ராமோஜியம் நாவலில் இருந்து – புதுச்சேரியில் ராமநாடகம் அரங்கேற்றம் – சில குறிப்புகள் – புதுவை அத்தியாயம் நிறைவு

ராமோஜியம் நாவல் நூலாக ஆயத்தங்கள் தொடங்கின.

கோவிலில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றத்தை உத்தேசித்து லட்சார்ச்சனையும் சகல தீப தரிசனமும் ஏற்பாடு ஆகியுள்ளது. திருமுறை சொல்லும் ஆறு ஓதுவாரமூர்த்திகளும் நாள் முழுக்க தேவாரம் பாடவும் வகை செய்திருக்கிறது.

ஆனந்தரங்கர் பரிவட்டமும் புஷ்பமாலையும் பொன்னாடை வஸ்திரமும் கொடுத்து அருணாசல கவிராயருக்கு மரியாதை செய்யவும் ஆவன செய்யப்படுகின்றன.
அதெல்லாம் எப்படிப் போகிறதென்று ராமோஜி தெரிந்து கொள்ள வேணும்.

பொற்கொல்லர் தங்கப்பனாசாரி கவிராயருக்கு மரியாதை செய்ய அளிக்க, மூணு பவுன் தங்கத்தைத் தட்டித்தட்டி நெளிமோதிரமாக்கி வருகிறார். கூடவே ஒரு பவுனில் ரத்னா, புவனா என்ற இந்த ஆட்டக்கார பெண்களுக்கு ஆளுக்கொரு கழுத்துச் சங்கிலியும் தர ஏற்பாடு ஆகிறது. மற்ற ஆட்டக்காரிகளுக்கும், பாட்டுக்காரிகளுக்குத் தலைக்கு முக்கால் பவுனில். வாத்தியக்காரர்களுக்கு தலைக்கு அரைப்பவுன். நட்டுவனாருக்கு ரெண்டு பவுனில் கடுக்கன் கொடுக்கவும் தென்காசியிலிருந்து அவருடைய மனைவியைக் கூட்டி வந்து ஒரு பவுன் மோதிரமும் தரவும் திட்டம் செய்திருக்கிறார்கள். நகை வேலை எல்லாம் முடிந்ததா? பாட்டும் ஆட்டமும் பார்த்தபடி இங்கேயே இருந்தால் அதெல்லாம் கிரமமாக எப்படி நடக்கும்?

முழு ஒத்திகை பிரச்சனை எதுவும் இன்றிக் கடந்து போனது. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆறரைக்கு வேதபுரீஸ்வரர் சந்நிதியில் அர்ச்சனை செய்த பிறகு நட்டுவன் விட்டல ராயன் மரியாதை செய்யப்பட்டான்.

மணக்குள விநாயகப் பெருமான் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் அர்ச்சனை செய்து தேங்காய் பழ காளாஞ்சியும், மாலை மரியாதையும் அவனுக்கும் கவிராயருக்கும் தரப்பட்டது.

மிருதங்கமும் தபலை என்ற மிழவும் சுருதி சேர நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அந்த வாத்தியக்காரர்களை சாயந்திரம் ஐந்து மணிக்கே வந்து மேடையில் உட்கார்ந்து சுருதி சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தாலும் நாட்டியம் ஆரம்பமானபோது மற்ற வாத்தியங்களோடு சேர்ந்து சுஸ்வரமாக ஒலிக்க வாத்தியத்தின் வாரை இன்னும் கொஞ்சம் இறுகக் கட்டி சிரமப்பட்டார்கள்.

சாயந்திரம் நாலு மணிக்கே நாட்டிய கோஷ்டி கோவில் பிரகாரத்துக்கு வந்துவிட்டது. தினசரி அந்த நேரத்துக்கு காப்பி கொடுத்துப் பழக்கப் படுத்தப்பட்டதால் ஒரு பெருங்கூட்டமே காப்பி காப்பி என்று அலைய கோவில் பிரகாரத்துக்கே காப்பி கலந்த தவலையோடு வந்து விட்டான் ராமோஜியின் சமையல்காரன்.

”கோவில் காப்பி குடிக்கவோ, கள்ளு மாந்தவோ ஆன இடம் இல்லை, இங்கே இதெல்லாம் அனுமதிக்க முடியாது. வெளியே சாப்பிட்டுக் கொள்ளணும்” என்று அர்ச்சகர்கள் சத்தம் போட, ராமோஜி அவசர அவசரமாக கோபுர வாசலில் தவலை வைத்து வெளியே நின்றபடி அலமுசு பண்ண வழியுண்டாக்கி வைத்தான்.

அப்படியாவது அந்த கண்றாவியை குடித்தே தீருவேன் என்று அந்தப் பெண்கள் எல்லோரும் சாட்டியமாக நிற்க, கபேயின் பிராபல்யம் பிரசன்னமானது. இன்னும் இவர்களுக்கு தே (டீ) அறிமுகமாகவில்லை. அது இன்னொரு சிறு புரட்சியையே கிளப்பும் என்று ராமோஜி

பிள்ளைவாளுக்கும் அவருடைய பாரியாளுக்கும் சௌகரியமான ஆசனங்கள் போட்டு ஆளுக்கொரு பனை ஓலை விசிறியும், கூடவே மண்பானை தண்ணீர் கொடுக்க சிப்பந்தியுமாக சௌகரியப்படுத்தியிருந்தான் ராமோஜி.

அவன் மேடைக்குப் போகும்போது, ராத்திரி வெகு நாழிகை வரை தீபங்கள் எரிய இலுப்ப எண்ணெய் இன்னும் நாலு படி வேண்டியிருக்கிறதென்று யாரோ வந்து நின்றார்கள். எண்ணெய் வாணியர் கடையை எடுத்து வைத்துவிட்டு நாட்டிய நாடகம் பார்க்க இங்கே வந்துவிட்டதால் எண்ணெய் வாங்க வேறு உபாயமில்லை.

ராமோஜி உடனே எண்ணெய் வாணியரின் காலைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக நல்ல வார்த்தை சொல்லி, கெஞ்சி, வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து கடையைத் திறந்து எண்ணெய் தர ஆனபடிக்கு எல்லாம் செய்தான்.

நல்ல நேரம் பார்த்து வேதபுரீஸ்வரர் கோயில் குருக்கள் ஆரம்பிக்கலாம் என்று கையசைக்க, திரை உயர்ந்தது. கணபதி கவித்வத்தைப் பாடி ஆட, ராம நாடகம் தொடங்கியது அடுத்த நிமிடம்.

கவித்துவத்தில் நான்கு பெண்கள் மட்டும் பங்கு பெற்றார்கள். நாடகம் பற்றி ராமோஜி சுருக்கமாகப் பேசினான். அருணாசல கவிராயரும் தன் நாட்டிய நாடகம் பற்றியும்,

எத்தனை பாடல்கள் நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன என்றும் விவரங்கள் கொடுத்தார். நட்டுவனார் பெயர், கல்வி விசேஷம் எடுத்துச் சொல்லப்பட்டதும் நாட்டியம் தொடர்ந்தது.
சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தேறியதும் எல்லா விளக்குகளையும் ஜகஜ்ஜோதியாக ஏற்றி வந்திருந்தவர்களுக்கெல்லாம் கல்கண்டும், இனிப்பும், பானகமும் வழங்கப்பட்டன.

அப்போது அருணாசலக் கவிராயருக்கும் விட்டோபா நட்டுவனாருக்கும், நாட்டிய, பாட்டு, வாத்திய கோஷ்டிக்கும், அரிதாரம் பூச உதவினவர்களுக்குமெல்லாம் பொன், மற்றது, வராகன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தபடி மரியாதை செய்யப்பட்டது.

அருணாசல கவிராயர் மரியாதை ஏற்று ஆனந்தரங்கம் பிள்ளைக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். கவிராயரின் மனைவி வராமல் போனதால் அவரே துணைவிக்கு தங்கச் சங்கிலியைப் பெற்றுக் கொண்டார்.
கவர்னர் தியூப்ளே சொன்னபடி, அயோத்யா காண்டத்திலும், ஆரண்ய காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும், யுத்த காண்டத்திலும் சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்யாமல் இருப்பதின் முக்கியத்துவம் பற்றி வர்ணத்தோடு வரும் குழு நடனமாக அமைக்கப் பட்டிருந்தது விமர்சையாக அரங்கேறியது. பலத்த கரகோஷம் செய்து நாட்டிய நாடகம் காண வந்த அனைவரும் அதை வரவேற்றார்கள்.

முரட்டாண்டி சாவடி தியூப்ளே பேட்டை ஆனதை மட்டும் விடுவானேன். அதையும் வைத்துக் கொள்ளலாம் என்று பிள்ளைவாள் சொல்ல, அப்படியே ஆகட்டும் என்று விட்டல நட்டுவன் கைகாட்டினான். அது நன்றாகவே இருந்தது எனினும், பாடி ஆட வேண்டிய சிறுமிகளுக்கு பாட்டு மறந்து போய் தியூப்ளே பேட்டை என்று பெயர் சொன்னால் பல்லுடைப்போம் என மகிழ்ச்சியாகப் பாடிப் போனார்கள். இதற்கும் வலுவான கரகோஷமிருந்தது.

மிகச் சிறப்பாக அரங்கேறி, சகலருக்கும் சந்தோஷமாக, மரியாதைகள் பலருக்கும் செய்யப்பட்டு, ஆனந்தரங்கம் பிள்ளை புரவலராக இருப்பதால் இந்த மாதிரி நல்ல முயற்சிகள் நடப்பதை எல்லோரும் சிலாகிக்க, நல்ல விதமாக நாடகம் ஜெயமங்களம் சுபமங்களம் பாடி முடிவடைந்தது. அப்போது ராத்திரி பதினொரு மணி ஆகியிருந்தது.

ராமோஜி என்ற ராமோசி ராயனுக்கு ஒரு கதம்ப மாலையோ, ஒரு எலுமிச்சம் பழமோ, ரோஜாப்பூவோ மரியாதை செய்ததாகத் தர வேண்டும் என்று ஏனோ யாருக்குமே தோன்றவில்லை.

அடுத்தநாள் எல்லோரும் ஓய்வில் இருக்க, கவிராயர் ஆனந்தரங்கம் பிள்ளைவாள் வெளியே தெரியாத அளவுக்குக் கொடுத்த தனத்தோடும் மனைவிக்கான சங்கிலியோடும் தென்காசி பயணம் வைத்தார்.

“ராம நாடகம் புதுவையில் சிறப்பாக நடக்க நீங்களே காரணகர்த்தா. ராமோசி ராயரே, நீர் தமிழ் இருக்கும் வரை நூறுநூறு ஆண்டு இரும்” என்று அருணாசல கவிராயர் ராமோசி ராயன் மேல் முப்பது பாடல்களில் ஓர் வெண்பா மாலை எழுதியதை அவனுக்கு முதல் பாவையும் இறுதிப் பாடலையும் உரக்க வாசித்து அளித்தார்.

ராமோஜி தெருவில் உலா வரும்போது எல்லாப் பருவப் பெண்களும் கண்டு மோகிப்பதாகச் சொல்லும் சிறு காப்பியம் அது. நன்றி சொல்லி வாங்கிக்கொண்டான் ராமோஜி. வெண்பாவை வைத்து வேறென்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

நட்டுவனார் விட்டோபாவிடம் நாட்டிய நாடகம் நடத்த கேட்டுக்கொண்டு ஏழெட்டு கோவில்களின் அறங்காவலர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆயுசுக்கும் இது அவனுக்குப் பெயர் தரும் என்பதோடு அந்தப் பெண்கள் எல்லோருக்கும் பல வருடம் ஜீவனோபாயமாக இருக்கக் கூடும் என்றும் ராமோஜிக்குத் தெரியும்.

ரத்னாவும் புவியும் அடுத்த நாள் அவன் வீட்டுக்கு வந்தார்கள். கார சோமாசியும், லட்டு உருண்டைகளும், பாரசீக ஷெர்பத்தும் தந்து அந்தச் சிறுமியர்களை உள்ளன்போடு உபசரித்து அவர்கள் மேடையில் முந்திய நாள் நிகழ்த்திய அற்புதமான நடனம் பற்றி ராமோஜி மனமாறப் பாராட்டினான். அவர்கள் நன்றி சொல்லி, மேலும் கூறியது என்னவென்றால் –

“ஐயா, நட்டுவனாரிடம் எங்களை தத்தெடுத்துக் கொள்வது பற்றிப் பேசினீர்களென்று சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எனினும், நீங்களும் மத்திய வயசு எட்டாதவர். நாங்கள் பதினான்கு வயது கன்யகைகள். நட்டுவனார் யோசிப்பது எங்கள் தாயார்கள் சம்மதித்தாலும் இது வேறே மாதிரி பார்க்கப்படும் என்பதுதான்”.

ராமோஜியை வேதனைப்படுத்திய, விசித்திரமான விஷயம், இனி வருங்காலத்தில் அந்தப்படி வேறு மாதிரியான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக்கூட அந்தப் பெண்கள் தயாராம். அவர்களைப் பெற்றவர்களும். ஆனால் தத்தெடுப்பது, அதுவும் உடனே இப்போது, மட்டும் வேணாமாம்.

“நாங்கள் ரெண்டு பேரும் இன்னும் நாட்டியத்தில் தேர்ச்சி பெற வேண்டி இருக்கிறது. ஆகவே, வேண்டாம், விட்டுவிடுங்கள் என்று கோருகிறோம்”.

அவர்கள் ராமோஜி காலில் விழுந்து வணங்கி அப்பால் விலகி நிற்க, ராமோஜி ஒரு வினாடி யோசித்தான்.

”பரவாயில்லை, நான் என் இழந்த வாழ்க்கையை இன்னொரு தடவை போலியாக நகல் எடுக்க ஏதும் இனி செய்ய மாட்டேன். நீங்கள் சந்தோஷமாகப் போய் வாருங்கள்” என்று அனுப்பி வைத்தான் அவர்களை.

ஊரில் நாட்டிய நாடகம் பார்த்த ஒபிசியேக்கள் மற்றும் சிப்பாய்கள் மூலம், கவர்னர் சொன்னபடி, நாட்டியத்தோடு கூட மறக்க முடியாதபடி நல்ல சேதி சொல்லப்பட்டது தியூப்ளேயை எட்டியது. அவருக்கு நல்ல மகிழ்ச்சி.

ஆனந்தரங்கம்பிள்ளை அதற்கப்புறம் ராமோஜியை தன் அரசாங்கக் காரியங்களில் உதவி செய்யக் கேட்கவில்லை. நாட்டியம், பாடல், கவிதை, ஸ்தல புராணம் இப்படியாக அவரை அணுகி நிதி கேட்கிறவர்களிடம் ராமோஜியைக் கைகாட்டி விடுவதைத் தொடர்ந்தார் அவர். புலவனுக்கும் புரவலனுக்கும் இடையிலான, பணம் வாங்காத தொடர்பாக அவன் செயல்பட்டான்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அவர் சொல்லச் சொல்ல எழுதுவதில், அவருக்கு வந்த பிரஞ்சும் தமிழுமில்லாத பிறமொழிக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில், படி எடுப்பதில் அவனுடைய நேரம் பெருவாரியாகக் கழிந்தது.

நாட்டிய நாடக அரங்கேற்றம் பற்றிப் பிள்ளையவர்கள் சொல்லி, ராமோஜி எழுதிய நாட்குறிப்பு விவரமானதாக, சுவாரசியமானதாக இருந்தது. எனினும் பிறகு ஏதோ ஒரு தினத்தில் அதை எடுத்து விட்டார் பிள்ளையவர்கள். ராமோஜிக்குக் கூட அது ஏனென்று தெரியாது.

குடும்பத் தொழிலான துணிகளுக்கு சாயம் ஏற்றி வெளிநாட்டில் விற்பதை அவன் தொடர்ந்து செய்து வந்தான். லாபமும் அதிகமின்றி நஷ்டமும் இல்லாத தொழிலாக அதை நடத்தி வந்தான் ராமோஜி.

இரண்டே வருடத்தில் தமிழ் பேசும் ஊர், நகரம் எல்லாம் கல்யாணங்களிலும், அவ்வப்போது கோவில்களிலும் அந்த நாட்டிய நாடகம் நடந்தேறியது. இரண்டு வருஷத்தில் பாட்டு மட்டும் பிரபலமாகி நிற்க, நடனத்தை, நடனப் பெண்களை, நட்டுவனாரை மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்தார்கள்.

விட்டல ராயன் நட்டுவனார் காலம் சென்றபிறகு ரத்னாவும் புவனாவும் அந்த கோஷ்டிக்கு தலைமை வகித்து நடத்திச் சென்றது பற்றி ராமோஜி கேட்டறிந்தான். ஒருத்தருக்கொருத்தராக அவர்களின் உறவு புதியதாக இருந்ததாக உலகம் சங்கடப்பட்டதை அந்த இரண்டு பெண்களும் லட்சியம் செய்யவில்லை என்பதையும் அறிந்தான்.

நாட்டிய ஒத்திகைக்காக ரத்னாவோ, புவனியோ தாளவடி தட்டும் சத்தம் எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் நாமும் இந்தப் புதுச்சேரி வர்த்தமானத்தை நிறைவு செய்கிறோம்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன