“பாடுங்கோ சார்”
மத்தளநாராயண ராவ் கஞ்சிரா வாசித்தபடி பக்கத்தில் வந்து ரெண்டு பேரையும் உற்சாகப்படுத்த, நாயக்கரின் மிருதங்கம் பேச ஆரம்பித்தது.
நான் ராவின் கஞ்சிராவை ஒரு நிமிடம் வாங்கி வாசித்ததை நாயக்கர் ரசித்தார். “ஏது டேப் வாசிக்க வரும்போல” என்றார் அவர்.
“எல்லாம் தேர்ந்த கைதான்.. அவங்க அப்பா மராட்டி அபங் பாடினா,, ஆஹா” என்றபடி மத்தளநாராயண ராவ்ஜி கஞ்சிராவை என்னிடமிருந்து திரும்ப வாங்கிக் கொண்டு முன்னால் போனார்.
கூட்டமே இல்லாத சொர்க்கத்தில் ஏதோ ஒரு உத்தியானவனத்தில் பெயிண்ட் காயாத பெஞ்ச் ஒன்றில் ஆரோகணித்து ’மஜே மாகரு பண்டரி’ என்று மராட்டி அபங்க் எனச் சொல்லப்படும் பக்தி கானம் பாடிக்கொண்டிருந்த என் பாபாஜி பத்மநாப ராவ்ஜியை ஒரு நொடி நினைத்துக் கொண்டேன்.
“பிரம்மம் ஒகடே பர பிரம்மம் ஒகடெ” என்று சுபாங்கி அம்மாள் பலமாக எடுக்க பஜனை கோஷ்டி சுறுசுறுப்பானது. ‘தந்தநாந அஹி தந்தநாந புரி தந்தநாந பல தந்தநாந’ என்று சந்தோஷமான கோரஸ் உயர்ந்தது. அம்மாள் ஆட வயதான மற்ற கோபிகைகளும் கோபர்களும் பரவசமாகக் குதித்து ஆடினார்கள். ரத்னா இங்கே இருந்திருக்க வேணும்.
இளைய தலைமுறையாகக் கைத்தாளம் போட்ட அந்தப் பையன்களைப் பார்த்து நான் புன்சிரிக்க அவர்களோ லட்சியமே செய்யாமல் தெருவில் குனிந்து வாசலில் மார்கழி மாதக் கோலம் போட்டுக் கொண்டு வரிசையாக வீடு தோறும் நின்ற பெண்களின் முகங்களை உன்னிப்பாகப் பார்த்தபடி வந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.
வக்கீல் குமஸ்தர் காகர்லா பக்தவத்சலம் வீட்டு வாசலில் வடிவாக நின்ற இரண்டு இளம் வயசுப் பெண்கள், பஜனை கோஷ்டியைக் கண்டு விருட்டென்று ஓரமாக ஒதுங்கி நின்று கோலத்தைப் பார்க்கிறதோடு, கள்ளக் கண்போட்டு மேற்படி பையன்களையும் பார்த்துக் கொண்டிருக்க, எனக்கு விஷயம் விளங்கிப் போனது.
பொத்தையோ பத்தையோ, காலைப் பொழுதில் தாள வாத்தியத்தைத் தூக்கிச் சுமந்து கொட்டிக்கொண்டு போக இந்த மலையாளக் கரைப் பையன்களைத் தூண்டிய உன்னதமான தரிசன அரம்பையர் அந்த இருவரும். ரத்னா பாய் கல்யாணமான புதுசில் இருந்த மாதிரி வெகு அமைதியான அழகு அது. ரத்னாவின் தற்போதைய அதிரூப சௌந்தர்யத்தை வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை.
முசுகுந்த சக்கரவர்த்தியை மற்றவர்கள் கரிசனமாகக் கவனித்துப் சரணத்தின் மேல் சரணமாகப் பாடிக் கௌரவிக்க, நாயக்கர் என்னையும் தள்ளிக்கொண்டு கடைசி வரிசைக்கு வந்தபடி தாளம் பிடித்தார்.
“நம்மளையும் கௌரவிச்சிருக்காங்க போல”
சொல்லியபடி, காவிப்பல் தெரிய சிரித்தார் அவர். எனக்குத் தலையும் வாலும் புரியவில்லை. போல என்றால் என்ன என்று தெரியவில்லை. மேலும், யார் கௌரவித்தது, யாரை, என்ன கௌரவம் என்ற தகவலோடு இந்த நம்மளை என்பது நாயக்கர் மட்டுமா நானும் கூடவா என்றும் தெரிந்து கொண்டாலே தக்கபடி பேச முடியும்.
“ஏஆர்பி வார்டன் புது லிஸ்டுலே நம்ம ரெண்டு பேரோட பேரும் இருக்காம். நாளைக்கு தபால் வருமாம்”, மெய்சிலிர்த்துச் சொன்னார் நாயக்கர்.
எனக்கும் ஒரு வினாடி தரைக்கு மேலே பறக்கிற மாதிரி இருந்தது.
ஏர் ரைட் வார்டன்!
ஜெர்மானியனோ, ஜப்பான்காரனோ விமானத்தில் வந்து மெட்றாஸில் குண்டு வீசித் தாக்கினால் உயிர் அபாயம் சற்றும் இல்லாமல் அல்லது ஆகக் குறைவாக இருக்க நடவடிக்கை எடுக்கிற கௌரவ வேலை. நாயக்கர் சொன்ன மாதிரி, பதவி உருவத்தில் கவுரவம் தேடி வந்திருக்கிறது!
பஜனை, கல்யாண மண்டபத்து காம்பவுண்டில் முடிய, தயாராக சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் கிண்டிக் காத்திருந்த யாரோ பூவரச இலை தொன்னையில் விளம்பித் தந்தார்கள்.
ரெண்டு கையிலும் தொன்னையோடு நான் வீட்டுக்குள் நுழைய, ’இதென்ன ஜதையாக எதையோ தாங்குகிற மோஸ்தர்லே ரெண்டு கையையும் விரிச்சுத் தூக்கிக்கிட்டு?’ என்று கேட்டு ரத்னா சிரித்தாள்.
அவள் மனசில் ஓடிய குறும்பு எனக்கும் ஒரு நிமிஷத்தில் தட்டுப்பட, “உஷ், பஜனை பிரசாதம். துஷ்ட நினைவு ஏதும் வேணாம்” என்று நானும் சிரித்தேன்.
மதர்த்த ஆரணங்குகள் நடமாடும் தெரு நீள இப்படியே கையை வைத்துக் கொண்டு நடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்க வெட்கம் பிடுங்கித் தின்றது. நாலு பேர் பார்க்க ஏர் ஹாரன் பாம் பாம் என்று முழக்கிக் கார் ஓட்டிப் போகிற சங்கடமோ சந்தோஷமோ போல இது.
அப்படித்தானே என்று சந்தேக நிவர்த்திக்காக ரத்னாவிடம் கேட்க குறுகுறுவென்று என்னையே பார்த்தாள்.
அவள் தேவையில்லாமல் கண் சிமிட்டினாள். அதுவும் சரியென்று வெண்பொங்கலில் ஒரு தேக்கரண்டி வாயில் இட்டு மென்றபடி எழுந்து போய் வாசல் கதவை ஜாக்கிரதையாக மூடிவிட்டு வந்தேன்.
“இதெதுக்கு இப்போ கதவடைச்சு பகல்லே ப்ளாக் அவுட்? இலவசம்னா எந்த நேரத்திலேயும் கேட்குமா?”.
அவள் என்னைத் தள்ளி விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த பத்திரிகைக் குவியலில் மேலே இருந்த தினப் பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய தமிழ் வாசிப்பு நாளுக்கு நாள் முன்னேறி வருவதைக் கவனித்தேன்.
“கர்னல் அமெரி துரை, பிரிட்டீஷ் துருப்புகள் இந்தியாவில் நிரந்தரமாக இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்”.
அமெரி துரையை காலரா கொண்டு போக என்றபடி பத்திரிகையைத் தரையில் வீசினாள் ரத்னா. இளைத்துப்போன ஒரு வாரப் பத்திரிகையைக் கையில் எடுத்தபடி ஊஞ்சலில் அசைந்தாள்.
நான் எச்சில் கையோடு ஊஞ்சலில் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். பொங்கலில் உப்பு தூக்கலா இருக்குமே என்றாள் துப்பறியும் நிபுணன் ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில்.
வாஸ்தவம் தான். தானம் வந்த பொங்கல் என்றாலும் உப்பு உரைப்பு சரி பார்க்கத் தோன்றாதோ. நாலு கவளம் விழுங்கிக் கூடுதல் உப்பேறிய இதைச் சாப்பிடும் சிரமத்திலிருந்து ரத்னாபாயை விடுவிக்கப் பார்த்தேன். அவளோ பொங்கல் வாடையை முகர்ந்தே அது எந்த விதத்தில் வித்தியாசமானது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.
எல்லாம் அவள் தொடர்ந்து உபயோகிக்கும் நாசிகா சூரணமான ஆஃபீசர்ஸ் பட்டணம் பொடியின் மகிமை என்று நினைக்க வெகு சந்தோஷமாக இருந்தது.
என்ன படித்துக் கொண்டிருக்கே? கேட்டபடி அவள் தோளுக்கு மேலே தாடையை இருந்தி வைத்துப் பார்த்தேன். வியாசர் அமுதத்தில் கீசக வதம்.
ஆச்சாரியார் வியாசர் அமுதத்தை இன்னும் முப்பது வருஷம் வாராவாரம் கிண்டிக் கிளறிக் கடைந்து பரிமாறினாலும் ரத்னா பாய் பயபக்தியோடு தினம் குளித்து, ராபின் நீலம் போட்டுத் துவைத்துத் தூவெண்மையான வாயில் சேலை உடுத்தி காலை சாப்பாட்டுக்கு முன் பக்திப் பரவசம் எய்தி ஊஞ்சலிலோ, இல்லை, சமையலறை சிமிட்டித் தரையில் மனைப் பலகை இட்டோ பத்திரிகையோடு உட்கார்ந்து படிக்கத் தவற மாட்டாள்.
”ஆச்சாரியார் சாத்வீகமான சாது மனுஷர். நீ சுந்தரியான, சாத்வீகமும் சாந்தமும் கொண்ட குல ஸ்திரி. இருட்டில் ஒரு ஜீவனை வதம் செய்வதைத் தத்ரூபமாக விவரிக்கும் இந்தக் கொலைச் சிந்து வகை கீசக வதம் உப கதையில் உங்களுக்கு அப்படியென்ன ஓர் ஈர்ப்பு?”
நான் அவள் இடுப்பை வளைத்தபடி கேட்க, அழகாக அழகு காட்டியபடி நகர்ந்து உட்காரப் பார்த்தாள். அவள் தலையில் செருகியிருந்த கொண்டை ஊசி தளர்ந்து என் கையில் விழுந்தது.
அதுவும் நல்லது தானென்று எடுத்து உடனே காது குடைய ஆரம்பித்தேன். அப்போது தான் இவளிடம் சொல்ல வேண்டிய தலை போகிற தகவல் இருக்க அதைச் சொல்லாமல் இத்தையும் அத்தையும் சொத்தையாக இவளிடம் பகிர்ந்து கொள்கிறோமே என்று நினைப்பு வந்து அந்த வினாடியே செயல்படச் சொல்லி புத்தி விரட்டியது.
“ரத்னா, ப்ரிய சகி, விஷயம் தெரியுமோ” என்று ஆவலுடன் விசாரிக்க, ”என்ன விஷயம்? பெங்கால் கெமிக்கல்ஸ் கொண்டை ஊசி பண்ணுவதை நிறுத்திக் கொண்டார்களா?” என்று பதில் கேள்வி கேட்டாள் ஆரணங்கு.
பெங்கால் கெமிக்கல் கம்பெனி, கொண்டை ஊசி உற்பத்தி செய்கிறார்கள் என்ற தகவலே எனக்குப் புதுசு. பின்னி துணியாலையைக் கொண்டு முழுக்க முழுக்க காக்கித் துணி மட்டும் உண்டாக்கி ராணுவத்துக்கு அனுப்பி வைக்கிற சர்க்கார், ஏதோ காரணத்துக்காக பெங்கால் கெமிக்கல்ஸை இதுவரை கொண்டை ஊசி மட்டும் உருவாக்க வைத்திருக்கலாம்.
யுத்த காலமாச்சே. யார் என்ன செய்யணும் என்று சர்க்கார் சொன்னால் ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காமல், அதன்படி நடக்க வேண்டியதுதான்.
பெங்கால் கெமிக்கல்ஸும் கொண்டை ஊசியும் இருக்கட்டும். ரத்னாவை இன்னும் நெருங்கி வனப்பான காது மடலில் மினுமினுப்போடு படிந்திருந்த கூந்தல் தைல நறுமணம் நுகர்ந்தபடி, “நானும் ஏஆர்பி வார்டன் ஆனேன்” என்று பெருமையோடு அறிவித்தேன்.
என் கையில் இருந்து கொண்டை ஊசியைப் பிடுங்கி பக்கத்தில் வைத்தாள். இடுப்பில் செருகியிருந்த அட்டையிலிருந்து இன்னொரு கொண்டை ஊசி எடுத்துத் தலையில் செருகிக் கொண்டு, “ஏஆர்பி வார்டன்னா குறுக்கே வார் வச்ச காக்கி ட்ரவுசரும் வாயிலே விசிலுமா சதா இருப்பீங்களா” என்று கிண்டலாகக் கேட்டாள். மாட்டேன் என்றேன் நிச்சயமில்லாமல்.
”இங்கே சுத்து வட்டாரத்துலே வார்டனா நிஜாரோட சுத்திட்டிருந்தா, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சர்க்கார் உத்தியோகத்துக்கு எப்படி போவீங்க?”.
அவள் கேட்டது நியாயமான கேள்விதான். சகல உரிமையோடும் உத்தேசமாக அவள் தோளை இறுகப் பற்றி விவரம் சொல்ல ஆரம்பித்தேன்.