அடுத்த இரண்டு வாரங்களில் ஏகப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் அரங்கேறின.
அருணாசல கவிராயரின் கீர்த்தனைகள் படியெடுக்கப்பட்டு ராமோஜியிடம் வழங்கப்பட்டன.
ஆனந்தரங்கம் பிள்ளை கவர்னரை வந்து பார்க்கவும் கபுறு சொல்லவும் கேட்கவும் நேரம் செலவழித்தாலும் துரைக்கு உடம்பு சுகவீனம் கண்டதால் அதெல்லாம் மறுபடி நிறுத்திப் போடப்பட, வேண்டிய ஓய்வு பிள்ளைவாளுக்கும் கிட்டியது.
கபுறு கேட்பது, பதிவது, ரொம்ப முக்கியமானதை துரைக்கு லிகிதமாக எழுதி ராமோஜி மூலம் சேர்ப்பித்து பதிலையும் அதேபடிக்கு வாங்கி வருவது என்று ஒரு சீலம் கடைப்பிடிப்பானது.
ராமோஜி ராமநாடகக் கீர்த்தனைகள் பற்றி பிள்ளைவாளிடம் சொல்ல அவருக்கும் சுவாரசியமேற்பட்டு கவிராயரைப் பார்க்கணுமே என்றார். அவர் தென்காசி போனார் என்று ராமோஜி அறிவிக்க வரச் சொல்லணுமையா என்றார் பிள்ளைவாள். அதேபடிக்கு கவிராயர் வந்து ஒரு மணி நேரம் ஒரு கீர்த்தனை என்று படித்துப் பாடி இருந்து, பிள்ளைவாளுக்கு களைப்பு தட்டும் போது ஓய்ந்து உட்கார்ந்து என்று இப்படி கிட்டத்தட்ட முழு நூலையும் இசைக்கக் கேட்டாகிவிட்டது.
நாட்டிய நாடகமாக இதை நிகழ்த்தப் பொருளுதவி செய்வதாக பிள்ளையவர்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். அவருடைய நண்பர்கள் சிலரும் இந்த விஷயத்தில் உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்கள்.
நாட்டிய நாடகமாக ராமநாடக கீர்த்தனைகளை நடத்திப் பார்க்கும்போது, நடுவிலே சுத்தமாக வீட்டையும் வெளியையும் வைக்க வேண்டியதன் அவசியத்தை தனியாக குறுக்குச்சால் வெட்டாமல் பாட்டோடு அதை சொல்லி முடிக்க முடிந்தது. ராமோஜி வழி செய்தது தான் இந்த நடவடிக்கை. கவிராயரும் கூடிய மட்டும் ஒத்துழைத்தார்.
தொடக்கத்தில் கணபதி கவுத்துவமாக மணக்குள விநாயகரை வழிபட்டுப் பாடி ஆட புதுசாக ஒரு உருப்படியை அவர் எழுதிக் கொடுத்தார்.
முரட்டாண்டி சாவடி பற்றி பாட்டிலோ ஆட்டத்திலோ பெரியதாக எதுவும் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி விட்டார் பிள்ளையவர்கள். எதற்கும் இருக்கட்டும் என்று முரட்டாண்டிச் சாவடி வர்ணம் ஒன்றை சஹானா ராகம், மிஸ்ரஜாதி அட தாளத்தில் இயற்றித் தந்தான் ராமோஜி.
”சொல்லுவோம் தியூப்ளே பேட்டையென்றே பெயர்
பல்லுடையும் மற்றெதும் பகன்றால் காதறுந்து”
என்று தொடங்கும் அது.
விட்டல ராயன் நட்டுவன் ஆட்டக்காரிகளாக இன்னும் எட்டு பேரை ஏற்பாடு செய்தான். எல்லோரும் ரத்னா, புவனா வயசுப் பெண்கள்.
ராமோஜி தினம் சாயங்காலம் இந்தப் பெண்களும் நட்டுவனாரும் தாளக்காரர்களும், குழல், வீணை வாசிக்கிறவர்களும், பாட்டுக்காரிகளும் பயிற்சி செய்வதை தவறாமல் வந்து பார்த்து உற்சாகப் படுத்தி வந்தான்.
அவன் இப்போது வாரம் ஒரு தடவை மட்டும் துரையைப் போய்க் கண்டு ஆசாரம் செய்து (மரியாதை செய்து) வரணும் என்று விதிக்கப்பட்டது.
அதே படி இரண்டு வாரம் திங்கள்கிழமை மதியம் நாலு மணிக்கு துரையின் கவர்னர் மாளிகையில் போய்ப் பார்த்து, ஆட்ட பாட்டம் தயாராகி வருவதை ஆனந்தரங்கப் பிள்ளை நிர்தேசம் செய்தபடி சொல்லி வந்தான்.
முரட்டாண்டி சாவடி பெயர் பற்றி ரொம்ப வற்புறுத்தினால் கடைசி நிமிடத்தில் அவன் இயற்றிய வர்ணத்தைப் பெண்கள் ஆடி அறிவிப்பதாக நாட்டியத்தில் சேர்த்து விடலாம் என்று தீர்மானித்திருந்தான்.
துரைக்கு முன்னால் கூட அந்த வர்ணத்தை ரெண்டு வரி பாடிக் காட்டினான். போதும் என்று சொல்லிவிட்டார்.
துரை இதெல்லாம் ரொம்ப கவனம் எடுத்துக் கேட்கவில்லை. அவருக்கு ஆட்டமோ பாட்டோ நடந்து, கூடவே அவர் பெயர் நாலு பேர் மனசில் தங்கினால் பெரிய சந்தோஷம். அது மதறாஸ் வரை பரவி இங்கிலீஷ் கும்பினி துரைகள் உட்காரும் இடத்தில் எரிய வைக்க உற்சாகம் காட்டினார்.
இன்றைக்கு முதல் ஒத்திகை – முழுக்க தொடக்கத்தில் இருந்து மங்களம் பாடும்வரை. வெள்ளிக்கிழமை அரங்கேற்றம் வேதபுரீஸ்வரன் கிருபையிலே.