கிராமத்திலிருந்து இரண்டு மாட்டு வண்டிகளைச் சித்தம் செய்து ராமோஜியும் நட்டுவனாரும் ஒரு வண்டியிலும், ரத்னாவும் புவியும் இன்னொன்றிலும் பயணப்பட்டார்கள். வழியில் அருணாசலக் கவிராயரையும் அம்பலத்தாடியார் மடத்துத் தெருவில் பார்த்தார்கள். நல்ல வேளை அவர் வேறெங்கும் பயணப்பட்டிருக்கவில்லை. பக்கத்து வைசியாள் தெருவில் ராமோஜி வீட்டுக்கு வர முடியுமா என்று கேட்க அவர் வந்தேன் என்றார் சந்தோஷமாக. அவ்விதமே அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, ராமோஜி வண்டிக்குப் பக்கத்தில் வார்த்தை சொல்லியபடி நடந்து வர, எல்லோருமாக வந்து சேர்ந்தார்கள்
ராமோஜி கவிராயரிடம் சொன்னான் –
“நீங்கள் உங்கள் மகத்தான படைப்பை பாட்டுகளாக பாடி அரங்கேற்ற உத்தேசித்துள்ளீர்கள். அதற்கு முன் பரம ரசிகரான பிள்ளைவாளிடம் பாடிக் காட்டலாம் என்று வந்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு இதை இன்னும் பெரியதாக, நாட்டிய நாடகமாகவே நடத்த பிள்ளைவாள் மூலம் ஏற்பாடு செய்ய முயல்கிறேன். இது பாடியும் ஆடியும் நிறையப் பேரை அடைய வேண்டியது. சங்கீதம் தெரிந்த சிலரை மட்டும் எட்டினால் போதவே போதாது”.
ராமோஜி சொல்லச் சொல்ல, கவிராயர் முகத்தில் பரவசமும் சந்தோஷமும் போட்டியிட்டன.
கவிராயர் காகிதக் கட்டுகளாகவும் ஓலைச் சுவடிகளாகவும் கொண்டு வந்திருந்த கீர்த்தனைகளை அங்கிங்கு இருந்து அவர் எடுக்க, முதலில் வந்தது சரணாகதி கேட்டு வந்த விபீஷணனிடம், தந்தேன் தந்தேன் தந்தேன் என்று ராமபிரான் சரணாகதி அளித்ததாகச் சொல்லும் பரஸ் ராகப் பாடல் –
கார் உள்ள அளவும் கடல் நீர் உள்ள அளவும் ஈரேழ்
பார் உள்ள அளவும் என்றன் பேர் உள்ள அளவும்
தந்தேன் தந்தேன் தந்தேன் தந்தேன்
நட்டுவன் காட்சியை வர்ணித்தான். கவிராயரும் தன் பங்குக்கு விபீஷண சரணாகதியை வார்த்தைகளாகச் சித்தரித்தார்.
சிஷ்யைகள் உடனே சுவரக் குறிப்புகள் பார்த்து தத்ருபம் அவர் நினைத்தபடியே பாடினார்கள். மேடை நிகழ்ச்சியில் இதைப் பாட வேண்டிய பாட்டுக்காரப் பெண்கள் இனி வருவார்கள். குழலும் வீணையும் கூடச் சேரும்.
ரத்னாவும் புவனாவும் ஆட ஆரம்பிக்கும்போது வாசலில் நிழலாடியது. காலையில் குத்த வைத்ததாக சிறைப்பிடிக்கப்பட்ட மிருதங்கக் காரரும், தபலை மிழவு வாத்தியக்காரரும் நின்றிருந்தார்கள்.
“பிள்ளையவர்களை மரியாதை நிமித்தம் கண்டு வரப் புறப்பட்டோம். அவர் வீட்டில், பிள்ளையவர்கள் மிகத் தளர்ந்து இருப்பதால் இன்று சந்திக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்படியே உங்களைப் பார்க்கலாம் என்றும், பார்த்து விட்டு வேதபுரீஸ்வரர் கோவிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து வாசித்து வரலாம் என்றும் புறப்பட்டோம்” என்றார்கள் அவர்கள்.
”நல்ல நேரத்துக்குத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். மிருதங்கத்தையும் தபலையையும் இறக்கி உள்ளே கொண்டு வாருங்கள்” என்றான் ராமோஜி.
அவர்கள் அவ்வண்ணமே எடுத்து வர அடுத்த பத்து நிமிடத்தில் மிருதங்கம் சித்தமாகி தாளத்தை கிண்ணென்று அறையில் பரப்பியது. தபலா தளுக்கோடும் குலுக்கோடும் அதைப் பின் தொடர்ந்தது. முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக்கொண்டு லட்சணமாக வந்தார்கள் ரத்னாவும் புவனாவும். பாட்டு இசைக்கும் பெண்களும் வந்திருந்தார்கள்.
”ஆரோ இவர் ஆரோ பார்க்கலாமா?” ராமோஜி ஆர்வத்துடன் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்று கவிராயர் வரிசையில் பிணைத்து வைத்திருந்த, அந்தப் பாட்டு எழுதிய காகிதத்தை விட்டல ராயன் நட்டுவனிடம் எடுத்துக் கொடுத்தபடி சொன்னார் –
“மிதிலையில் அரண்மனை கன்னிமாடத்தில் நிற்கும் சீதையை, வீதியில் லட்சுமணனோடு நடந்து வரும் ராமபிரான் பார்க்கிறான். அப்போது சீதை நினைப்பதாக வரும் பாட்டு இது”
நட்டுவன் தட்டவாடியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு முன்னால் வைத்தபடி சொன்னான் –
”ரத்னா ராமனாக இருக்கட்டும். புவி கன்னிமாட சீதை”
குழலும் வீணையும் பைரவி ராகத்தை இனிமையாக எடுக்க, ராமன் மிதிலை நகர்த் தெருவில் விநோதம் எல்லாம் பார்த்து நடந்து வருகிறான். தெருவைத் தன் பார்வையால் குளிர்வித்தபடி சீதை கன்னிமாடத்தில் நிற்கிறாள். அந்த அற்புதமான கணத்தில் இரண்டு ஜோடி கண்கள் சந்திக்கின்றன. ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவது போல் நோக்க, பார்வையை வேறு திக்கில் திருப்பி மறுபடி சீதையைப் பார்க்கிறான் ராமன். சீதை தலைகுனிந்து நின்று அடுத்த வினாடி அவளும் மறுபடி நிமிர்ந்து ராமனைப் பார்க்கிறாள். பாடல் ஒலிக்கிறது –
ஆரோ இவர் ஆரோ என்ன பேரோ அறியேனே
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னிமாடம் தன்னில் முன்னே நின்றவர்
ஆரோ இவர் ஆரோ…
அழகான அந்தச் சித்தரிப்புக்கு, நிருத்தம் குறைவாக, உடல் அழகாக வளைந்தும், நிமிர்ந்தும், கண்களும் உதடுகளும் சற்று துடித்தும், இமைகள் கொட்டியும் அந்தப் பெண்கள் அபிநயிக்க, மிதிலை நகரில் ஒரு மாலை நேரக் காட்சி அங்கே நேர்த்தியாக விரிந்தது. ராமோஜி கண்ணிமை கொட்டாமல், மனமுருகக் கை குவித்து நின்றான்.
கரகரவென்று கண்ணீர் விட்டபடி அருணாசலக் கவிராயர் குரல் நடுங்கச் சொன்னார் –
“ஒரு கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்? எழுதினது யாருக்கு எப்படி யாரால் போகணுமோ அது நடக்கத் தொடங்கிவிட்டது. இசை நிகழ்ச்சியாக திருவரங்கன் சந்நிதியில் ராமநாடகம் அரங்கேற ஆண்டவன் அருள் செய்தான். அவன் கருணையால் நாட்டிய நாடகமாக இந்தக் குழுவோடு ராமநாடகக் கீர்த்தனைகளை பகிர்ந்து கொள்ள, மேலெடுத்துச் சென்று அரங்கேற்றம் நிகழ என்னாலான எல்லாம் செய்யச் சித்தமாக இருக்கிறேன், ராமோசி ராயரே.”
அவன் கைகளைப் பிடித்தபடி உருகி நின்றார்.
Excerpts from my forthcoming novel RAMOJIUM