என் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை

ராமோஜியம் நாவல் நூல் வடிவில் பிரசுரிப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன.

இது நூலின் முன்னுரை

ராமோஜியம் நாவல் முன்னுரை

பொடி என்று ஒரு சிறுகதை எழுதினேன். இதை எழுதுகிற தேதிக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் எழுதியது அது. ஏன் எப்படி என்றெல்லாம் தெரியாது. 1930-களின் சென்னை. அங்கே, ராமோஜி என்ற தஞ்சாவூர் மராட்டா இளைஞன். அவன் கல்யாணம் செய்துகொள்ளும் ரத்னா பாய் என்ற அதிரூப சுந்தரி. ரத்னாவின் மூக்குப்பொடி பழக்கம், பொடி டப்பாவைத் தேடிய முதலிரவு என்று அந்தக்கதை தானே வளர்ந்து சமர்த்தாக ஆபீஸ் விடுமுறை அறிவிக்கப்பட்ட ஒரு பகலில் கச்சிதமாக முடிவடைந்தது.

கதை தி ஹிந்து பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பு வெளியிட்ட பொங்கல் மலர் ஜனவரி 2020-ல் பிரசுரமாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது.

என் நண்பரும், அஷோக் நகரில் அடுத்த தெருக்காரரும் ஓய்வு பெற்ற சென்னை விவேகானந்தா கல்லூரி முதல்வருமான டாக்டர் வ.வே.சு கதையைப் படித்துவிட்டு என்னிடம் கேட்டார் – மீதி அத்தியாயம் எல்லாம் எங்கே சார்?

புரிந்தது. ராமோஜி சிறுகதைக்குள் வைத்து அடைக்க வேண்டிய கதாபாத்திரம் இல்லை. ஒரு நாவல் பரப்பில் நீள நெடுக நடை போட வேண்டியவன். ராமோஜியும், ரத்னாபாயும் காலங்கள் தோறும் பிறந்து வருவதும் நிறை குறைகளோடு முழு வாழ்க்கை வாழ்வதும் மடிவதும் பிறந்து எழுவதும் விரிவாக, ஒரு நாவலின் தளத்தில் நிகழ்த்த வேண்டியவை என்பதை உணர்ந்தேன்.

ராமோஜியம் நாவலின் தலைக்காவேரி பொடி என்ற சிறுகதை ஆனது இந்த விதமாகத்தான். எழுத ஆரம்பித்தபோது என் நிரந்தரமான மயக்கவெளியான 1930 – 1940 கால கட்டத்தை பெரும்பாலான நாவல் பகுதிகள் நிகழும் காலமாகவும், சென்னையை, நிகழும் களமாகவும் ஏற்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தேன். பழைய கல்கி வார இதழ்களும், கல்கியின் புனைவு, அபுனைவு, தேவனின் துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம் போன்ற புதினங்களும், புதுமைப்பித்தனின் சிறுகதைகளும் காட்டும் சமீபமான ஆனால் தொலைவில் இருப்பதாக மயங்க வைக்கும் காலமும் களனும் அது.

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளிலும் ராமோஜியும் ரத்னாவும் அந்தந்தக் காலத்து ஆசாபாசங்களோடு ஜீவித்து இருந்திருப்பார்கள் என்பதையும் சொல்ல நினைத்தேன். ராமோஜி இணையற்ற கடற்படைத் தலைவன் கனோஜி ஆங்கரேயின் கப்பல் படையில் சேர்ந்து மேற்குக் கடற்கரையில் சுவர்ணதுர்க்கத்தில் ராமோஜி ஆங்கரே ஆவது அப்படித்தான். அடுத்த நூற்றாண்டில் புதுச்சேரியில் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையின் பிரியத்துக்கு உரியவனாக, பிரஞ்சு கவர்னர் தியூப்ளேயை பரிச்சயம் செய்து கொள்வதும், ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற முனைந்து செயல்படுவதும் சுபாவமாக நாவலுக்குள் வந்தன.

இருபதாம் நூற்றாண்டு மதறாஸோடு, இரண்டாவது உலக மகா யுத்த காலமும் இந்த வாழ்க்கை இழைகளில் கலந்து வருகின்றது. சென்னையோடு கும்பகோணமும் கதையில் அவ்வப்போது களனாகிறது. ஏன், தி.ஜாவின் மோகமுள் கதாபாத்திரங்களில் சிலவும் வந்து போகின்றன. எல்லாம் சேர்ந்தது தான் என் கனவுக் காலம். ராமோஜியம் காலம்.

என் நாவல்களில் பெரும்பாலும் விரிவாகக் கையாளப்படும் மாந்திரீக யதார்த்தம் ராமோஜியத்தில் கொஞ்சம் போல மட்டும் வரும். நேரடியான, சிக்கலில்லாத நடையில், கிட்டத்தட்ட பயோ பிக்ஷன் போல, எனினும் புனைவு மிக அதிகமும், கதைவெளியை சிருஷ்டிக்கவும், அசல் போல் புனைவைச் சித்தரிக்கவும் கொஞ்சம் வரலாறும் கலக்கிறது. எங்கே வரலாறு முடிந்து கதை தொடங்குகிறது அல்லது தொடர்கிறது என்பது விடை கிட்டாத கேள்வியாகவே இருக்கட்டும்.

ராமோஜியோடும் ரத்னாவோடும் நானும் அந்தக் காலக் கும்பகோணத்திலும், சென்னைத் தெருக்களிலும், இருநூறு வருடம் முந்திய புதுவை வீதிகளிலும், முன்னூறு ஆண்டு முன், மரக்கலங்கள் கூட்டமாகப் பயணப்பட்ட அரபிக்கடல் பெருநீர்ப் பரப்பிலும் அலைந்து திரிந்தேன். படிக்கும் வாசகர்களும் அதையெல்லாம் உணர்ந்து ரசிக்க அழைக்கிறேன். உங்கள் இலக்கியப் பசிக்கு ‘போன் அபிதெ’ சொல்லி ராமோஜியம் சமர்ப்பிக்கப் படுகிறது.

கிருஷ்ணார்ப்பணம்.

இரா.முருகன்
சென்னை
ஜூன் 6, 2020

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன