நாவல் ராமோஜியம் -மீண்டும் கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு 1947

சக்ரபாணி கோவிலில் எட்டுக்கால் வட்ட மண்டபத்தைச் சுற்றிப் புல்பூண்டுகள் நீக்கி சுத்தமாகப் பெருக்கிக் கோலமிட்டு வைக்கப்பட்டிருந்தது. சிமெண்ட் காணாத கோவிலாகப் பத்து வருடம் முன் பார்த்தது இப்போது அங்கே இங்கே ஒட்டு வேலையும், ஓரமாகச் சின்ன மேடையும், நடைக்கு ரெண்டு பக்கமும் ஒற்றையடியாக சிமிட்டித் தரையுமாக பளிச்சென்று வித்தியாசம் தெரிந்தது.

வட்ட மண்டபம் கடந்து உள்ளே போனோம். பிரகாரத் தூண்களைச் சுற்றிப் பழைய காரையும் சுண்ணாம்பும் பூசிய சிறு மேடைகள் பழைய நண்பர்களாக அந்நியோன்யத்தைச் சொல்லாமல் சொல்லின.

நான் ரத்னாவை எதுவும் பேசமால் இடப்புறத் தூண் ஒன்றின் முன் கொண்டுபோய் நிறுத்தினேன்.

அவள் உதடுகள் துடித்து விம்ம ஆரம்பித்தாள்.

”இங்கே தான் இங்கே தான்..” அவளுக்கு வார்த்தை வரவில்லை.

அங்கேதான் முதன்முதலாக அவளைத் தொட்டு அவள் கையை எடுத்து முத்தமிட்டேன். அந்த கணத்துக்கு இனி எப்போதும் போக முடியாது. எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு முறை வாழ்வில் நேர்ந்த அபூர்வமான கணமும், யுகமும் அது.

அதற்கு அப்புறம் பங்கு போட்டுக்கொண்ட வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடங்கள் எல்லாம் அந்த மாயமான கணத்தைவிட ஆகச் சிறியவையே. காதலும், காமமும், நேசமும், அன்பும் இன்னும் வளர்திசையில் என்றும் இருக்கட்டும்.

பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வெளியே வந்தோம். சாரங்கபாணி கோவிலுக்கும் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் நாளைக்குப் போகலாமென்று ஒத்தி வைத்தோம்.
அடுத்து? இரண்டு பேருக்கும் நினைவில் வந்தது துக்காம்பாளையத் தெரு தான்.

இருட்டிக்கொண்டு வரும் நேரத்தில் துக்காம்பாளையத் தெரு அதனுடைய தனித்தன்மை எல்லாம் இழந்து நகரத்தின் இன்னொரு வீதியாக ஒப்பனை அணிந்திருந்தது. எல்லா வீடுகளும் ஒரு போல இருட்டும் வெளிச்சமும் கலந்து பூசி நின்றன.

பழைய நினைவுகளைத் தேடி இங்கே இப்போது வந்திருக்கக்கூடாது. வழியோடு போகும்போது எதிர்ப்படும் ஏதோ ஒரு நீளமான தெரு இது. அவ்வளவுதான். நடந்து பார்ப்போம் என்று ஜோடியாக நடந்தோம்.

”மாமா வீடு ஞாபகம் இல்லையா? போய்க்கிட்டே இருக்கீங்க”. ரத்னா நினைவுபடுத்தினாள்.

வீட்டு வாசலில் இத்தனைக்கும் பளிச்சென்று டியூப்லைட் எரிந்து கொண்டிருந்தது. வாசலில் வைத்திருந்த பெயர்ப்பலகை வீட்டு முகப்பை ஏதோ ஆபீஸ் முகப்பாக்கி விட்டிருந்தது. வாசல் பழைய உருவத்தில் இல்லாமல் இடித்துக் கட்டப்பட்டு, இரண்டு கதவுகளும் நிலைகளும் அடுத்தடுத்து இருந்தன. இரண்டு கதவும் மூடப்பட்டிருந்தன.
வலதா இடதா?

ரத்னா கதவைத் தட்டுவதற்கு முன் எந்தப் பக்கம் என்று என்னிடம் கேட்டாள். நான் இடது என்றேன்.

தட்டி இரண்டு நிமிடம் கழித்து வலது பக்கக் கதவு திறந்து, ராமாராவ் மாமா.

”யாரு, ஏ ரத்னாவா, என்ன ஆச்சரியமா இருக்கே.. ரத்னா இல்லையா நான் தான் கண்ணு சரியாத் தெரியாம யாரையோ ரத்னானு சொல்றேனா.. அதானே ரத்னான்னா, கூட ராமோஜி வந்திருப்பானே ”.

ராமோஜி வந்திருக்கேன்.

நான் குரல் கொடுக்க, கொஞ்சம்போல் தலையைச் சாய்த்து என் பக்கமாக குழிவிழுந்த கண்கள் நிலை கொண்டன.

பனிரெண்டு வருடத்தில் ராமாராவ் மாமா ரொம்பக் கிழண்டு போயிருந்தார். குரலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
உள்ளே கூட்டிப் போனார். அவரும் மாமியும் மட்டும் இருக்கக் கண்டோம்.

மகளுக்கு மூன்று வருஷம் முந்தி கல்யாணம் நடத்தி நானும் ரத்னாவும் தஞ்சாவூர் போயிருந்தோம். அது பூர்வீக வீடாம் அவருக்கு. அவருடைய இரண்டு மகன்களும் எங்கே?

”பொண்ணும் மாப்பிள்ளையும் பாம்பேயிலே செட்டில் ஆயாச்சு. ரெண்டு பேரும் லீவர்லேயும், பாமாலிவ்லேயும் டைபிஸ்ட் ஸ்டெனோகிராபரா இருக்காங்க.. மூத்த பிள்ளையும் போன மாதம் பாம்பே போய்ட்டான். கால்கேட் கம்பெனியிலே ஸ்டெனோ. சின்னவன் பிசினஸ் பண்றான். ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ரெண்டும் ரெண்டு ஏஜன்ஸி அவனுக்கு. அது தான் கோடவுண்”.

அவர் கையைச் சுட்டிய அடுத்த கதவுக்குப் பின் கமகமவென்று கோக்கோ வாடையோடு போர்ன்விடா, பால் மணக்கும் ஆர்லிக்ஸ். வேறே என்ன எல்லாம் இருக்கோ.
”சாயந்திரமே தஞ்சாவூர் போனான். அங்கேயும் இவன் ஏஜென்ஸி தான் டெலிவரி. ராத்திரி வர பதினொண்ணு மணி ஆயிடும். வர்ற வரைக்கும் எங்களுக்கு தூக்கம் வராது”. மாமி சொன்னாள்.

படிச்சுட்டு பம்பாய் போகலாமில்லேன்னு கேட்டா, பம்பாய் வருமானத்துக்கு மேலே உள்ளூர்லேயே கிடைக்குதுங்கறான்’பா. அப்படியும் இருக்குமா?” ராமாராவ் மாமா என்னைக் கேட்டார்.

நான் பம்பாயும் போனதில்லை. டைப் ஷார்ட் ஹேண்டும் படித்ததில்லை. ஸ்டெனோ வருமானம் பற்றி எல்லாம் விலாசினியிடம் கேட்க வேண்டும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்?

துர்நினைப்புகளை தூர விரட்டினேன். போகும் இடத்தில் எல்லாம் புவி வருகிறாளோ என்னமோ விலு நிச்சயம் உண்டு.

எதிர்பார்த்தபடி மாமி ”என்ன சாப்பிடறீங்க, ஹார்லிக்ஸா போர்ன்விடாவா ஆல்விடோனா?” என்று கேட்டாள். அது என்ன ஆல்விடோன் என்று அவளைப் பார்க்க ராமாராவ் மாமா பொக்கைவாய்ப் புன்னகையோடு கட்டை குட்டை மகாத்மா காந்தியாக இருந்து சொன்னார் –

”அது நான் எடுத்த ஏஜென்சி. கல்யாண அலையன்ஸ் அரேஞ்மெண்ட் ஓட மாட்டேங்குது. பசங்க எல்லாம் டைப், ஷார்ட் ஹேண்ட் படிச்சுட்டு பம்பாயிலே வேலைக்கு ஓடறதிலேயே குறியா இருக்காங்க.. பலசரக்குக்கடையை எடுத்தாச்சு. நின்னு வியாபாரம் பண்ண முடியலே. சும்மா இருக்கவும் முடியாம முதல்லே ஸ்டேன்ஸ் காப்பிக்கொட்டை வாங்கி விற்க ஆரம்பிச்சேன்.. அதுலே பாரு.. எல்லாம் நல்லா இருக்கு, காலி காபிகொட்டை டின்னை திரும்பித் தரணுமாம்.. நம்ம ஊர்லே காப்பிக்கொட்டை, பொடி வாங்கறபோதே காலி டின்னு உனக்கு எனக்குன்னு ரிசெர்வ் பண்ணிட்டு போயிடுவாங்க.. வீண் சண்டை வரும்.. அதான் அடுத்து சாதுவா ஆல்விடோன் காண்ட்ராக்ட் எடுத்தேன். எல்லாம் ஒரே சமாசாரம் தான். பால் பவுடர், கோக்கோ. உ:ள்ளூர் சரக்கு.. கமிஷன் நிறைய தர்றாங்க.. கல்யாணம், சீமந்தம் இப்படி நிகழ்ச்சியிலே எவ்வளவு கேட்டாலும் கொடுக்க சாப்பாட்டு காண்ட்ராக்டருக்கு கட்டுப்படியாறது”.

மாமா இன்னும் அரை மணி நேரம் பேசியிருந்தால், நானும் அவரிடமிருந்து ஒரு டஜன் ஆல்விடோன் டின்கள் வாங்கியிருப்பேன்.

ரத்னா கொண்டுவந்த மதறாஸ் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் ஸ்வீட்ஸ் அட்டை டப்பாவை அவர்களிடம் கொடுத்தாள். மாமிக்குப் பிடித்த பாதுஷா. வாங்கிக்கொண்ட அவள் சிரிப்பு மனதுக்கு இதமானது.

“உனக்கு ரத்தத்திலே ஷுகர் கம்மி. ஜமாய். நான் ஒரு ஸ்வீட் தின்னா ஒன்பது மாத்திரை முழுங்கணும்” மாமா லேசான அசூயையோடு சொன்னார்.

குடிக்கலேன்னா மாமா வருத்தப்படுவார் என்று ஆல்விடோன் சூடாகக் கலந்து தரச்சொல்லிப் பருக, அற்புதமாக இருந்தது.

போர்ன்விடா விளம்பரத்திலே, ’ரபீந்தரநாத் தாகூர் போர்ன்விடாவை பாராட்டினார்’னு போடற மாதிரி ஆல்விடோனை தேசிகவிநாயகம் பிள்ளை பாராட்டினார்னு போட முடியும்னா நிறைய விற்குமோ எனக் கேட்டேன்.

யாரு அந்தப் பிள்ளை என்று மாமாவும் மாமியும் சேர்ந்து கேட்க, அந்த ஐடியாவை அந்தரத்தில் விட்டேன்.

ரவா உப்புமா சாப்பிட்டுப் போங்க என்று மாமி அழைத்ததை அன்போடு மறுத்து நாளைக்கு வரோம் என்று சொன்னோம்.

நாளை பகல் விருந்து இங்கேதான் என்றாள் மாமி. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய்க் குளியல் தினம். பசங்களுக்காக சமையல் பண்ணிப் பண்ணி, ஞாயிறு இப்போதும் காலையிலே கடப்பா நாள் தானாம். மதியத்துக்கு அது பிரியாணி தினம். மட்டன் குருமாவும் வெங்காயப் பச்சடியும் எட்டு ஊருக்கு வாசம் அடிக்கும். மாமி தன் விரல்களை முகர்ந்தபடி ஆனந்தமாகச் சொன்னாள்.

”ரத்னா, நீ கவிச்சி சாப்பிடுவே இல்லே?” மாமி கேட்டாள்.

ரத்னா என்னைப் பார்த்தாள்.

”பிள்ளைத்தாச்சி ஆசைப்படறா, வேணாம்னு சொல்லாதே ராமோஜி”.

மாமி எப்படித்தான் கண்டுபிடித்தாளோ. சரி என்றேன் புன்னகையோடு. ரத்னா மாமியை அணைத்துக் கொண்டாள்.

”தேங்க்ஸ் மாமி”. ரத்னா மாமிக்குச் சொன்னாள்.

“ஏண்டி தங்கக்குடமே, இந்த நியூசுக்கு ஸ்வீட் கிடையாதா?” மாமி கேட்டாள்

“எல்லாம் ஒரே பாக்கெட் தான்” மாமா கண்டிப்பாகச் சொன்னார்.

”நான் சாப்பிடறேன், நீங்க சாப்பிட முடியாது.. பொறாமை” மாமி சிரித்தாள்.

எனக்கு தேங்க்ஸ் கிடையாதா? நான் கேட்டேன்.

தனியா வாங்கிக்கோ என்றாள் மாமி.

”எங்கே வாங்கறது, மாமா தான் பலசரக்குக் கடையை எடுத்து வச்சுட்டாரே” என்றேன் செருப்பில் காலை நுழைத்துக்கொண்டு.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன