பத்து என்ன, ஆயிரமும் அதற்கு மேலும்

 

ஆகஸ்ட் 19, 2008 செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு எழுதியது

எப்படி வந்திருக்கு? தாடியும் தீட்சண்யமான விழிகளுமாக எனக்கு முன்னால் நின்று கேட்கிறார். நிறையச் சொல்ல வேணும். சம்பிரதாயமான வார்த்தைகளோ புகழ்தலோ இகழ்தலோ இவரைக் கொஞ்சமும் பாதிக்காது என்று தெரியும். மனம் திறந்து பேச ஒரு சொல்லைத் தேட வேண்டியிருக்கிறது. பின்னால் விம்மல் ஒலி. மூத்த சகோதரி வயதில் அந்த நகைச்சுவை நடிகை அழுதபடி இவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறார். சொல்ல இதுக்கு மேல் ஒண்ணும் இல்லை.

அரங்கம் நிறையத் திரையுலகத்தில் ஹூ இஸ் ஹூ எடுத்தால் இடம் பெறக்கூடிய வெகு முக்கியமான புள்ளிகள். குசேலனில் தொடங்கி சாக்லெட் கிருஷ்ணன் வரை தமிழ் சினிமாவை பாதித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள். ‘You raise the bar on excellence every time you create anew’.

எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் தன் திறமையாலும் உழைப்பாலும் இவர் கட்டி நிறுத்திய கதை நடத்துனன் பிம்பம் ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அந்த பன்முக விகசிப்பு ஒரு படைப்பாளராக இவர் எழுதும் திரைக்கதையிலும் உண்டு. இந்திய சினிமாவின் சமன்பாடுகளை மாற்றியமைக்கத் தொடர்ந்து விடாமுயற்சி செய்யும் அசாத்தியத் துணிச்சல் பெருங்கூட்டத்திலிருந்து இவரைப் தனித்து நிறுத்துகிறது – விலகி இல்லை, வித்தியாசமானவராக. ஒரே ஒரு மொழியில் ஒரு மாறுபட்ட திரைப்படம் எடுக்கவே மூலதனமும், உழைப்பும், அசாத்திய நம்பிக்கையும் தேவைப்படும் இந்தக் காலத்தில், நூறு கோடிப் பேரை சென்றடைய இவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் பாசிட்டிவ் ஆகப் பலமான அதிர்வுகளை உண்டாக்கும். உண்டாக்க வேண்டும்.

இன்னொரு தடவை வெற்றி பெற்றிருக்கிறார். பயணம் தொடர்கிறது.

அடுத்த திரைப்படம் பற்றி விவாதிக்கலாம். வாங்களேன்.

சிகரெட் புகை சூழ்ந்திருக்க ஏழெட்டு பேர் உட்கார்ந்து, பிளாஸ்கில் இருந்து காப்பி எடுத்து யாரோ வந்து விளம்பிக் கொண்டே இருக்க, ஆற்றி ஊற்றிக் குடித்தபடி அரட்டை அடிக்கும் சூழ்நிலையை எதிர்பார்த்து முதல் தடவை போனபோது இனிமையான ஆச்சரியம். கார்ப்பரேட் போர்ட் ரூம் போல் நீள மேசை போட்ட அறை. ஓரமாக லேப் டாப்பில் எழுதிக்கொண்டு இவர் மட்டும் உட்கார்ந்திருக்கிறார்.

ஒரு டிராப்ட் முடிச்சுட்டேன். இதை அடித்தளமா வச்சுக்கிட்டு மேலே போகலாம்.

சரளமான ஆங்கிலத்தில் விறுவிறுப்பாக நகர்கிற திரைக்கதை அது. ஒரு நல்ல எழுத்தாளனுக்கே சித்தியாகும் நடை. சுவாரசியமாகப் படித்துக் கொண்டு போகிறேன்.

எழுதப் பயன்படுத்திய மென்பொருள் பற்றி விசாரிக்கிறேன். தொழில்நுட்ப வல்லுனராக முழு விவரம் சொல்கிறார். இதே பணிக்கான மற்ற மென்பொருட்களோடு ஒப்பிட்டு ஆராய்வதில் கொஞ்ச நேரம் கடக்கிறது.

கதை நடக்கிற காலகட்டம் பற்றி உரையாடல் நீள்கிறது. தமிழ்நாட்டில், வட இந்தியா, கிழக்கு பிரதேசங்களில், அண்டை நாட்டில், மேல் நாடுகளின் அந்தக் காலத்து வரலாறும் சமூகமும், கலையும், இலக்கியமும் விவாதிக்கப்படுகிறது – with an amazing eye for detail.

நான் ஆராய்ச்சி இதழில் வந்த சில பழைய கட்டுரைகளைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு முக்கியமான வரலாற்று அறிஞரின் புத்தகங்களுக்கு பேச்சு அடுத்து தாவுகிறது.

‘இதோ இங்கே இருக்கே அது எல்லாம்’. மேஜையில் குவிந்திருக்கும் புத்தகங்களில் ஒரு பகுதியைக் காட்டுகிறார். நான் சொல்ல நினைத்த புத்தகங்களோடு மறந்து போன சிலவும் அங்கே உண்டு.

கடற்கரையை ஒட்டி அவருடைய இல்லத்தில் புத்தகங்களுக்காகவும், கலைப் படங்களின் பிரதிகளுக்காகவும் பிரத்யேகமாக எழுப்பி இருக்கும் கட்டிடத்தில் விவாதங்கள் தொடர்கின்றன. ஒரு நல்ல நண்பராக, திரைப்படக் கலை பற்றிப் பேசும்போது அவ்வப்போது நட்பான ஆசானாக அவர் தகவல் பகிர்ந்து கொள்ளும்போது கதை விவாதம் என்று மறந்து போய் கதையும், கவிதையும், நாடகமும், இசையும், திரைப்படமுமாக நேரம் நீளுகிறது.

பலராம நாயுடுவின் ஆந்திரத் தமிழ், அதைத் தெலுங்கில் செய்யும்போது தமிழர் பேசும் தெலுங்கு உச்சரிப்பின் நுணுக்கங்கள், ஜார்ஜ் புஷ்ஷின் ஆங்கிலம், மலையாளத் திரையுலகம் என்று நடுநடுவே நான் கேட்கக் கேட்க இன்னும் சில விவரணைகள். ‘ஆமா, சிவேங்கையிலே உங்களுக்கு இவரைத் தெரியுமோ?’ அவர் குறிப்பிட்டு விசாரித்தவர் எனக்கு ஆசிரியர். ‘சிவேங்கை’ என்று இயல்பாக வந்து விழுந்த ‘எங்க ஊர்த் தமிழில்’ செம்மண் வாசம் பலமாகக் கவிகிறது.

சதத் ஹுசைன் மாண்டோ, சிவவாக்கியர், தெலுங்கு கவிஞர் Sri Sri, ஆல்மடோவர், ரோசிலினியின் ஸ்ட்ராம்பொலி, ஹிட்ச்காக்கின் வெர்டிகோ, சுஜாதா, சுப்பிரமணிய ராஜு, எம்.எப்.ஹுசைன், மலையாள நகைச்சுவை நடிகர் பகதூர், காசரவள்ளி, ரித்விக் கதக் என்று பேச்சு பல வட்டம் சுற்றி வந்து அவ்வப்போது தாச்சியாக திரைக்கதையைம் தொட்டு நகர்கிறது. ஏதாவது நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும்போது சட்டென்று அவர் முகத்திலும் குரலிலும் body language-லும் தத்ரூபமாக ஒரு நிமிடம் அந்தச் சூழ்நிலை திரும்ப உருவாகிறது. பத்து என்ன, நூறு பேரை அநாயாசமாக இவரால் ஒரு நிமிடத்தில் அச்சு அசலாகக் கண்ணுக்கு முன் கட்டி நிறுத்தி நம்ப வைக்க முடியும்.

வாரக் கடைசியில் அவர் அடுத்த பிரதியை முடித்திருக்கிறார். உரையாடல் தொடர்கிறது.

ஆகஸ்ட் 19, 2008

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன