1975 நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி
தி நகர் பஸ் ஸ்டாண்டில் பதின்மூன்றாம் நெம்பர் பஸ்ஸை பிடிப்பதைவிட கஷ்டமான வேலை கிடையாது. திருவல்லிக்கேணி போகும் பஸ் அது.
காலை நேரத்தில் எல்லாக் கூட்டமும் அண்ணாசாலைக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்போதும் திருவல்லிக்கேணி பஸ் நிரம்பி வழியும். மதியம் மீதி ரூட் பஸ் எல்லாம் சும்மா போகும். என்ன காரணத்துக்காகவோ மாம்பலம் மனுஷர்கள் வேகாத வெயில் என்றாலும் திருவல்லிக்கேணி போவார்கள். சாயந்திரம் பீச் போகிற கூட்டம். அதற்கு நாள், கிழமை கிடையாது. அந்தப் போக்குவரத்து முடிந்து இருட்டும்போது சாப்பாட்டுக் கூட்டம் கிளம்பி விடும். விளம்பரப் பலகை இல்லாத, மெஸ் என்ற உணவகங்களில் நாவுக்கு ருசியான ராத்திரி சாப்பாட்டுக்காக அலைகிற மத்திய வர்க்க பிரம்மசாரிகள் நாங்கள். மேன்ஷன்களில் குடியிருப்பவர்கள்.
தி.நகரில் இருந்து ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பாக நின்று நின்று திருவல்லிக்கேணி போக குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடிக்கும். ஸ்கூட்டரை எடுக்கலாம் என்றால் மேன்ஷனே சுற்றுலாப் பயணம் போகும் குழு மாதிரிக் கூட்டமாகக் கிளம்ப வேண்டியிருப்பதால் பஸ் தான் சரிப்படும்.
அது ஆகஸ்ட் 15. வெள்ளிக்கிழமை. சுதந்திர தின விடுமுறை என்பதால் எங்கள் கோஷ்டியில் சிலர் அன்றைக்கு ரிலீஸ் ஆன ‘ஷோலே’ என்ற இந்திப் படம் பார்க்கப் போய் வந்தார்கள். மற்றவர்கள் ஆளாளுக்கு ஒரு திசையில் ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவுகளைத் தேடிப்போய் காப்பிப்பொடி சரியாக வடிகட்டாத ரெண்டாம் டிகாஷன் காப்பியும், உறவுக்கார வகையில் வம்பும் கேட்டு வந்தோம். சந்திக்கப் போன எல்லோருக்கும் கூட விடுமுறை என்பதால் அவர்களும் எங்கெங்கோ அவசரமாகக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். உறவில் சாப்பாடு கிட்டாத சோகமான தினம் அது.
போதாக்குறைக்கு அண்டைநாடான பங்களாதேஷ் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை ராணுவம் சுட்டுக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாக ஆகாசவாணி, எமர்ஜென்சி பிரசாரத்துக்கு நடுவே சொன்னது.
ஓட்டல், பேக்கரி போன்ற தீவன மையங்கள் மூடப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் எழுந்தது உண்மை. ஆனால் அது கலைந்து போக, கடையடைப்பு இல்லாமல், அரைக் கம்பத்தில் எங்கோ கொடி இறக்கிப் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டிக்கப் பட்டது. எப்போதுமே எமர்ஜென்சி முகாரி பாடிக் கொண்டிருப்பதால் ஆகாசவாணியில் பங்களா தேஷ் செய்தி பெரிதாகச் சொல்லப்படவில்லை.
ராத்திரி சாப்பிட முதலில் திருவல்லிக்கேணி புறப்பட்டவர்கள் நானும், கீழே கடைசி அறையில் புதுசாக வந்திருக்கும் விஸ்வநாதனும் தான்.
ரகசியமே பேசத் தெரியாத குரல் விஸ்வநாதனுக்கு. கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கலாம். ஏழு வருஷமாக மெட்ராஸின் பல பகுதிகளிலும் மேன்ஷன் வாழ்க்கை பழகி சுகம் கண்டு இப்படியே மீதி வாழ்க்கையைக் கழித்து விடலாம் என்று கனவு கண்டுகொண்டிருப்பவன். ரொம்ப, ரொம்பவே வெளிப்படையாகப் பேசுகிறவன் என்று சொல்லலாம்.
”ஒன்பது மணிக்கு ஆபீஸ் கிளம்பி போய்ட்டேன். அட்டெண்டென்ஸ்லே கையெழுத்து போடறதுக்கு முந்தி மூத்ரம் முட்டிட்டு வந்துதா, போய்ட்டு போகலாம்னு டாய்லெட்டுக்குள்ளே போனேன். வெளியிலே நாலு பீங்கான்லேயும் சாவகாசமா இன்னிக்கு முழுசும் வேறே வேலை இல்லைங்கற மாதிரி எவனெவனோ அடிச்சுண்டிருக்கான். உள்ளே ப்ளஷ் அவுட்லே போய் நின்னு கதவைச் சாத்தினேன். தொறந்து டொரடொரடொரன்னு பியர் குடிச்ச மாதிரி சுகமா போயிண்டிருந்தேன் பாரு. பிளாஸ்டிக் வாளி பின்னாடி இருந்து பெருச்சாளி ஒண்ணு உர்ருனு முறைச்சுக்கிட்டே வெளியே வருது. கை நடுங்கி பேண்ட் முழுக்க நனஞ்சு போச்சு. என்ன பண்றது. தண்ணியை கர்ச்சீப்லே எடுத்து தொடச்சு.. ஒண்ணும் சரியா இல்லே. இந்தி நியூஸ் பேப்பர் தைனிக் ஜாக்ரனோ என்னமோ ரிசப்ஷன்லே கிடந்தது. எடுத்து இடுப்புக்கு கீழே வர்ற மாதிரி பிடிச்சுண்டு, வயித்துவலி, டாக்டர் கிட்டே போறேன்னு லீவு சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சு ரூமுக்கு வந்துட்டேன். ஆட்டோ டிரைவர் முஸ்க் முஸ்குன்னு மூக்கை உறிஞ்சுண்டிருந்த மாதிரி இருந்தது. கண்டுக்கலே. ரூமுக்கு ஓடி வந்து மாத்திண்டாச்சா, அப்புறம் மீதி லீவை என்ன பண்றது? திருவல்லிக்கேணி புறப்பட்டுப் போயிட்டேன். நம்ம மனுஷா அங்கே நிறைய. ஆபீஸ் போகாம ஜாகையிலே இருந்து சிலப்பேர் வேலை பார்க்கறது தெரியுமோ? அவாளுக்கு எமர்ஜென்சியும் ஒண்ணுதான். மத்த திவசமும் ஒண்ணுதான்”.
நேற்று தான் அவன் திருவல்லிக்கேணி போய்த் திரும்பி இருந்தான். இன்றைக்கும் அங்கே போக குறையாத ஆர்வம் காட்டினான். அங்கே மீசை வைத்த பெருமாள் கோவிலும், ஒடுங்கிய தெருவும், பழைய கட்டடங்களும், எப்போதும் காற்றில் வரும் கடல் வாசனையும் எத்தனை அனுபவித்தாலும் தீராது என்று அவன் சொல்வான். அப்புறம் ஏன் அங்கே அறையில் இருக்காமல் தி.நகருக்கு மேன்ஷன் அறை தேடி வந்தான்?
”அந்த மேன்ஷன் எதிலுமே தனியாகத் தங்க முடியாது. ரூம் ஷேரிங். இங்கே கொஞ்சம் கூடுதலா கொடுத்தாலும், சின்னதா இடம் இருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் தனி ரூம். அந்த சுதந்திரம் வேணும். அண்டர்வேரோடு ரூமிலே அலைஞ்சுண்டிருப்பேன். பட்டாணி சாப்பிட்டு வந்து எட்டுத் திசையும் டர்ர்ருனு கொட்டி முழக்குவேன். வெளிக்கி வரலேன்னா குப்புகுப்புன்னு புகை விட்டுண்டு ஒரிஜினல் கிடா மார்க் சுருட்டு குடிப்பேன். ஷவர்லே குளிச்சபடிக்கே ஒண்ணுக்கு அடிப்பேன். அதெல்லாம் ரெண்டு, மூணு பேர் இருக்கப்பட்ட மேன்ஷன் அறையிலே முடியாது”.
முடியுமோ முடியாதோ, விஸ்வநாதனோடு எந்த ஜன்மத்திலும் இருப்பிடத்தைப் பங்கு வைத்துக்கொள்ள முடியாது.