Excerpts from my novel 1975
கேளு நாயரும் அவர் மகள் பாருகுட்டியும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருக்காவிட்டால் நான் இந்த அத்தியாயத்தை எழுதியிருக்கப் போவதில்லை.
கேளு நாயரைப் பற்றி அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்தானே? பாருகுட்டியைக் கவனிக்கலாம். பாருக்குட்டி இல்லை. பாருகுட்டி. பெயருக்கும் குட்டிக்கும் நடுவே மெய்யெழுத்தெல்லாம் அண்டாது.
மலையாளப் பெண் பெயர்களுக்கு ஒட்டாக ஒரு குட்டியைச் சேர்த்து பாருகுட்டி, அம்முகுட்டி, ஜானுகுட்டி, மோலிகுட்டி. இன்னும் செல்லமாக மாலூட்டி என்ற மாலுகுட்டி.. இப்படி எல்லாம் கூப்பிடுவதில் போதை ஏற்படாத தமிழர்களை நான், சங்கரன் போத்தி என்ற அறுபது சதவிகிதம் தமிழனும் பாக்கி மலையாளியுமான நான் பார்த்ததே இல்லை. மலையாளப் படத்தில் பாவாடை மேல்சட்டை மட்டும் அணிந்த மதர்த்து நிற்கும் சுந்தரிகளை குட்டி என்று கதாநாயகன் சகஜமாகக் கூப்பிடுவதை அசூயையோடு கவனித்த என் ஆபீஸ் சகா ரவீந்திரன் மலையாளப் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்.
”எமர்ஜென்சியிலே எத்தனை அதிகாரம் கவர்மெண்ட் தனக்குத் தானே கொடுத்திட்டிருக்கு. பத்திரிகையை எல்லாம் சென்சார் அதிகாரி சரி பார்த்து, அச்சடிக்கலாம்னு எழுத்திலே உத்தரவு கொடுத்தால் தான் அச்சுப் போடலாம். இதேபோல, மலையாளப் படத்தில் குட்டின்னு வந்தா தயவு தாட்சண்யம் இல்லாம வெட்ட சென்சாருக்கு அதிகாரம் கொடுத்தா என்ன?”
ரவீந்திரன் கேட்பார். அவருக்கு இருந்த ஓரளவு மலையாளி நண்பன் நான் தான். ஆனால் என் வீட்டில் குட்டி அடைமொழிக்கு பாட்டி தவிர யாரும் இல்லை. பார்கவிகுட்டி என்றுதான் என் பாட்டி இன்னும் மணியார்டர் பாரத்தில் கையெழுத்து போட்டு தியாகி மனைவி பென்ஷன் வாங்குகிறாள்.
என் அச்சன் யார் யாரையோ போய்ப் பார்த்து அந்த பென்ஷனில் அரை பங்கு பாட்டித் தள்ளைக்குக் கிடைக்க வழி செய்திருக்கிறார். ஓர் ஆயுர்வேத வைத்தியராக இருந்து கொண்டு அவர் ஆற்றிய அதிக பட்ச குடும்பக் கடமை இதுதான்.
கேளு நாயர் அச்சனைத்தான் பார்க்க வந்தார். அவருக்கு ரொம்ப நாளாக ஒரு பென்ஷன் வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இருபது வருஷம் ரயில்வேயில் நிரந்தரமாக்கப் படாமல் தற்காலிக டிக்கட் கிளார்க், அவ்வப்போது பாயிண்ட்ஸ்மேன், கேட்மேன், டெக்னீஷியன், எஞ்சின் ட்ரைவருக்கு எடுபிடி என்று பல வேலைகளும் பார்த்து, வயதானதால் வீட்டோடு இருக்கப் பட்டவர். ரயில்வே பென்ஷன் ஏதாவது தரவேண்டும் என்று அவர் அனுப்பிய மனு எல்லாம் இதுவரை நிராகரிக்கப் பட்டுவிட்டது.
எமர்ஜென்ஸி காலத்தில் நலிந்தவர்களுக்கு எல்லா ஒத்தாசையும் கவர்மெண்ட் செய்கிறது என்று கேள்விப்பட்டு, அச்சன் மூலம் இன்னொரு தடவை முயற்சி செய்ய வந்திருந்தார் கேளு நாயர். பாட்டியம்மாளுக்கு சிரமப்பட்டு, தியாகி குடும்பப் பென்ஷன் வாங்கிக் கொடுத்தவராச்சே. அச்சன் ஊரில் இல்லை என்று அவருக்குத் தெரியாது போனது.
கூடவே கூட்டி வந்த பாருகுட்டியை ஏதோ திட்டம் போட்டு அழைத்து வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. இரண்டு வருஷம் முன்னால் பார்த்தபோது சோனியாக தலையில் கொஞ்சூண்டு முடியுடன் இருந்தவள் இப்போது கிண்ணென்று கோவில் சிற்பம் போல, ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் போல நிற்கிறாள். தலைமுடி நிலத்தைத் தொடும் போல் அவ்வளவு நீளம், அடர்த்தி, நல்ல கருப்பு. அவள் கண்ணும், கழுத்தும், தோளும் மற்றும்.
என்னைப் பார்க்கத்தான் பாருகுட்டியை கேளு நாயர் கூட்டி வந்திருக்கிறார் என்று திடமாக நம்பினேன்.
“கேளு கொச்சே, முழங்கால் ரெண்டுலேயும் வலி தாங்க முடியாம உசிரு போய்ட்டு வருது. தைலம் இருந்தா புரட்டக் கொடேன்”, பாட்டி விசாரித்தாள்.
ஐம்பது வயது, வழுக்கைத் தலை, வரையறை அற்ற தொப்பை விழுந்த வயிறு என்று கிழண்டு போயிருக்கும் கேளு நாயரை கொச்சு என்று அவருடைய பால்யத்தில் கூட யாரும் குழந்தையாகக் கூப்பிட்டிருக்க மாட்டார்கள். நாயர் பனியாக உருகினார்.
“தள்ளே, பாருகுட்டி தலைமுடி பார்த்தீங்களா? கருகருன்னு தரையை தொடறது. நானாக்கும் தைலம் காய்ச்சினது. அதை கொண்டு வரேன்”.
பாருகுட்டி தலைமுடி வளரக் காய்ச்சியதைப் பாட்டி முழங்காலில் தடவி அவள் அதிபயங்கரமாக கொரில்லா குரங்கு போல ஆவதாகக் கற்பனை தோன்ற, அதெல்லாம் ஆபீஸ் லீவு விட்ட தினத்தில் நடந்தால் போதும் என்று தீர்மானித்து வாசலை அடுத்து என் அறைக்குப் போனேன்.
நாலு புத்தக அலமாரி நிறைய புத்தகம், நண்பர்கள் வந்தால் அரட்டைக்கு இரண்டு நாற்காலி. சின்னதாக ஒரு வட்ட மேஜை என்று இருக்கும் இடம் அது. இடமே மல்லிகைப்பூ வாசனையில் மிதக்க பாருகுட்டி என்னைத் தொடர்ந்தாள்.
“ஏன் பேசவே மாட்டேங்கிறே”, வட்டமேஜை மேல் உட்கார்ந்தபடி கேட்டாள். பாருகுட்டி. தலைமுடியை நெகிழ வாரி, முழங்கால் வரை தொங்கியதை சுவாதீனமாக முன்னால் அள்ளிப் போட, என் முகத்தில் மூலிகைத் தைலமும், மரிக்கொழுந்தும் வாடிக் கொண்டிருக்கும் கதம்பமும் நெடியைக் கிளப்பி ஒரு வினாடி கண் இருள நள்ளிரவாக்கி விட்டு அவள் தோளில் அமர்ந்தது.
இது அழகு ஆக்கிரமிப்பே தான். திட்டமிட்டு நடத்தப்படுவது. யார் திட்டமோ.
காலேஜில் இரண்டு வருடம் பின்னால், என் தங்கையோடு படித்தபோது கண்டுகொள்ளவே மாட்டாள். வர்கீஸ் செரியான் என்று பக்கத்து ஊர் கண்டனியில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மகன், நெடுநெடுவென்று உசரமாக, சதா உல்ஃப் என்று சொல்வது போல் உதட்டைத் துருத்திக் கொண்டிருக்கும் அவனோடு அவளுக்கு நல்ல சிநேகம். வெர்கீஸ், சுல்தான் பத்தேரி என்ற புண்யஸ்தலத்தில், உதடு பெருத்த ஒரு மட்டாஞ்சேரிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.
‘மாவட்டத்திலேயே நீளமான தலைமுடி எனக்குத்தான் இருக்கு. தெரியுமா?”
மெய்யாலுமா? முடிக்கணக்கை எல்லாம் யார் வைத்திருக்கிறார்கள்? எமர்ஜென்ஸியில் இதெல்லாம் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டுமோ?
“ரோமவர்த்தினி தைலக் காரங்க ஒவ்வொரு மாவட்டமா முடியழகி தேர்ந்தெடுத்தாங்க. நம்ம மாவட்டத்திலே என்னை செலக்ட் செஞ்சிருக்காங்க. இனி தமிழ்நாடு ஸ்டேட் பைனல்ஸ் வரும்”.
“யார் இதை தீர்மானிச்சது?”
ரெண்டு மாசம் முந்தி, சசிவர்ணர் சிற்றரங்கத்தில், தாசில்தார் முன்னிலையில், எம்.பி வந்து தேர்ந்தெடுத்தாராம். தமிழய்யா கம்பநாடர், தமிழ் இலக்கியத்தில் தலைமுடி பற்றிப் பேசினாராம். வாட் அ லாஸ் எனக்கு.
நான் அவள் தலைமுடியைப் பார்த்தேன். முழித்திருக்கும் நேரம் எல்லாம் அதை போஷிப்பதைத் தவிர வேறே காரியம் அவளுக்கு இருக்காது என்று தோன்றியது.
தலைக்கு வெளியே இருப்பதற்கு செலவழிக்கும் நேரத்தில் பாதியாவது தலைக்கு உள்ளே இருப்பதற்காகச் செலவிட்டால் இந்நேரம் அவள் பி.எஸ்ஸி முடிக்க முடியாமல் மூன்று வருடமாக முடங்கிக் கிடக்காமல் அதுவும் கடந்து, மேலே எம்.எஸ்ஸியும், பி.எச்டியும் முடித்து காலேஜ் ப்ரொபசராக இருக்கலாமே.
இதை முதலில் இங்க்லீஷிலும் தொடர்ந்து தமிழ், முடிந்தால் மலையாளத்திலும் சொன்னால்?
வேணாம், மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் மூணாம் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என்று அறிவிக்கிற மாதிரி இருக்கும்.
“அப்பா பென்ஷன் பத்தி கேட்க மட்டும் வரலே, நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் முக்கியமா”, பாருகுட்டி விஷயத்துக்கு வந்தாள் ஒரு வழியாக.
“சரி இன்றைக்கு காலை பத்தே முக்காலில் இருந்து நீ எனக்கு அதிகாரபூர்வமான காதலனாக இரு. நாம் நாளை மறுநாள் சாயந்திரம் ஊருணிக் கரையில் சந்தித்து வசந்தா ராகத்தில் அமைந்த இந்தக் கீர்த்தனையைச் சேர்ந்து பாடி காதல் புரியலாம்”
-அப்படி அவள் சொன்னால் சுவாரசியமாயிருக்கும்.