Excerpt from my novel 1975
அரசியல் சட்ட திருத்தம் 38, 39,40,41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் மக்களாட்சியின் சாதனை என்று வானொலி சொல்ல, கவிஞர்கள் சளைக்காமல் வாழ்த்துக் கவிதை எழுதித்தர, சேர்ந்த இசை என்று ஆகாசவாணியில் நடுப்பகலில் கூட்டமாகப் பாடப்பட்டது.
எதிர்க்கட்சிக்காரர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதானதையோ, தலைமறைவானதையோ மறந்தும் வானொலி சொல்லவில்லை. பத்திரிகைகளில் அந்த சாதாரண செய்தி ஏதும் வராமல் இட்லிக்கு அரைத்த மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், ஜலதோஷத்துக்கு பாட்டி வைத்திய மருந்து எது என்று உபயோகமான விஷயங்கள் பிரசுரிக்கப்பட்டு வந்தன.
சிந்துபாத், ஊர்ப்பேச்சு இந்தப் பத்திரிகைகளில் பிரமுகர்கள் தொடர்ந்து பாலாறு தேனாறு பாரதத் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதைக் களிப்போடு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தமிழ் சினிமா, எமர்ஜென்சி பக்கமே போகாமல் ’ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்று அபூர்வ ராகங்களை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தது. ”அத்தை வெந்துடுவாங்க” என்று புதிதாக ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர் சினிமா ‘இதயக்கனி’யில் ஹீரோயின் ராதா சலூஜா பேசிய தமிழை ரசித்து கொஞ்சம் ஏ-த்தனமாக பேச்சு நீண்டது.
“ரொம்ப கருத்தா வேலை பார்க்கறாருங்க உங்க சிநேகிதர். பேச்சு ஆகக் குறைவு. பேச்சைக் குறை, வேலையைச் செய் அப்படின்னு சஞ்சய் ஜி சொல்றதுக்கு எடுத்துக்காட்டு இவரு. ஆனா அரசு ஆதரவா, இல்லையான்னு கேட்டா சிரிக்கறார். பிழைக்கத் தெரிஞ்சவர்”
இப்படி, நடுவில் ஒருதடவை பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்த யாரோ, பேங்க் கவுண்டர் அமளிதுமளிக்கு நடுவில் நல்ல வார்த்தை சொல்லிப் போனார்கள். ஏதோ, குருநாதன் செட்டில் ஆனால் சரிதான்.
ஒரே வாரம். காலையில் கவுண்டர் திறக்கும்போதே சிந்துபாத் ஆபீஸ் பையன் என்று சொல்லப்பட்ட, காக்கி நிஜார் அணிந்த கிட்டத்தட்ட அறுபது வயது ஊழியர் மூச்சு இரைக்க சைக்கிளில் வந்து குருநாதன் சார் விலாசம் தெரியுமா என்று கேட்டார்.
நானும் பரபரப்படைந்து என்ன விஷயம் என்று விசாரித்தேன். அவர் அரசியல் சார்பு நிலைபாடு, எதிர் நிலைபாடு என்றெல்லாம் கஷடப்பட்டு தலையைத் திருகி யோசிக்க மாட்டார் என்று தோன்றியது.
”ரெண்டு நாளா வேலைக்கு வரல்லேங்க”.
சரி போய்ப் பார்க்கிறேன் என்று அனுப்பி வைத்தேன்.
நான் ஞாயிற்றுக்கிழமை ராத்திரி குருநாதன் அறைக்குப் போனபோது அங்கே கரண்ட் இல்லாமல் இருண்டு கிடந்தது. ஒரு பெரிய மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவரே குறிக்கோளாக, கண்ணில் தெரியாத மரப்படிகள் ஏறி மெல்லப் போகும்போது மனதில் பாம்பையும், வௌவாலையும் கண்டால் ஏற்படும் அடிப்படை பயம் எட்டிப் பார்த்தது.
குருநாதன் பத்தொன்பதாம் நூற்றாண்டு பழைய மெட்ராஸ் புகைப்படங்களில் ஆளரவமற்ற கடற்கரைச் சாலையில் சாவதானமாக நடந்து போகும் மனுஷர் போல மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தெரிந்தார். கையில் அட்டையில் க்ளிப் போட்டு செருகிய வெள்ளைக் காகிதங்கள்.
“எழுதிட்டிருந்தேன். கரண்ட் போயிடுச்சு”.
கையில் காகிதத்தோடு எழுந்து நின்று என்னை அந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். நானும் நின்றபடிக்கே, ‘சிந்துபாத்’ என்று ஆரம்பிக்க, பரபரப்படைந்து ‘வேணாம், விட்டுடுங்க சார்’ என்றார். நானென்னத்தை விட? அவர் தான் வேலை வேணாம் என்று விட்டெறிந்து விட்டு வந்திருக்கிறார்.
“சரிப்படலே சார். அது தப்பு”.
அவர் ஆதூரத்தோடு சொன்னார். மெழுகுவர்த்தி சுடர் காற்றில் அலைந்து சீக்கிரம் பேசி முடிங்க. நான் உறங்கப் போகணும் என்றது.
“என்ன விஷயம்?” என்று குருநாதனைக் கேட்டேன்.
“நானும் அடிப்படையிலே எமர்ஜென்சி எதிர்ப்பு ஆள்தான் சார். ஆனா பத்திரிகை நடத்தறவங்க நம்மளைக் கூப்பிட்டு வேலை கொடுத்திருக்காங்க. அதுவும் நந்தனம் பத்திரிகை நின்னு திண்டாடிட்டு இருந்த ஒரு கூட்டத்துக்கே காலோ அரையோ குறைவாகவாவது சம்பளம் கொடுத்து ஒரு கஷ்டமான காலத்துலே கடந்து போக வழி செஞ்சிருக்காங்க. அவங்க எமெர்ஜென்ஸி சப்போர்ட்னா பத்திரிகையும் அப்படித்தான். பிடிக்குதோ பிடிக்கலியோ வேலை செய்யற நேரத்திலே அங்கே என்ன நடைமுறையோ அதைத்தான் கடைப்பிடிக்கணும் அதிலே போய் திரிசமன் செய்யலாமா?” என்றார் படபடப்பாக.
விசாரித்தேன். ஒண்ணுமில்லே என்றவர் கொஞ்சம் தயங்கிப் பிறகு சொன்னார். சிந்துபாத் பத்திரிகையில் இருக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து அரைப் பக்கத்துக்கு ஒரு காலமானார் அறிவிப்பு லே அவுட் செய்து அடுத்த இதழில் பிரசுரிக்கத் தயார் செய்திருந்தார்களாம். மாஜி தொழிற்சங்க, எமர்ஜென்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் கண்ணிலும் கருத்திலும் படாதவாறு, ’25.6.1975 புதன்கிழமை திரு ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்” என்று எமர்ஜென்சி எதிர்ப்பை மறைவாகத் தெரிவிக்கும் ‘விளம்பரம்’ ஒன்றைப் பத்திரிகையின் கடைசிக்கு முந்தைய பக்கத்தில் வைத்திருந்தார்களாம்.
“நான் உடனே எடுத்து விட்டுட்டேன். தப்பு அது. நமக்கு சோறு போடற கையை முறிக்கக் கோடாலி எடுக்கக் கூடாது. நேரடியா இல்லேன்னாலும் தப்பு தப்பு தான். ”