ஏழு மணிக்கெல்லாம் வீடு. சாப்பிட்டு விட்டு எட்டரைக்கெல்லாம் உறக்கம். விடிந்து சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கு கும்பகோணம் போக பஸ்ஸைப் பிடிக்கலாம் என்று ரத்னாவிடம் சொல்லியிருந்தேன்.
காலையில் எஸ்பிளனேடில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் போகத் தயாராக ரத்னா வீட்டுக் கதவைப் பூட்டப் போனபோது நான் என்ன அவசரம் என்று கேட்டுக் கையமர்த்தினேன்.
”உங்களுக்கென்ன சாவகாசமா அடுத்த பஸ்ஸிலே போகலாம்னு சொல்லுவீங்க. எந்த பஸ்ஸுனு திட்டம் பண்ணி வச்சிருக்கமோ, அதிலே போகாட்ட கஷ்டமாயிடும்” என்றாள் அவள்.
வா, போகலாம். வாசலுக்கு வண்டி வந்தாச்சு. நான் கூற, புரியாமல் பார்த்தாள் ரத்னா. நான் சுற்று முற்றும் பார்த்து யாருமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அவளை அணைத்து உதட்டில் முத்தமிட்டு, அந்த அறியாப் பேதையின் மருண்ட விழிகளை விரல் கொண்டு மூடி, காதில் முணுமுணுப்பாகச் சொன்னேன் –
டாக்சி.
டாக்சியா? அவள் இன்னொரு முறை மருண்டாள். இன்னொரு முறை நானும் சளைக்காமல் முத்தமிட்டேன். அது உதடு இல்லை என்றாள் வழக்கம்போல்.
அம்பாசடர் டாக்சி மெல்லப் புறப்பட்டு வேகம் கொண்டது.
சிதம்பரம் வழியாகப் போக வழியில் மராமத்து நடந்து கொண்டிருப்பதால் நேரம் அதிகம் ஆகுமே, பரவாயில்லையா என்றார் டிரைவர். கோவில் கும்பாபிஷேகத்துக்கு கணிசமாக அதிகரித்த போக்கு வரத்து வேறே.
வேறே என்ன வழி இருக்கு என்று ரத்னா ஆவலாகக் கேட்டாள். அவள், ஏன் நான் கூட இவ்வளவு பெரிய சுற்றுப்பயணம் காரில் இதுவரை போனதில்லை.
கொஞ்சம் சுற்று வழியில், பிரதான சாலை போலவே சௌகரியமாகப் போகலாம் என்று வண்டி ஓட ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது.
பண்ருட்டி உள்ளே நுழையும்போதே பலாப்பழ வாடை மூக்கைத் தொட்டது. நான் இரண்டு பலாப்பழம் வாங்கி காரின் பின்னால் டிக்கியில் போட்டு வைக்கலாமா என்று யோசித்தேன். பலாப்பழத்தைக் கட்டித் தூக்கிக்கொண்டு அதன் ஆளை அடிக்கும் வாசனையோடு கும்பகோணத்தில் சுற்றிவர முடியாது என்று புலப்பட, அந்தத் திட்டத்தைக் கைவிட்டேன்.
கார் போன பாதையில் பண்ருட்டி பொம்மைக்கடை ஏதும் திறந்திருக்கவில்லை. இருந்தால் ரெண்டு கிருஷ்ணன் பொம்மை வாங்கியிருப்பேன். அதில் ஒன்று புவனாவுக்கு.
மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று விரியும் பாதை வெய்யில் ஏறிவர வெளியில் விரிந்து கொண்டிருந்தது.
ரயிலில் போகும்போது மனதுக்கு இதமான ஓவியமாகக் கண்ணில் படும் பசுமையான நஞ்சை நிலப்பரப்பு, திரைப்படம் ஒன்று எல்லையில்லாமல் அதிவேகமாக விரிவதுபோல் கார் ஜன்னலுக்கு வெளியே நீட்சி கொண்டது.
காருக்கு வெளியே கடைத் தெருக்களில் மிட்டாய்க்கடைகள் காலையில் கடை விரித்துக் காத்திருந்தது எந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்காக என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. விருந்தாடப் போகிறவர்கள் வாங்கிப்போகப் படியேறுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். அல்லது நேற்று ராத்திரி கூடலின்போது கொடுத்த நானாவித வாக்குறுதிகளில் நிறைவேற்ற எளிதான, ‘நாளைக்கு கோதுமை அல்வா வாங்கி வருகிறேன், போதும் என்று தோன்றும்வரை உண்ணலாம்’ என்பது மனதின் முன் தளத்தில் வர குடும்பஸ்தர்கள் மிட்டாய்க்கடைப் படி ஏறி வர எதிர்பார்த்து இருக்கலாம். அது இந்த நாளுக்கான முன்னறிவிப்புமாகலாம்.
அல்லது நேற்று நடு இரவில் தூக்கக் கலக்கத்தில் காரசேவு கேட்ட குழந்தையின் பெற்றோர் இனிப்புக் கடையில் படியேறி வரலாம். விடிந்ததும் கண்விழிக்கும் குழந்தை, படுக்கைக்கு அருகே தின்பண்டத்தைப் பார்த்து அடையும் மகிழ்ச்சியைப் பிரதானமாக நினைப்பவர்களாக அவர்கள் இருக்கலாம்.
இனிப்புக் கடைக்கு நேர் எதிரே, முடிவெட்டும் நாவிதர் கடைகளில் சோப்பு கன்னத்தில் பூசி முகம் மழிக்கப்பட உட்கார்ந்து இருப்பவர்கள் மனதில் மைசூர்பாகு சாப்பிட நேரம் கெட்ட நேரத்தில் ஆசை உருவாக, அந்த மிட்டாய்க்கடை கண்ணாடி பீரோக்களில் அடுக்கி வைத்த இனிப்புகள் தூண்டியிருக்கலாம்.
வடலூர் கடந்து போகும்போது ரத்னாவுக்கு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கவிதையாக மனதில் நிறுத்தியிருந்ததைச் சொன்னேன்.
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி சுவைக்கட்டி செய்யும் திருவருட்பா ரெசிப்பெ சொன்னேன். கடவுளை ருசித்த கதை அது.
கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டோம் என்ற விரக்தியையும் நான் சொல்லியபடி இருக்க, கும்பகோணத்துக்குப் பகல் ஒண்ணேகால் மணிக்கு வந்து சேர்ந்தோம்.
ஏற்கனவே, காமாட்சி ஜோசியர் தெருவில் வசதியான லாட்ஜ் ஒன்றில் இரண்டு நாள் வாடகைக்கு, ஆபீஸ் நண்பர் மூலம் ஏற்பாடு செய்திருந்தேன்.
விட்டோபா குடும்பத்தோடு ஹரித்துவார், ரிஷிகேசம், வாரணாசி யாத்திரை போயிருக்கிறார். அவருடைய பயணத் திட்டத்தை போன வாரம் அறிந்து கொண்டபோது நான் வருவதைச் சொல்லாமல் விட்டேன். சொல்லியிருந்தால் வட இந்தியா யாத்திரையை அவர் ஒத்தி வைத்திருப்பார். எப்படி இருந்தாலும், நாளை ஞாயிறு காலை அவர் திரும்ப வந்து சேர்வதாகத் தகவல் வந்தது.
மங்களா ஓட்டலில் திருப்திகரமாக, திருப்திகாரமாக பகல் சாப்பாடு.
கும்பகோணம் ஆந்திரப் பிரதேசமாகி விட்டதா அல்லது ஓட்டலை மனவாடு சகோதரர்கள் உரிமை கொண்டாட வந்திருக்கிறார்களா தெரியவில்லை, பரிமாறும் பாணியில் கூட வித்தியாசம் தெரிந்தது,
கோங்குராவும், பருப்புப் பொடியும், உருக்கின நெய்யும், ஆவக்காயும், கோவைக்காயும் மெனுவிலும் நாக்கிலும் முதலில் நின்றன.
மிளகாய்ச் செடியில் ஒட்டுப் பதியன் வைத்து தக்காளி விளைந்து ரசத்தில் விழுந்தது போல் காரசாரமான தக்காளி ரசம் வேறே. புலுசு என்று சொல்லாவிட்டாலும் தமிழ் ஒப்பனையில் ஆந்திரப் புளிக்குழம்பு சாப்பிடு சாப்பிடு என்றது.
திருப்தியாக உண்டு எழுந்து விடுதியில் அறைக்கு வந்தபோது பிற்பகல் மூன்று மணி. வெய்யில் இன்னும் பளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. காற்று மேலைத் திசையிலிருந்து அடர்த்தியாகத் தொடர்ந்து வீச, அறையின் ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்து காற்றுக்கட்டை போட்டு வைத்தேன்.
நாங்கள் சிறு நித்திரையாகப் போனது விழிப்புத் தட்டும்போது மாலை ஐந்தேகால் மணி.
நேரத்துக்குப் பொருத்தமாகக் கீழே யாரோ செம்பை வைத்தியநாத பாகவதர் கொடுத்த கொலம்பியா ரிக்கார்டில், ராகமாலிகையாக ‘சாயங்காலே’ கிருதி சத்தமாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.
பொடிநடையாக நடந்து, மங்களாம்பிகா காப்பியை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து பெருஞ்சத்தம் – “என்ன டீ ஆபீசர், காப்பி குடிக்க ஆரம்பிச்சாச்சா?”
பனிரெண்டு வருடம் காலச் சக்கரத்தில் யாரோ வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துப்போய் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தைந்தாம் வருடத்து சாயந்திரத்தில் இறக்கி விட்டார்கள்.
யாரோ அது என்று பார்க்க பின்னால் திரும்ப உடனே நினைவுக்கு வந்த முகம் – சக்ரபாணி கோவில் பட்டாசாரியார்.
குடும்பமே டெல்லியிலும் பம்பாயிலும் இருப்பதாக சந்தோஷமும் பிரமிப்பும் விளைவிக்கும் தகவல் சொன்னார் அவர்.
“மாமி கூட பம்பாயில் தான் பிள்ளை கூட. நான் பெருமாள் துணைக்கு இருக்கார்னு இஞ்ச இருந்திண்டிருக்கேன். விட்டுட்டுப் போக மனசு வரலை. சாயந்திர பூஜைக்கு சின்ன பட்டாசாரியாரை நியமிச்சிருக்கு. நான் மெல்ல ஆறு மணியைப்போலதான் போறேன். எழுபது வயசாச்சு. இன்னும் நாலஞ்சு வருஷம் வண்டி ஓடினா போதும்.. வரட்டா.. கோவிலுக்கு வாங்கோ”.
சரமாரியாக எண்களை வீசிப்போன அவருடையை சைக்கிள், மினுமினுப்பு குறையாமல் விண்ணெண்று இருந்தது. அவர் அதில் ஏறி உட்கார்ந்த கம்பீரம், விண்ணென்று இப்போதைக்குக் கிளம்ப மாட்டார், மண்ணில் கணிசமான நாள் பாக்கி உண்டென்று சொன்னது.
Excerpts from my forthcoming novel RAMOJIUM