ராமோஜியம் – ராம நாடகம் – ராமோசி ராயன் ஏற்றெடுத்த கடமைகள்

பிள்ளைவாள் கருணையாலும், அவருடைய மற்றும் அவருக்கு ஆப்தர்களின் தன சகாயத்தாலும் ஈஸ்வரன் தர்மராஜா தெருவில் ஒன்றும், அம்பலத்தாடியார் மடத்து தெருவில் இன்னொன்றுமாக வீடுகளை வாடகைக்குப் பிடித்திருந்தார்கள்.

தர்மராஜா தெரு வீட்டு உப்பரிகையில் தனி கமரா (அறை) கொடுத்து கவிராயரை இருக்கவும் பண்ணியானது. அந்த வீட்டில் சங்கீதக்காரர்கள் எல்லோரும் தங்கியிருந்தார்கள்.

அம்பலத்தாடியார் தெரு வீட்டில் நாடகத்தில் ஆடப் போகும் அரம்பையர்களும் பாடப் போகும் வனிதைகளும் தங்கிக் கொண்டார்கள்.

இரண்டு வீட்டுக்கும் சேர்த்து அம்பலத்தாடியார் தெரு வீட்டில் மூன்று வேளை சமையல் செய்து பரிமாற ஒரு கோஷ்டி சமையல்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டார்கள். அலமுசு அலமுசு என்று எல்லோரும் நச்சரித்தபடியால் தினம் காலை, மாலை காப்பி உபசாரம் எந்தக் குறைவுமில்லாமல் நடத்திக் கொடுக்கப்பட்டது.

புதன் கிழமை பகல் நேரம். ராமோஜி காலையிலேயே கிளம்பிப்போய் புடவைக் கிடங்கில் சாயம் தோய்த்து அனுப்ப வைத்திருந்த துணி விபரம் சரி பார்த்து, சிப்பந்திகள் அவரவர்க்கு பொறுப்பு ஒப்படைத்து தேவையான காசும் அவரவருக்குத் தந்து கணக்கெழுதி வீட்டுக்கு வந்தான்.

வந்ததும் ராமோஜி வீட்டு சமையல்காரன் அவன் ஏற்கனவே சொல்லியிருந்தபடிக்கு அம்பலத்தாடியார் தெரு வீட்டில் சமைத்ததை எடுத்து வந்து ராமோஜிக்குக் கொடுத்தான். அவன் தலைமையில் தான் இந்த இரண்டு வாரமாக அம்பலத்தாடியார் தெரு வீட்டுச் சமையல் நடக்கிறது.

தோசைகளையும், அரிசி வேகவைத்து வெல்லம் கலந்துச் செய்த மோதகங்களையும் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கையில் சீலைக் குடையோடு அம்பலந்தாடியார் தெரு வீட்டுக்கு நடந்தான் ராமோசி ராயன்.

நாட்டியக்காரிகள் எல்லோருமே அழகான பதின்ம வயதுச் சிறுமிகள் என்று அவன் மனம் சொன்னாலும் ரத்னாவையும் புவனலோசனியையும் அவனுக்கு நிறையப் பிடித்துப் போயிருந்தது. அவர்கள் உருவில் அவனுடைய இறந்துபோன இரண்டு புதல்விகள் வந்திருப்பதாக அவ்வப்போது தோன்றிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரையும் தத்து எடுக்க அறிவிப்பு கொடுத்து தேவையானதை செய்தால் என்ன என்று தோன்றியது அவனுக்கு. மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்கள் அந்தப் பெண்களின் தாயார்கள்?

ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பரிச்சயம் உள்ளவர்கள் என்பதால் சகோதரிச் சண்டை எதுவும் வராது. ராமோஜியின் ஜாதி ஜனம் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள். படுத்தினாலும் அவனுக்குக் கவலை இல்லை.

பிரஞ்சு சட்டத்தில் தத்தெடுக்க வழியில்லை. இங்கத்திய நடைமுறையிலும் பெண் குழந்தையை வாரிசாக அறிவிக்க முடியாது. ஆனால் என்ன, ராமோசி ராயன் இதைத் தீர்க்க வழி காணுவான்.

எப்படியும் அரங்கேற்றத்தோடு எல்லாம் முடியப் போகிறதில்லை. இந்த ஆட்டமும் பாட்டும் வேறு ஊர்களிலும் மேடையேறும். அவ்வப்போது அவர்களோடு ராமோஜியும் சென்று பார்ப்பான். இந்த ரெண்டு பெண்களோடு இன்னும் கூடுதலாகப் பழக, பரஸ்பரம் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும்.

வருஷம் திசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்போடு முடியும்போது ராமோஜி மறுபடி ரெண்டு புதல்விகளோடு சந்தோஷமாக வீட்டிலிருந்து கொண்டிருப்பான். அந்தத் தீனிமேசையில் சூடான சுவையான உணவோடு, சிரிப்பும் கலகலப்பும் வளைய வந்து கொண்டிருக்கும்.

அம்பலத்தாடியார் மடத்துத் தெரு வீட்டில் அவன் நுழையும்போதே வீணையின் நாதம் அவனை வரவேற்றது. மோகனம் என்ற மோகம் தரும் அதிகாரத் தொனியில் நடைபோடும் ராகம் அது. ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று திருமாலைத் துதிக்கும் அந்தப் பாடலை கவித்துவம் முடிந்து, ரத்னாவும், புவியும் சேர்ந்து ஆட, ராமோஜியின் மனதை அள்ளியது.

ஆரண்ய காண்டம் தொடங்கியிருக்கிறது. ராமன் கானகம் போகப் புறப்படும்போது சீதை தன்னை விட்டுத் தனியாகப் போவது முறையா என்று விம்மும் உருக்கமான உசைனி ராகப் பாடல் தொடர்ந்தது.

எப்படி மனம் துணிந்ததோ சாமி வனம்போய்
வருகிறேன் என்றாலிதை ஏற்குமோ பூமி

சீதையாக முகத்தில் சோகமும், இரைஞ்சுதலுமாக புவனா உருக்கமாக அபிநயித்து ஆட, ராமன் ஆட்டக்காரி ரத்னா கம்பீரம் குறையாமல் சீதையை தன்னோடு கூட்டிப் போக மாட்டேன் என்று சொல்லும் காட்சியை இரு பெண்களும் உயிர்பெற்று நிகழ வைத்தார்கள்.

பாடகி இந்திராளும் தேவகியும் உசைனி ராகத்தை ஆலாபனம் செய்ய, குழலில் அதைக் கொண்டு தருகிறான் சேஷாசலமய்யன் என்ற வயதான புல்லாங்குழல் கலைஞன்.

குழலில் அப்படிப் பொங்கிப் பிரவகித்து வழிந்த இசையின்பத்தை வீணையில் தேன் திட்டாகக் கொண்டு வந்தவன் தஞ்சாவூர் குப்பண்ணா. விட்டல ராயன் நட்டுவனாரின் சிநேகிதன். அவன் சொல்வதற்கு முன் அந்த சங்கதி நினைத்தபடி வந்து விழும், வீணை நரம்புகள் அதிர.

நட்டுவாங்கம் செய்ய அமர்ந்த விட்டல ராயன் நட்டுவனாரின் வாயிலிருந்து மத்தாப்பு பூ உதிர்ப்பது போல் ஜதிப் பிரவாகம். அதற்கு மென்மையாக ஈடுகொடுத்து தட்டவாடிக் கோல்கள் அவன் கைகளில் உயிர்கொண்டு துடித்தன

யுத்த காண்டம். போருக்கு வந்த இளம் இந்திரஜித்தாக கூட்டத்திலேயே சிறிய பெண் ஒருத்தி தொம்மென்று ஒலி எழுப்பிக் குதித்து ஜதியோடு ஆடி வரும்போது குறுக்கே வந்த லட்சுமண வேடப் பெண் – அவளும் பனிரெண்டு வயது இருப்பாள் அதிகம் போனால் – பாதம் முன்பின்னாகப் போய் இடற, இந்திரஜித் ஆட்டப்பெண் தரையில் விழுந்தாள்.

அவள் முகம் வலிக் குறிப்பைக் காட்ட ராமோஜி முன்னால் ஓடினான். இந்திரஜித்தின் காலைத் தன் மடியில் வைத்து நீவி விடும்போது வலியின் உச்சத்தைத் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததை அவள் உணர, ராமோஜி மனதில் தனக்குப் பிறந்த மகளுக்கு வலி நீக்க முன்செல்லும் தந்தையாக, அபூர்வமான அந்த கணத்தில் தன்னை உணர்ந்தான்.

அவன் மனைவி தங்கம்மா கூட இருந்தாலும் அவளுக்கும் இதே அனுபவப்பட்டிருக்கும்.

அன்பு புத்ரிகள் சுந்தரி, சௌந்தரி! ரெண்டு பேரும் தெய்வத்தின் நந்தவனத்தில் பூப்பந்து விளையாடுங்கள் என் கண்மணிகளே. விரைவில் வந்து விடுகிறோம்.

ராமோஜிக்கு கண்ணில் நீர் மறைக்க மெல்ல எழுந்தான். போய் ஆடு என்று அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தபடி நட்டுவனார் அருகே உட்கார்ந்தான் ராமோஜி.

சுந்தர காண்டத்தில் சீதா பிராட்டியை அனுமன் ராவணனின் சிறையில் சந்தித்து கணையாழி தரும் அபூர்வ காட்சி அடுத்து ஒத்திகையில். கணையாழி தருவதாக அபிநயிக்கும் அனுமன் வேடமிடும் சிறுமி ஜதியோடு கணையாழியை சீதாபிராட்டியிடம் எடுத்து நீட்டுகிறாள். ஒரு வினாடி தான். அதைத் திரும்பப் பின்வலிக்கிறாள்.

சீதையின் முகத்தில் ஒரு வியப்பு தோன்றி மறைகிறது. அனுமன் தன் கையில் எடுத்த சிறு பட்டுத் துணியில் அந்தக் கணையாழியைத் துடைத்துச் சுத்தம் செய்து மரியாதையோடு அதை சீதை பிராட்டியிடம் நீட்டுகிறான்.

சபாஷ் என்றான் ராமோஜி. விட்டல ராயன் நட்டுவனார் சொல்லிக் கொடுத்த சீலத்தை அவன் பாராட்டும் முன் விட்டல ராயன் சொல்கிறான் – ”இந்தக் குழந்தைகளே கற்பனை செஞ்சது. ரத்னாவும் புவியும்”.

நாளை முழு ஒத்திகை. உடுப்பும் ஒப்பனையுமாக கடைசி ஒத்திகை. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ராமபிரான் அருளோடு வேதபுரீஸ்வரன் கோவிலில் அரங்கேற்றம்.
மோஜி செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன உண்டு என்று யோசித்தான்.

கோவில் வெளிப் பிரகாரத்தில் மேடை அமைத்து முன்னால் பந்தல் போடும் வேலை நடந்து வருகிறது.. இன்றைக்கு முடித்துக் கொடுப்பதாக பந்தல்காரர் சீராமுலு நாயக்கர் சொல்லியிருக்கிறார். விசாரிக்க வேண்டும்.

சான் பால் சம்பா கோவில் சின்ன பாதிரி ஒருத்தர் நாட்டியம், நாடகம் இதற்கெல்லாம் ராஜாங்கம் ஏன் செலவு செய்யணும் என்று ஞாயிற்றுக்கிழமை பூசை நேரத்தில் சத்தமாகப் பேசியதாக கபுறு வந்தது. ஆனந்தரங்கம் பிள்ளைவாளிடம் சொன்னபோது ”நான் கவனிக்கிறேன். நீர் மனசை அலட்டிக்கொள்ள வேணாம்” என்று சொல்லிவிட்டார். அது எந்த நிலையில் இருக்கிறது என்று பிள்ளைவாளிடம் விசாரிக்கணும்.

நான் கவனிக்கிறேன் என்று சொல்லி அவர் ஏதும் செய்யாமல் போனதால் புராதனமான வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்துத் தள்ளுவதை பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்து போச்சே.

ராஜாங்கப் பணம் ஒரு துட்டு கூட ராம நாடகக் கீர்த்தனை நாட்டிய நாடகத்துக்கு வரவு கிடையாது என்பதை ஊரே அறியும். அறியாததுபோல் நடித்தவர்களை பிள்ளையவர்கள் தட்டிக் கேட்கவேண்டும். கேட்பாரா?

Excerpts from my forthcoming novel RAMOJIAM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன