போஸ்ட் ஆபீசிலிருந்து கூப்பிடறாங்க, என்னவா இருக்கும்?
ரத்னா நான் ஆபீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது ஜோசியர் வீட்டிலிருந்து போன் பேசினாள்.
அவள் இதற்கு முன் ஃபோனில் என்னோடு பேசியதே இல்லை என்பதால் குரல் வித்தியாசமாகக் கொஞ்சம் கிரீச்சிட்டு ஒலித்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு அவள் நேரில் பேசுவதே இல்லை என்பதால், என்ன அவசரமோ, சொல்ல முடியவில்லையோ என்று எனக்கும் படபடப்பு
புரசைவாக்கம் போஸ்ட் ஆபீஸ் தானே என்று கேட்டேன். ஆமாம் என்றாள்.
“நான் அவங்க கிட்டே பேசிட்டு உன்னை கூப்பிடறேன்.. எதுக்கு பதட்டம் எல்லாம்? சாதாரணமா இரு”.
“இல்லேங்க, அப்பா, அம்மாவுக்கு ஏதாவது..”
”யாருக்கும் எதுவும் இருக்காது.. எல்லாரும் நல்லாத்தான் இருப்பாங்க”
அவள் பயம் நியாயமானது. வீட்டில் போன் இல்லை என்றால் போஸ்ட் ஆபீசுக்கு போன் செய்து வீட்டிலிருந்து போஸ்ட் ஆபீசுக்கு வரவழைத்துப் பேச வேண்டும்.
பெரும்பாலும் பிறப்பு, இறப்பு போன்ற முக்கியமான விஷயங்களுக்கே இந்த பிபி கால் என்ற பர்டிகுலர் பெர்சன் அழைப்பு அவசர அவசரமாக வரும்.
போஸ்ட்மேன் கடிதம் எதுவும் டெலிவரி கொடுக்க இல்லாமல் சும்மா வந்து இறங்கி ’கூப்பிடறாங்க’ என்று சொல்லிப் போவது அவ்வளவு நல்ல அனுபவமாகக் கருதப்படுவது இல்லை.
புரசைவாக்கம் போஸ்ட் ஆபீசுக்கு ஃபோன் செய்தேன். நான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை செக்ரெடேரியட் டிபார்ட்மெண்டிலிருந்து பேசுகிறேன் என்றதுமே கிரமமாக எல்லாத் தகவலும் சொல்லப்பட்டு விட்டது.
இச்சல்கரஞ்சி, மகாராஷ்டிரத்தில் இருந்து ரத்னாவுக்கு ஒரு பாபுராவ் ஆம்தே ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி இருக்கிறாராம். அடையாளம் காண ரேஷன் அட்டை, பேங்க் பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் இப்படி ஏதாவது எடுத்து வந்து நேரில் புரசைவாக்கம் போஸ்ட் ஆபீசில் கையெழுத்துப் போட்டுக் காலை பத்து மணியிலிருந்து பிற்பகல் இரண்டு மணிக்குள் [ பணத்தை வாங்கிப் போகலாம்.
”ரத்னா என் மனைவி சார். ஆம்தே என் மாமனார்”.
“ரொம்ப சந்தோஷம் சார். நீங்க கவர்மெண்ட் ஆபீசர் தானே, ஒரு சர்ட்டிபிகேட் மட்டும் அவங்க உங்க ஒய்ப்னு வாங்கிட்டு வந்துடுங்க..”
ரத்னாவுக்கு அடுத்த வினாடி தொலைபேச ஜோசியர் வீட்டுக்குக் கூப்பிட்டால் லைன் டெட்.
சாயந்திரம் ஐந்து மணிக்கே ஆபீஸ் ஓய்ந்து போயிருந்தது. சென்னை சர்க்கார், உலகத்தில் இதுவரை எந்த கவர்மெண்டும் செய்யாதபடி, அடிப்படை ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் கொடுக்க இருப்பதாக வந்த தகவலை அங்கங்கே எல்லோரும் சர்ச்சை செய்து கொண்டிருந்தது ஓயவில்லை.
சீக்கிரமாக ஆபீசிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். வெள்ளிக்கிழமை சாயந்திர ஆபீஸ் பூஜைக்கும் தேங்காய்ச் சில்லு, வெல்லம், லட்டுக்கும் ஆஜர் கொடுக்க முடியாமல் போனாலும் ரத்னாவை சந்தோஷப்படுத்த சந்தர்ப்பம் என்பதால் புறப்பட்டு விட்டேன்.
வீடு போய் சமாசாரம் எல்லாம் சொல்லி முடிக்க, ஆனந்த வாரிதி அடுத்து. ரத்னா என்னைக் கட்டிக்கொண்டு தம் பிடித்து ரெண்டு அங்குலம் தூக்கித் தட்டாமாலை சுற்றி ஆடினாள்.
அவளுடைய அப்பா பூர்வீக சொத்தாக இருந்த நிலத்தை விற்ற பணத்தை அவளுக்கும் அவள் அண்ணன் பீமாராவுக்கும் பிரித்துக் கொடுத்த பணமாம் அது. திடீர் பண வரவுக்கு வழி செய்யும் மாமனார்களை வாழ்த்தினேன்.
அடுத்த நாள் சனிக்கிழமை அன்று மத்தியானம் ஆபீஸில் இருந்து பெர்மிஷனில் வந்து போஸ்ட் ஆபீஸுக்கு தம்பதி சமேதராகப் போய் பணத்தை வாங்கி வந்து விட்டோம்.
வாசல் கதவைத் தாழ்போட்டு படுக்கை அறையில் பெட் மேல் அந்தப் பணத்தைப் பரத்தி வைத்து ரெண்டு பேரும் பார்த்துக்கொண்டே நின்றோம். ஆயிரம் ரூபாயை ஒருசேரப் பார்த்தது ரத்னாவுக்கு இதுதான் முதல் தடவை.
”நான் இந்தப் பணத்தை என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கறீங்க?”
ரத்னா கேட்டாள்.
“உன் பணம். என்ன பண்ணவும் உனக்கு உரிமை இருக்கு. ஆனா பெட்டுலே போட்டு அப்படியே வச்சிருக்க வேணாம். ராத்திரி இதும்மேலே படுத்தா தூக்கம் வராது” என்றேன்.
அவள் சொன்னது- ”ரொம்ப நாளா ஆசைங்க.. நகை எதுவும் வேணாம், ஒரு ருக்மணி குக்கர், ஒரு எலக்ட்ரிக் குக்கர் ரெண்டு மட்டும் வாங்கிக்கலாம். நூறு ரூபாய்க்குள்ளே வரும். மீதிப் பணத்தை பேங்குலே போட்டு வச்சிடலாம். வேணுங்கறபோது எடுத்துப்போம்”.
நகை எதுவும், புடவை எதுவும் கேட்காமல் இப்படி வீட்டு உபயோகத்துக்காக பாத்திரம் வாங்க நினைக்கும் அவளுடைய நிறைந்த மனசு எனக்கு எப்போதோ பிடித்துப் போயிருந்தது. அது கல்யாணத்துக்கு வெகுமுன்.
புவி என்ற புவனலோசனி என்ற தெலக்ஸ் புவனா என் வாழ்க்கையில் வந்தபின்னும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
ராத்திரி கச்சேரி தண்டபாணி தேசிகர் என்று காலையில் பத்திரிகையில் பார்த்த நினைவு. ரேடியோவை ஆன் செய்ய செய்தி அறிக்கை –
‘இடைக்கால சர்க்காரில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் மந்திரியாகப் பதவியேற்றார்’.
”என்னங்க, வாங்கிட்டு வரலாமா?” ரேடியோவின் சத்தத்தைத் தணித்து விட்டு ரத்னா கேட்டாள்.
”வரும் அடுத்த வெள்ளி பிற்பகல் அரை நாள் லீவு எடுக்கிறேன். இந்த இரண்டையும் வாங்கிவிடலாம்” என்று சொன்னேன்.
யோசித்து சரி என்றவள் தொள்ளாயிரம் ரூபாயை பேங்கில் போடக் கொடுத்தாள். மீதி நூறும் சாமி அலமாரிக்குள் பத்திரமாகப் புகுந்துகொண்டது. ருக்மணி குக்கரும் எலக்ட்ரிக் குக்கரும் வாங்க அது.
இந்த இரண்டில், ருக்மிணி குக்கர் பற்றி பத்திரிகை எதிலும் விளம்பரம் காணவில்லை. பத்து வருஷம் முன்பு பிரபலமான இது இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ருக்மிணி குக்கரோடு கூடவே ஒரு பத்து தடவையாவது விடாமல் சொல்லியிருப்பாள் –
“விடா எலக்ட்ரிக் குக்கர் வேணும். எப்படியாவது வாங்கிடணும்”.
விடா குக்கர் பற்றிப் பத்திரிகையில் வசவச என்று படிக்க எந்த உந்துதலும் தராத படிக்கு காமா சோமா என்று வாக்கியங்களோடு ஒரு விளம்பரம் ரெண்டு மாதம் தொடர்ந்து வந்து அதுவும் காணோம். ஆனாலும் ரத்னா கேட்டால் வாங்கித் தராமல் இருப்பேனோ. அதுவும் இந்த சந்தர்ப்பத்தில்.
அவள் கேட்ட இரண்டு குக்கர் சமாசாரங்களையும் பற்றி ஆபீசில் சக ஊழியர்களிடம், தெரு நண்பர்களிடம் விசாரித்தேன். ருக்மணி குக்கர் பற்றி வாய்சாலகமாக நிறையப் பேர் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். மின்சார குக்கர் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
நண்பர் கேளப்பனைக் கேட்டேன். அவர் பிரபல இந்தி நடிகர் – பாடகர் குந்தன்லால் சைகாலின் மரணத்துக்காக துக்கம் அனுஷ்டிப்பதாக எழுதிக் காட்டினார். ’சோஜா ராஜ குமாரி’ என்று சைகால் பாட்டின் ஒற்றை வரியை நான் பாட, கூடவே பாடிவிட்டுச் சொன்னார் –
”எலக்ட்ரிக் குக்கர் விலை 43 ரூ 12 அணா என்று மலையாள தினப் பத்திரிகை மாத்ருபூமியில் பார்த்த நினைவு”.
Excerpts from my forthcoming novel RAMOJIUM