எமர்ஜென்சியும் மிதுக்க வத்தலும் – நாவல் 1975 – ஒரு சிறு பகுதி

An excerpt from my novel 1975

மெல்லச் சேர்ந்த எங்கள் எட்டு நபர் குழு வெற்றிகரமாக திருவல்லிக்கேணி பஸ் பயணம். என்னமோ தெரியவில்லை, இன்றைக்கு நின்று நின்று வராமல் முக்கால் மணி நேரம் மட்டும் பயணம் செய்து திருவல்லிக்கேணி வந்து விட்டோம்.

”ஏழு மணிதான் ஆவுது. எட்டு மணிக்கு தான் ராவ்ஜி, சைடோஜி, தீனாஜின்னு எல்லா ஜி மெஸ்ஸும் களை கட்டும். தீனாஜி மெஸ்ஸுக்கு இன்னிக்கு வரேன்னு சொல்லி விட்டிருக்கேன்”.

விஸ்வநாதன் தோளில் பெரிய துணிப்பையை மாட்டியபடி சொன்னான். பையிலே என்ன என்று கேட்டேன்.

“நீ இதெல்லாம் பத்தி கேட்டிருக்கக்கூட மாட்டே”, என்ற முன்னறிவிப்போடு பட்டியல் ஒப்பித்தான் அவன்.

”உப்புப் போட்டு உலர்த்தின நார்த்தங்காய் ஊறுகாய், சுக்காக் காஞ்சு சுருங்கின எலுமிச்சை, மணத்தக்காளி வத்தல், தாமரைக்கிழங்கு வத்தல், தும்ப்டிக்கா வத்தல்”.

என்னமோ மற்றதெல்லாம் தெரிந்த மாதிரி தும்ப்டிக்கா வத்தல் என்றால் என்ன என்று கேட்டேன். கரப்பான் பூச்சியை வறுத்து வைச்ச மாதிரி குண்டு குண்டாக இருக்குமாம். சாப்பிடப் போகிற நேரத்தில் தேவையான வர்ணனை தான். விஸ்வநாதனிடம் ஏதும் இப்போதைக்குக் கேட்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

அவன் சாப்பாட்டை எதிர்பார்த்த சந்தோஷத்தில் பாடியபடி வந்தான் –

”மேரே ஸப்னோம் கி ராணி கப் ஆயேகி தும்”

“வேணாம் விசு, இது தேசவிரோத கானம். நம்ம எல்லோரையும் கைவிலங்கு போட்டு கூட்டிப் போயிடுவாங்க. மெஸ் சாப்பாடு கிடைக்காது அப்புறம்”.

அவனை அடக்கினேன். பின்னே இல்லையா? போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது. நேரு பெயரில் பல்கலைக் கழகம் இருந்தாலும் மார்க்சிஸ்டுகளின் கூடாரமாம் அது. அந்த அறுபது மாணவர்களும் எமர்ஜென்சி காலத்தில் தைரியமாக காரல் மார்க்ஸின் கம்யூனிச சிந்தாந்தப் புத்தகங்களைப் படிப்பதோடு எமர்ஜென்சியை எதிர்த்துப் பேசக் கூட்டம் சேர்க்க ஆராதனா படப் பாடலகளையும் பாடினார்களாம்.

அறுபது மார்க்சிஸ்ட்கள் ஒன்று சேர்ந்து ஸப்னோம் கி ராணி என்று கோஷ்டியாகக் காதல் பாட்டு பாடிக்கொண்டு வந்தால், ஷர்மிளா டாகூர் மிரண்டு, காதைப் பொத்திக்கொண்டு ஓடியே போய்விடுவாளாக்கும்.

அதற்காக எஸ்.டி.பர்மனின் ’காகே கோ ரோயே’ – ஏன் அழறே என்று துவங்கும் சங்கீத அழுகையை கோஷ்டி கானமாகப் பாட முடியுமா?

துக்கப்பட வேண்டிய எதற்கும் துக்கப்படாத இந்த நாட்டின் தேசிய கீதமாகவே இசைக்க வேண்டிய பாடல் அதுவன்றோ.

”ஒரு நிமிஷம் இருங்க”. விஸ்வநாதன் எங்களைத் தெரு முனையில் நிற்கச் சொன்னான்.

“என்ன விஷயம் விசு?” பழநியப்பன் கேட்டான்.

“என் ப்ரண்ட் குரு இங்கேதான் இருக்கான். அவனையும் கூட்டிப் போகலாம். போத்தி, இந்த மூட்டையைத் தூக்கிக்க”.

வடகம், வற்றல் விற்பனைப் பிரதிநிதி போல நான் மூட்டை சுமந்து நிற்க விஸ்வநாதன் மங்கிய தெருவிளக்கு வெளிச்சத்தில் அவசரமாக பக்கத்துச் சந்தில் திரும்பி இருளில் மறைந்தான்.

ஐந்து நிமிடம் கழித்து மெலிந்து உயரமான ஒரு முப்பது வயசுக்காரனோடு வந்து சேர்ந்தான். தோளில் ஜோல்னா பையும், முகத்தில் ஷேவ் செய்யாத முள்ளுதாடியும், ஒட்ட வெட்டிய தலைமுடியுமாக இருந்தவர் குருநாதன் என்று அறிமுகமானார்.

“என் ஸ்கூல் மேட், ப்ரூஃப் ரீடரா இருக்கான்”.

எந்தப் பத்திரிகையில் என்று குருநாதனைக் கேட்டேன். நான்கைந்து பதிப்பகங்களுக்கு அவர்கள் பிரசுரம் செய்யும் புத்தகங்களுக்கு பிழை திருத்திக் கொடுக்கிற வேலை செய்கிறதாகச் சொன்னார் குருநாதன். எடிட்டிங்கும் செய்வாராம். எழுதிக் கொடுப்பதும் அதில் சேர்த்தியா என்று கேட்டேன். இல்லை என்றார்.

எல்லாரும் சேர்ந்து மெஸ்ஸுக்கு நடந்தபோது ஒன்றிரெண்டு வார்த்தை மட்டும் பேசினார் அவர். என் பக்கத்தில் தான் சாப்பிட உட்கார்ந்தார்.

விஸ்வநாதன் வற்றல் வறுவல் மூட்டையை மெஸ்காரரிடம் கொடுத்து பதினைந்து நிமிடம் காத்திருக்க அதெல்லாம் வறுபட்டு வந்தது. கூடவே நெய்யும், கறிவேப்பிலைப் பொடியும், கோங்குரா சட்னியும்.

சாதம் மட்டும் ஒரு வெங்கலப்பானை நிறைய வந்தது முதலில். ஒவ்வொரு வத்தலாகப் போட்டுச் சோற்றில் குழைத்துச் சாப்பிட, பசி கூடுதலாகிக்கொண்டு போனதே அல்லாமல் வயிறு அடைக்கவில்லை.

தும்ப்டிக்காய் என்ற மிதுக்க வத்தல் என்ற உரைப்பும் உப்பும் கூடிய கரப்பான்பூச்சி வடிவிலான வற்றலை வாழ்க்கையிலேயே முதல்தடவை சாப்பிட்ட நானும் அங்கே பலரும் கண்ணீர் தளும்ப அந்த அற்புதச் சுவையை அனுபவித்தோம்.

“அது கரப்பான் பூச்சி மாதிரி இல்லை. வறுத்தால் எல்லா வற்றலுமே இந்த ஷேப்பில் தான் வரும்” என்றார் குருநாதன். அவர்கள் பக்கத்தில் இதை முறுக்கு வற்றல் என்பார்களாம். எது அவர்கள் பக்கமோ.

சாப்பிட்டு விட்டுப் போகும்போது குருநாதன் அறை வாசல்வரை நடந்தோம். சின்னச் சந்தில் ஒடுங்கிய வீட்டு மாடி அது. மாடிப் படியில் யாரோ உட்கார்ந்திருந்தார்கள்.

“நம்ம ஊர்த் தம்பிதான்”.

குருநாதன் சிரித்தார்.

”சினிமா பாட்டெழுதற கனவுகளா?”. விஸ்வநாதன் விசாரித்தான். டைரக்டர் கனவோடு ஊரை விட்டு வந்தவன் அந்தத் தம்பி என்று குருநாதன் சொன்னார்.

பையன் எழுந்து நின்றான். சாப்பிட்டியா? குருநாதன் கேட்க, அவன் சொன்ன பதிலை இல்லை என்றுதான் நான் எடுத்துக் கொண்டேன்.

“இப்பத்தான் வந்தேன். கதவு பூட்டியிருக்கேன்னு படியிலே உக்காந்திருந்தேன். வீட்டு ஓணர் யார் என்னன்னு விசாரிச்சார். உங்களுக்கு பிரச்சனை ஆயிடுமோ அண்ணே?”.

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன