமோஜி பிரார்த்தித்தான்.
”பியென் மாஷே… எல்லோரையும் நிறைய சாப்பிடச் சொல்றார் துரை”
கிரிமாசிப் பண்டிதன் முக்கிய செய்தியாக, தாம்பாளத்தில் கரண்டியால் தட்டிச் சொன்னான். ராமோஜி பக்கத்தில் ரத்னா ரகசியம் பேசும் குரலில், “நீ தின்னு. மல்லாக்கொட்டை தலையா. துரைக்கு கழுவி விட பெலம் வேணும்” என்றாள்.
அவர்களோடு ராமோஜியும் புன்னகைத்துக் கலந்து கொண்டான்.
“முசியே, நீர் என்ன சொல்றீர்.. இல்லை நீரும் அந்த சேவை பண்ணத்தான் வந்திருக்கீரா?”
புவி என்ற மற்றவள் நட்டுவனாரைத் துடுக்காகக் கேட்க, இரு பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் மடியில் தட்டிச் சிரித்தார்கள்.
இப்படியே இன்று பொழுது கழிந்து விடட்டும் என்று இருந்தது ராமோஜிக்கு. கிரிமாசி லொங்கு லொங்கென்று ஓடி வந்தான்.
”துரை கூத்து பாக்கணுமாம். போடுங்க.. சீக்கிரம்”
அவன் சொன்னபோது கை கழுவி வந்த இரண்டு பெண்களும் பின்னால் இருந்த நட்டுவனாரைக் கூப்பிட்டார்கள். சீக்கிரம் ஆகட்டும் என்றான் கிரிமாசி பொறுமை இழந்து.
“ஓய் பண்டிதரே, சலங்கை கட்டி வரவாவது நேரம் குடும். கண் எழுதாட்டாலும் தலை வாராட்டாலும் சதுர் உடுப்பு போட்டுக்காட்டாலும் பரவாயில்லையா? நட்டுவனார் வந்து உக்கார்ந்து தாளக்கட்டு ஜதி சொல்ல வேணாமா?”
ரத்னா சீறினாள். அவளுக்குள் இருந்த சந்தோஷமான சிறுமி போன இடம் தெரியவில்லை.
”ஒரு மண்ணும் வேணாம். துரை வான்னு கூப்பிட்டா வந்து நிக்கணும். ஆடுன்னா ஆடணும். நிறுத்துன்னா நிறுத்தணும்”.
எய்ட் தெ காம்ப் மறுபடி துரை பக்கம் இருந்து கூப்பிட இரண்டு பெண்களும் துரை இருந்த கூடாரத்துக்குள் போனார்கள். மேஜையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தான் துரை. பக்கத்தில் ராமோஜி மரியாதையாக நின்று கொண்டிருந்தான்.
ஆடுங்கடி என்றான் ஒரு சோல்தாது.
அடி புடின்னா பல்லு எகிறுடும் என்றாள் புவி. ராமோஜிக்கு அவளுடைய கோபம் ரொம்பப் பிடித்துப் போனது.
அழகாக நின்று துரைக்கு சதுர் பாணியில் வணக்கம் சொன்ன பெண்கள் புடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டார்கள். சாணி வரட்டி தட்டுகிற மாதிரி சொலுதாதுகள் சொத்தென்று கைதட்ட, ஆடத் தெரிந்த இரு பெண்களும் கள் புகட்டப்பட்ட குரங்குகளாகக் குதிக்க ஆரம்பித்தார்கள்.
துரைக்கு பிடிக்கணும்னா பாவாடையை மேலே தூக்கி கால் தெரியணும் என்றான் ஒரு சொலுதாது. ரத்னா அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள் –
“மயிரைப் பிடுங்கச் சொல்லு”.
ராமோஜிக்கு அந்தப் பெண்ணின் கண்ணில் உக்கிரம் தகித்து கூடாரத்தையே எரிச்சுப் போடும் என்று தோன்றியது. ஆடத் தெரிந்தவளையும் பாடத் தெரிந்தவளையும், அதெல்லாம் இருக்கட்டும், ஒரு பெண்ணை, இதைவிடக் கேவலமாக யாரும் அவமானப்படுத்த முடியாது.
தியூப்ளெ துரை கைதட்டி நிறுத்தினார்.
நிப்பாட்டு என்று கிரிமாசிப் பண்டிதன் சொல்லியபடி கைவிரித்து நிற்க, துரை அவன் மேல் எச்சில் படிக்கத்தை விட்டெறிந்தார். வடக்கு பிரான்சு கொச்சை பிரஞ்சில் அவர் சொன்ன புழுத்த வசவு ராமோஜிக்குப் புரிந்தது தொடர்ந்து துரை பேசியதும்.
”என்ன கூத்துடா போடறாளுங்க.. தாளம் இல்லே.. பாட்டு இல்லே.. ஆளுக்கு இருபது கசையடி கொடுக்கச் சொல்லு. இவளுகளோட வாத்தியார் எங்கே? அவனுக்கு பத்து கசையடி தரச் சொல்லு”.
துரை மர்மஸ்தானத்தில் மிளகாய்த்தூள் விழுந்தது போல கத்தினார்
சிப்பாய்கள் முகத்தில் உடனடியாக சந்தோஷத்தைக் கண்டான் ராமோஜி. இந்தக் களவாணிப் பயல்கள் பார்த்து ரசிக்கவுமாக கவர்னர் சவுக்கடி தண்டனை எல்லாம் வைத்துப் பார்க்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. அடுத்தவர்கள், அதுவும் பெண்கள் அடி வாங்குவதில் இந்தப் புடுங்கிகள் பார்த்து மகிழ என்ன உண்டு?
அவன் குரல் உயர்த்தாமல், அதே நேரம், திடமாகப் பேசத் தொடங்கினான் –
”ப்ரபோ, இவர்கள் எந்தப் பாடலுக்கு ஆடினால் சிறப்பாக வரும் என்பதை தீர்மானம் செய்து கொண்டிருக்கும்போது சமூகம் கூப்பிட்டனுப்பியதால் அதை தேர்வு செய்ய நேரம் கிடைக்காமல் ஆளுக்கு ஒரு பாட்டை நினைத்திருக்க நட்டுவனும் வந்து சேர முடியலை. ஒரு ஐந்து நிமிடம் சிப்பாய்களும் மற்ற அதிகாரிகளும் இவர்களை நிதானமாக வரச் சொல்லியிருந்தால் மனம் கவரும் பாட்டும் ஆட்டமும் அமர்க்களப்பட்டிருக்கும். இப்படி சும்மா குதிக்க அவர்கள் படிக்கவில்லை. நாட்டியத்தை நுட்பமான அபிநயத்தோடு கதை சொல்லும் கலையாகத்தான் எங்கள் மக்களுக்குப் பழக்கம்”.
வடக்கு பிரான்ஸில் வழங்கும் பிரஞ்சு உச்சரிப்பில் ராமோஜி இதைச் சொல்ல, தலையசைத்துக் கேட்டபடி இருந்தார் தியூப்ளே.
துரை சரிதான் என்று சொல்லி ”இந்தக் குட்டிகளை திடுமென வரச்சொன்ன சிப்பாய்களும் உத்தியோகஸ்தர்களும் ஆளுக்கு நாலு சாட்டையடி வாங்கட்டும்” என்று புது உத்திரவு போட அவர்கள் எல்லோரும் அந்த ஷணம் நெடுஞ்சாண்கிடையாக துரை காலில் விழுந்து நெற்றியால் நிலத்தை முட்டி சிரமம் காட்டி, பிழைத்துப் போகிறோம் மன்னியுங்கள் என்று மன்றாடினார்கள்.
இந்த காட்சிகளை ரசித்து துரை மதியம் சியஸ்டாவுக்கு (பகல் உறக்கம்) கிளம்பிவிட்டார். போகும்போது ராமோஜியைப் பார்த்து நீர் போய் வாரும். முரட்டாண்டி சாவடி விஷயமாக நாளைக்கு தொடரலாம் என்றார்.
நல்லது என்று ராமோஜி அனுப்பிவித்துக்கொண்டு புறப்பட்டு வரும்போது அவன் புத்தியில் புது திட்டம் உருவாகி இருந்தது.
Excerpts from my forthcoming novel RAMOJIUM