ராமோஜியம் நாவலில் இருந்து – ருக்மணி குக்கர் வாங்கப்போன போது

ராமோஜியம் நாவலில் இருந்து – ருக்மணி குக்கர் வாங்கப்போன போது
——————————————-

தொடர்ந்து நான்கு நாள் திங்களிலிருந்து வியாழன் வரை ஒரு மணி நேரம் ஆபீசில் இருந்து முன்னால் வந்தேன். எலக்ட்ரிக் குக்கரே மனதிலும் புத்தியிலும் திடமாக உட்கார்ந்திருந்தது. எனக்குத் தெரிந்து புவனா வீட்டில் கூட எலக்ட்ரிக் குக்கரோ ஹீட்டரோ, அவ்வளவு ஏன், தண்ணீர் சுட வைக்கும் மின்சார கெட்டிலோ கூட கிடையாது.

எலக்ட்ரிக் ஹீட்டர் என்றும் எலக்ட்ரிக் குக்கர் என்றும் அழைக்கப்பட்ட அந்த சாதனம் அரையடிக்கு கனமான பிளாஸ்டிக்கோ ரப்பரோ போட்டு அமைத்த மேடையும் நடுவில் பத்து வட்டமாக மின்சாரம் பாய்ந்து சிவப்பாக ஒளிவீசும் மின்சார காயிலுமாக விளம்பரப் புகைப்படத்தில் இருந்தது. குருணையாக அரிசி திரிக்கிற கல் யந்திரம் அளவு சுற்றளவு, உயரம். மின்சாரச் சுருளின் மேல் சிறியதாக கருப்பு வட்டம் போட்டு மேலே பாத்திரத்தை ஏற்றி வைக்க ஏற்பாடு. அது வெங்கலப்பானையிலிருந்து பித்தளை வரை இருக்கலாம். பீங்கான், அலுமினியம், ஈயம், மரம் இத்யாதி தடைசெய்யப்பட்டவை.

இந்த அடுப்புக்குக் கீழ்ப் பிரதேசமாக ஒன்றன் மேல் ஒன்றாக இடம் விட்டு செருகப்பட இரண்டு உலோகத் தட்டுகள். பொறிக்க, வறுக்க இவற்றின்மேல் வாணலியை வைத்தால் போதும். மாமிசத்தை அப்படியே இவற்றின்மேல் வைத்துச் சுடலாம்.

இந்த சமாசாரம் என்னன்னு சொல்றேன். வாங்கப் போறபோது என்னையும் கூப்பிடுங்க என்றார் எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு. அது முடியாமல் போகவே, வாங்கி வந்த பிறகு வந்து பார்க்கச் சொல்லி காபி கொடுத்து அனுப்பினோம்.

திங்கள், செவ்வாய், புதன், வியாழன் நான்கு நாளும் புரசைவாக்கத்திலும், மயிலாப்பூரிலும், மாம்பலத்திலும் எலக்ட்ரிக் குக்கரைத் தேடினோம். கடை கடையாக ஏறி கால் வலித்தது தான் மிச்சம்.

எலக்ட்ரிக் உபகரணம் ஆனதால் சீல்ங் ஃபேன் விற்கும் கடைகளில் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அந்தக் கடைகளுக்குப் போய் குத்துமதிப்பாக எலக்ட்ரிக் குக்கரைப் பற்றிக் கேட்க அதென்ன என்று என்னிடமே திருப்பிக் கேட்டார்கள்.

யாரோ சொல்ல, ரேடியோ விற்கும் கடைகளில் கிடைக்கும் என்று நானும் ரத்னாவும் படையெடுத்தோம். அங்கெல்லாம் அழகான ரேடியோக்கள் எட்டு வால்வ், ஐந்து வால்வ், ஐந்து நிமிடத்தில் சார்ஜ் ஆகி கரண்டே அதற்கு அப்புறம் தேவைப்படாதவை என்று நானாவிதமான சிறப்புகளோடு, மார்க்கோனி, ரேடியோலா, பீப்பிள்ஸ் செட் என்று விதவிதமான பெயர்களில் கொரகொரத்துக் கொண்டிருக்க, எலக்ட்ரிக் குக்கரைக் காணோம்.

”வரும் வாரக் கடைசி சனிக்கிழமை ஆபீஸ் லீவு. திங்கள்கிழமை வேறே உள்ளூர் விடுமுறை. நீங்களும் நானும் மூணு நாள் கொட்டுகொட்டுன்னு சும்மா உட்கார்ந்திருப்பதை விட உருப்படியா என்ன செய்யலாம்?”

ரத்னா வியாழக்கிழமை இரவு இடியாப்பத்தை எனக்கு சகல விதமான குருமா, சட்னி வகையோடு சமர்ப்பித்துக் கொண்டு கேட்டது இது.

மனதில் தோன்றி வெளியே பகராமல் வைத்துக்கொண்ட என் பதில் – இலங்கை போய்விட்டு வரலாம்.

இலங்கை போனால் புவியைப் போய்ப் பார்க்கலாம். அவள் இந்திப் படத்தில் நடிக்க ஆரம்பித்து அதுவும் இப்போது ஒரு முழு ஷெட்யூல் இலங்கையில் ஷுட்டிங், ஒண்ணரை மாதத்துக்கு.

ஆக, வார இறுதி விடுமுறைக்கு புவி வரப் போவதில்லை. நானும் அவளைச் சந்திக்கப் போவதில்லை. வேறென்ன செய்ய?

”எங்கேயாவது போய்ட்டு வரலாமா?” நான் ரத்னாவை மெல்ல விசாரித்தேன்.

“எங்கே?” பட்டணம் பொடியை உறிஞ்சாமல் முகர்ந்து டப்பாவை மூடி வைத்தபடி கேட்டாள் அவள். டாக்டர், அவள் பட்டணம் பொடி போட வேண்டாம் என்று விதித்து ரத்னாவும் அதைக் கடைப்பிடிக்கிறாள். வீட்டில் பொடிமட்டை, டப்பா, பெட்டி என்று எல்லாமும், அடுக்குத் தும்மலும் போன இடம் தெரியவில்லை. பொடி துறந்த இந்த சுய கட்டுப்பாட்டுக்காகவே அவளுக்கு மிகப்பெரிய வெகுமதி தரலாம். எங்கே கூட்டிப் போகலாம் ரத்னாவை?

“லண்டன், நியூயார்க், பெர்லின், புடாபெஸ்ட்..” சந்தோஷமாக அடுக்கினேன்.

“அடுத்த வாரக் கடைசிக்கு அந்த பட்டிதொட்டி எல்லாம் போகலாம்.. வேறே பக்கத்திலே பெரிய பட்டணமா சொல்லுங்க டியர் ராவ்ஜி” கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சினாள் ரத்னா.

“தஞ்சாவூர் போய்ட்டு வரலாமா?” அவள் அணைப்பில் சுருண்டு சொன்னேன்.

“போன வருஷம் தான் போனோம்” ரத்னா கையை உதறினாள்.

“சிதம்பரம்?”

“கும்பாபிஷேகம் வருது சிதம்பரத்திலே. கூட்டம் அதிகமா இருக்கும்”.

”மதுரை?”

”மூணு மாசம் முந்திதான் போனது” ரத்னா புறக்கணித்தாள்

“அப்ப கும்பகோணம் போனா என்ன?” நான் ஹிப்னடிஸத்தில் கட்டுண்ட குரங்கு மாதிரி தாடையைச் சொரிந்து கொண்டு சொன்னேன்.

ரத்னா பழைய நினைவுகளை மீட்ட கும்பகோணம் போக ஆசைப்படுகிறாள். அதை என் வாயால், என் ஆசையாகச் சொல்ல வைத்தது அவளுடைய அசாத்திய புத்திசாலித்தனம்.

“ரயில்வே ஸ்டேஷனுக்கு நாளைக்கு போய் டிக்கெட் வாங்கிக்கலாமா இல்லே பஸ்ஸிலே போயிடலாமா?” ரத்னா ஆர்வத்தோடு கேட்டாள்.

“அதை நான் பார்த்துக்கறேன்..”

“ஏற்கனவே நீங்க பார்த்துக்கறதா சொன்ன இன்னொண்ணு இருக்கு.” ரத்னா நினைவு படுத்தினாள்.
ருக்மணி குக்கர்.
”நாளைக்கு வெள்ளிக்கிழமை. நீங்க அரைநாள் லீவு போட்டுட்டு வந்து ருக்மணி குக்கர், எலக்ட்ரிக் குக்கர் ரெண்டும் வாங்கலாம்னு சொன்னீங்க..”

எலக்ட்ரிக் குக்கர் நாளைக்கு வாங்கிடலாம். நம்பிக்கையோடு சொன்னேன்.

ருக்மணி குக்கர்?

”பத்திரிகையிலே ருக்மணி குக்கர் பற்றி ஏதும் இருக்கான்னு பார்த்தேன். ஒண்ணையும் காணோமே. அது இப்ப வருதா?” என்று கேட்டேன்.

”வராமலா நான் கேக்கறேன்?” மூக்கு நுனியில் கோபம் தெரிந்தது.

”ஊரறிஞ்ச பிராமணனுக்கு பூணூல் எதுக்குன்னு சுபாங்கி அம்மாள் சொல்வாங்க. ருக்மணி குக்கர் ஜகப் பிரசித்தம். எதுக்கு பத்திரிகையிலே போடணும்? விளம்பரம் இல்லாமலேயே கணிசமா வித்துக்கிட்டிருக்கு”.

சுபாங்கி அம்மாள் பழைய ருக்மிணியைப் போட்டுவிட்டு புதுசு வாங்கினதாகச் சொன்னதால் தான் இத்தனை நாள் கழித்துத் தானும் அதை வாங்க ஆசைப்படுவதாகச் சொன்னாள் ரத்னா.

கட்டாயம் ருக்மிணி குக்கர் வாங்கணும். இன்னொரு தடவை வலியுறுத்தினாள்.

காபி பில்டர் வாங்கணும், வடகம் பிழியவும் ரிப்பன் தேங்குழல் பொறிக்கவும் பித்தளைச் செப்பு வாங்கணும், இட்லிப் பானை பழசைப் போட்டுவிட்டு புதுசாக வாங்கணும் இப்படியான கோரிக்கைகள் அவ்வப்போது வருவது வாடிக்கைதான். அதெல்லாம் என்ன மாதிரி உபகரணங்கள் என்று தெரிந்ததால் மாம்பலத்தில் கடை கடையாக ஏறி இறங்கி வாங்க எவ்வளவு நேரம் செல்லும் என்பது கூட அனுபவத்தால் ஏறக்குறைய சரியாகச் சொல்ல முடியும்.

ஆனால் இந்த ருக்மிணி குக்கர் என்பது என்ன மாதிரியான தளவாடம் என்று எனக்குத் தெரியாததால் அடங்கி வாசிக்க வேண்டிப் போனது.

”பித்தளையிலே ஒரு உருளை ஒரு முழம் நீளத்துக்கு கற்பனை செஞ்சுக்குங்க. அது உள்ளே கூடு மாதிரி இருக்கும். ஒரு பக்கத்திலே அடைச்சு வைக்க மூடி போட்டுக்க வசதி. அப்புறம் அந்தப் பெரிய உருளைக்குள்ளே போட கொஞ்சம் சின்ன உருளை, அப்புறம் டிபன் பாக்ஸ் அடுக்குப் பாத்திரம் மாதிரி மூணு சம்புடம். அதற்கு ஒண்ணொண்ணுக்கும் மூடி. குழிஞ்சு ஒரு தட்டு. முதல் உருளைக்குள்ளே மீதி ஐந்துமோ அல்லது அதிலே சிலது மட்டுமோ, என்ன வரிசையாக இருந்தாலும் உள்ளே போகும். இதெல்லாம் சேர்த்தால் ருக்மணி குக்கர்”.

ரத்னா என்னைப் படிப்பித்த தோரணையில் உற்சாகத்தோடு அப்போது சொல்லி முடித்தது –
இந்த உபகரணங்களை மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் கடை கடையாக நேற்றும் இன்றும் என்றும் விற்றுக் கொண்டிருக்கிறார்களாம். அதெல்லாம் பாத்திரக் கடை என்பதைச் சொல்லியாக வேண்டும்.

ஊரோடு பார்டர் இல்லாத புடவை அணிகிற பேஷன் வந்து ஸ்திரிகள் எல்லோரும் அவ்வண்ணமே ஆன புடவைகளைத் தேடியலைந்த மாதிரி, வீடு வீடாக ருக்மணி குக்கர் வாங்க சதா ஆர்வம் காட்டுகிறார்களாம்.

படித்து விட்டு உத்தியோகத்தில் வந்த, இன்னும் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் கூட இந்த ருக்மிணி குக்கரைத் தேடிப் போய் வாங்குகிறார்களாம்.

“சாதமும் வியஞ்சனங்களும் உள்ளே வைத்து அடுப்பில் தணித்து நெருப்பு வைத்து ருக்மிணி குக்கரை ராத்திரி தூங்கப் போகும் முன் இருத்தினால் காலையில் எட்டு மணிக்கு குளித்துவிட்டு சுடச்சுட ஃபுல் மீல்ஸ் சாப்பிடத் தயாராகி இருக்கிறது என்ற திருப்தியாம் அவர்களுக்கு.

இந்த நைஷ்டிக பிரம்மசாரிகளில் இன்னும் கூடுதல் சாப்பாட்டு லயம் வாய்த்தவர்கள் காலையில் ஆபீசுக்குப் போகும்போது இப்படி குக்கரை சித்தப்படுத்தி வைத்துவிட்டுப் போனால், சாயந்திரம் வரும்போது ராத்திரி சாப்பாடு தயார் என்பதில் சந்தோஷமாம்.

சுடச்சுட சாப்பாடு சரி. அதுக்காக பீடி பற்ற வைக்க தாடியைக் கொளுத்தின கதையாக நெருப்பை வீட்டுக்குள் வைத்துவிட்டு ராத்தூக்கத்தில் அமிழவோ, ஆபீஸ் களேபரத்தில் காலையில் வைத்துப் போன நெருப்பை பகலில் மறந்துவிடுவதோ உசிதமில்லை என்று நான் ரத்னாவுக்கு பதமாக எடுத்துக் காட்டினேன்.

”நான் ஆபீசுக்கும் போவதில்லை. இப்படி முழுச் சோம்பேறியாக குக்கரை அடுப்பில் வைத்துவிட்டு கதைப் புத்தகம் படித்துக் கொண்டும் இருக்கவும் என்னால் முடியாது. எப்போதாவது உடம்பு வழங்காதபோது ருக்மிணி கைகொடுத்தால், ஒரு சாதம், ஒரு பருப்பு இப்படி குக்கர் சமைத்தால் போதும்”.

அதற்கு அப்புறம் என் தரப்பில் எந்த விவாதமும் இல்லை.

மாம்பலத்தில் எல்லா கடைகளிலும் பத்து வருஷமாக பிரபலமாக இருக்கிறதாம் இந்த ருக்மிணி குக்கர். அதாவது சரியாக எங்கள் கல்யாணம் நடந்த 1937-இல் தொடங்கி ருக்மிணி எங்கும் கிடைத்தாலும் எங்கள் வீட்டில் இந்த நூதன வஸ்து இனிமேல் தான் உள்ளே வர வேண்டும்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன