புருஷன் யுக புருஷனானதில் குபீரெனப் பொங்கிப் பிரவகித்து ஏற்பட்ட முகமும் அகமும் கொள்ளாத சந்தோஷத்தோடு என் பிடியிலிருந்து விலகி மறுபடியும் சமையல்கட்டுக்கு ஓடினாள்.
பத்து நிமிடத்தில் திரும்புவதற்குள் அவள் படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிகையைப் புரட்டினேன். சிசுக்களின் ஈரல் குலைக்கட்டி குணமாக ஜம்மியின் லிவர் க்யூர், தரமான நரசூஸ் காப்பி, நடிகை சோபனா சமரத் சதா உபயோகிக்கும் தெலக்ஸ் சோப், கண்ட்ரோல் விலைக்கு சர்ஜிக்கல் எஃகில் உருவாக்கிய விட்டா பிளேடு, பழைய சாக்குப் பைகள் நியாயமான விலைக்கு விற்க கன்னி ட்ரேடிங் கோ, ஆதியப்ப நாயக்கன் தெரு, சென்னை என்று லௌகீகமான விளம்பர மயம். பழைய சாக்குப்பையை நியாயமான விலைக்கு வாங்கி என்ன செய்யணும்?
“இன்னும் சாதம் வடிச்சாகலியா?” நான் ஊஞ்சலை விட்டு எழுந்தபடி கேட்க, திரும்பிய ரத்னா பாய் தரைக்கு இழுத்து சுவரில் மரப்பாச்சி மாதிரி என்னைச் சார்த்தி வைத்து அவளும் பக்கத்தில் உட்கார்ந்து, “அது ஆச்சு.. இப்போ பாயசம் காய்ச்ச ஏற்பாடு பண்ணிட்டு வந்தேன்” என்றாள்.
இந்த பாயசம் காய்ச்சுவது அவளுடைய மராட்டித் தமிழில் கொஞ்சம் நாராசமாக ஒலிப்பது. ரத்னா பிறந்து வளர்ந்ததெல்லாம் மராட்டிய மண்ணில், கோலாப்பூர் ஜில்லாவில், தமிழ் பேசாத இச்சல்கரஞ்சி எனும் நகரத்தில் தான். அவள் வீட்டுக்குள் நூறு வருடம் புராதனமான தமிழ் புழங்கியது. நான் அவளைக் கல்யாணம் செய்தபோது மூக்குப் பொடியோடு அந்தத் தமிழும் இங்கே நுழைந்தது. இப்போதெல்லாம் பண்டிகை, நல்ல நாள், திருநாளுக்கு நானும் பாயசம் காய்ச்சத்தான் சொல்கிறேன்.
”என்ன விசேஷம், இன்றைக்கு பாயசம் காய்ச்ச?”
நான் விசாரிக்க, “நீங்க சொன்னதுதான். கௌரவம் வந்து சேர்ந்ததே” என்றாள்.
மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணெயில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய், என்று கோலாகலமாகப் பசியாறினேன்.
முருங்கைக்காய் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். ரத்னா பாய் கேட்கிற வழியாக இல்லை. ஏஆர்பி வார்டனை அது ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையாக இருக்கலாம். ஏதும் செய்தால் தான் என்ன என்ற வீம்பாகவும், என்ன ஆகுமோ அதையும் எதிர்பார்த்து, வரும்போது சமாளிக்கும் வீராப்பாகவும் இருக்கக் கூடும்.
ஞாயிற்றுக்கிழமைக்கான பகல் சாப்பாடு முடித்து சுடச்சுட ஒரு பெரிய தில்லி டம்ளர் நிறையப் பால் பாயசமும் குடித்து வயிற்றைக் கழற்றி வைக்க முடியுமா என்ற யோஜனையோடு எழுந்தேன். ரத்னா முன் ஜாக்கிரதையாக கொழுந்து வெற்றிலையில் குல்கந்து வைத்துச் சுருட்டி கிராம்பு செருகி வைத்திருந்த பீடா நாலைந்து மென்றிட, வயிறு கனம் கம்மியாச்சு.
நான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை லைபிரரியில் படித்த இங்க்லீஷ் நாசுக்கு, நாகரிகங்கள் பற்றிய புத்தகம் நினைவுக்கு வர, சமையலறை வெளியே நிலைப்படி தலையில் இடிக்காமல் குனிந்து, கதவுக்கு அந்தப் பக்கம் கையில் ஊறுகாய் ஜாடியோடு நின்ற ரத்னா பாயிடம், ஆறு சுவையும் கலந்து மணக்க மணக்க ஆக்கிய போஜனத்துக்காக சாங்கோபாங்கமான நன்றி சொன்னேன்
“தன்னந்தனியாக இத்தனையும் அருமையாக சமைச்சிருக்கே. இதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியலே. உன் கைக்கு சாவகாசமா தங்க வளையல் போடலாம்.இப்போதைக்கு ஒரு தேங்க் யூ சொல்லிக்கறேன். வளை, கடையிலே பத்திரமா இருக்கட்டும்” என்றபடி அவள் கையைப் பிடித்துக் குலுக்கி முந்தானையைத் தள்ளி வளமான மார்பில் முத்தம் கொடுத்தேன். ”வளை போடுற இடம் இல்லே அது” என்றாள். ஆமா என்று இன்னொரு முத்தத்தோடு ஆமோதித்தேன்.
எப்படியும் அடுத்த மாதம் அவளுடைய ஜன்ம தினத்துக்கு இங்க்லீஷ் பாணியில் ஒரு பவுன் நெளி மோதிரமோ பொன் வளையலோ போடத் திட்டமுண்டு. அவளிடம் இப்போது சொல்லக் கூடாது. திடீர் சந்தோஷமாக வரவேண்டியது அது.
“பாயசத்துக்கு நன்றி எல்லாம் கிடையாதா?”
அவள் மாடப்பிறையில் இருந்து பொடிமட்டையை எடுத்து ஒரு சிட்டிகை அள்ளி உறிஞ்சிவிட்டுக் கண் கலங்க என்னைக் கேட்டாள்.
’அமிர்தம்’ என்றபடி, ஈரமான அவள் மூக்கைத் தோள் துண்டில் துடைத்து விட்டு, முத்தமிடப் போனேன். ‘அந்தப் பெண்பிள்ளையை நீங்க மறக்க மாட்டீங்களே’ என்று கையைத் தள்ளினாள் ரத்னா பாய்.
அமிர்தா பாய் என் முறைப்பெண். என்னை விட ஐந்து வயசு பெரியவள். தெலுங்கு பேசும் வாராங்கல் பிரதேசத்து ஹனம்கொண்டாவில் அழுக்கு கோட்டு தரித்த ஒரு டெபுடி தாசீல்தாரின் பெண்டாட்டியாக, மூன்று பெண்களுக்குத் தாயாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள்.
இருதயமே இல்லாததுபோல், அந்த அடுத்தவன் பெண்டாட்டியை எனக்கு மனசு, சரீர ரீதியாக நெருக்கமாக்கி சக்காளத்தி என்று நெடிலாக நொடிப்பாள் ரத்னா, அமிர்தா பாய் பற்றிய பிரஸ்தாபம் கேட்க நேர்ந்தால்.
இத்தனை தள்ளி இருந்தாலும் அமிர்தா அவ்வப்போது safe ஸேஃப் என்று ஓரத்தில் எழுதி போஸ்ட் கார்ட் போட்டு அது வந்து சேர்ந்த இரண்டாம் நாள் கிழிபட்டுக் குப்பைக்குப் போய்விடும். ரத்னா பாய் கைவேலை அல்லாமல் வேறு என்ன?
அமிர்தா பாய் ‘போன வாரம் முழுக்க எனக்கும் இவருக்கும் வயிற்றில் வாயுத் தொந்தரவு அதிகமாகித் தொடர்ந்து வாயுப் பிரிந்து கஷ்டப்பட்டோம்’ என்று போஸ்ட் கார்டில் எழுதி, நடுராத்திரியில் சத்தமான அதிர்வேட்டு போட்டியில் ஈடுபடும் சதி-பதி விஷயம் தெரிவித்தால், மூக்கைப் பிடித்தபடி அந்தத் தபால் அட்டையைக் கிழித்துப் போடாமல் வேறு என்ன செய்ய என்பாள் ரத்னா.
ஊஞ்சலில் படுத்தபடி பத்திரிகையைப் புரட்டினேன். ஏதென்ஸில் தேச பக்த கிரேக்க இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நேச நாடான இங்கிலாந்தின் படையைத் துப்பாக்கியை உயர்த்த வைத்து, பிரதமர் சர்ச்சில் கிரேக்க உயிர் வாங்கிய அந்த அட்டூழியத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது சுகமாகப் பகல் உறக்கம் தழுவிக் கொண்டது.
எழுந்த போது நடுப்பகலுக்கு மேல் ஒரு மணி ஆகியிருந்தது.
”ஞாயிற்றுக்கிழமை தான் அதற்காக இப்படியா ஒரு ராட்சசத் தூக்கம்?”
ரத்னா பாய் ஊஞ்சலை ஆட்டியபடி என் தொடையில் கிள்ளிப் போனாள்.