1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
—————————————
கடற்கரைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம்.
அங்கே நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளை மேயலாம் என்பது எனக்கு முக்கிய காரணம். பழைய புத்தகத்தில் ருசி கண்ட பூனைகளுக்கு புத்தம்புது எடிஷன் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அதுவும் நடைபாதையில் கிடைக்கிற பழைய தீபாவளி மலர்கள், பொன்னியின் செல்வன், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை பத்திரிகையிலிருந்து வாராவாரம் கிழித்து எடுத்து பைண்ட் செய்து உருவாக்கிய புத்தகங்கள். புதுப் பதிப்பில் இல்லாத அந்தக்கால நகைச்சுவை, துணுக்குச் செய்தி, 1940-கால காபிப்பொடி விளம்பரம் என்று எங்கேயோ தூக்கிப் போய்விடும்.
பெல்ஸ் ரோடில் இருக்கும், நான் விரும்பிப் படிக்கும் இலக்கியப் பத்திரிகை ஆபீஸில் தலைகாட்டி விட்டு வருவது இன்னொரு சிறிய சந்தோஷம்.
அங்கே சதா மோனத்தில் மூழ்கி அச்சுக் கோர்த்துக் கொண்டிருக்கும் வயதான கம்பாசிட்டர் உலகே அழிந்து கொண்டிருந்தாலும் லட்சியம் செய்ய மாட்டார். போனால் போகிறதென்று ஒரு வினாடியில் காலே அரைக்கால் பாகம் நிமிரிந்து பார்த்து, “எடிட்டர் டில்லியிலே இருக்காரு. அங்கே போய்ப் பாருங்க” என்று தில்லி ஏதோ அடுத்த தெருவில் இருப்பதுபோல் கைகாட்டி வேலையைத் தொடர்வார் அவர்.
எடிட்டர் இருக்கும் பொழுதுகளில் நான் கட்டும் ஒரு வருட சந்தாவுக்காக, நியூயார்க் டைம்ஸில் இந்தியச் செய்தியாளரான அந்தப் பத்திரிகை ஆசிரியர், கருத்தாக ரசீது எழுதி பெரியதாகக் கையெழுத்துப் போட்டுத் தருவார்.
அவரிடம் பேச வேண்டும் என்பதற்காகவே இதுவரை நாலு தடவை சந்தா கட்டிவிட்டேன். இன்றைக்கும் அவர் இருந்தார்.
”எமர்ஜென்சி நல்லதுக்கு தானா?”
நான் சந்தா செலுத்தி விட்டு பத்திரிகை ஆசிரியரைக் கேட்டேன். அவர் அமைதியாக கம்பாசிட்டரைக் காட்டினார் :
“இவரைக் கேளுங்க. நான் டாக்டர் கிட்டே போய்ட்டிருக்கேன். Chest congestion”.
சொல்லி விட்டுப் போயே போய்விட்டார் அவர். கம்பாசிட்டர் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கை எனக்கு வியப்பாக இருந்தது.
நல்ல கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்றைக்கு பகல் ஒரு மணிக்கெல்லாம் காற்று துவங்கி விட்டதால் சூழலே அற்புதமாக மாறியிருந்தது.
நான் ஆபீஸ் முடித்து நேரே வந்து கொண்டிருக்கிறேன். மேன்ஷன் நண்பர்கள் ஏற்கனவே வந்து உழைப்பாளர் சிலைக்கு அருகே காத்திருக்கிறார்கள்.
ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தை இன்னும் ஒரு முறை கடற்கரையில் கழிக்கப் போகிற மகிழ்ச்சி எனக்கும்.
கடலை, யானையை, அரசனைப் பார்க்க அலுக்காது என்று நாராயணசாமி காளிதாசன் கவிதையை மேற்கோள் காட்டுவது வழக்கம். இதில் கடலும் யானையும் எப்போது பார்த்தாலும் இன்பம் தான். அரசு? எமர்ஜென்சி வந்த பிறகு கொம்பும் வாலும் முளைத்து சாத்தானாக பயம் காட்டுகிறது அது.
பெல்ஸ் ரோடு நடைபாதைக் கடையில் கொஞ்சம் பேரம் பேசி ஐந்து ரூபாய்க்கு ஜி.வி.தேசானியின் புதிய அலை நாவல், “ஆல் அபவுட் ஹெச் .ஹேட்டர்’ வாங்கினேன். 1953-ம் வருட தீபாவளி மலர் ஒன்றைப் புரட்ட தி.ஜானகிராமனின் சிறுகதை இருப்பதைப் பார்த்து அதையும் மூன்று ரூபாய்க்கு வாங்கி சந்தோஷமாக இரண்டு புத்தகங்களையும் கையில் சுமந்து கொண்டு கடற்கரைக்கு நடந்து போனேன்.
உழைப்பாளர் சிலைப் பக்கமே போக முடியவில்லை. கூட்டமாக போலீஸ் நின்று கொண்டிருந்தது. கையில் துப்பாக்கி பிடித்து ஒரு வரிசை பின்னால் ஜீப்களுக்கு அருகே நிற்க, கையில் பிரம்போடும், பிரம்புத் தட்டியோடும் ஒரு நீண்ட அணியாகப் போலீஸ், சிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.
சிலையை ஒட்டி மொத்தம் எட்டு பேர் வேட்டியும், கதர்ச் சட்டையும் அணிந்து நெற்றியில் வீபுதி குங்குமம் துலங்க, தோளில் பெரிய துணிப்பையோடு நின்றார்கள்.
“எல்லோரும் கலைஞ்சு போங்க. இங்கே கூடி நிக்கறது சட்ட விரோதம்”, போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் இருக்கிறது. மெகாபோனில் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தார்.
நெடுநெடுவென்று கெச்சலாக, நெற்றியில் நீளமாக ஸ்ரீசூர்ணம் தீட்டிய ராவ்ஜி ஒருத்தர் இங்கிலீஷில் அவரிடம் சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் –
“பீச்சுக்கு காத்து வாங்க வர்றது எப்போ இருந்து சட்ட விரோதமாச்சு?”.
“பேசாதே. போ. இல்லேன்னா உன்னையும் அரஸ்ட் பண்ண வேண்டி வரும்”. இன்ஸ்பெக்டர் எச்சரித்தார் அவரை.
என் பக்கத்தில் எங்கிருந்தோ வந்து நின்ற விஸ்வநாதன் ‘இதென்ன அநியாயமா இல்லே இருக்கு. பீச்சுக்கு வரக்கூட அப்ளை பண்ணி பெர்மிட், விசா வாங்கிட்டு வரணுமா என்ன?” என்று கேட்டான்.
அவன் குரல் கொஞ்சம் பலமாக இருப்பதால் இன்ஸ்பெக்டர் காதில் விழ, அவர் முறைத்தபடி நாங்கள் இருந்த இடத்துக்கு வர, கோவிந்தன் மேன்ஷன்வாசிகள் பனிரெண்டு பேரையும் சூழ்ந்து கொண்டு தாக்கக் கூடிய சூழ்நிலை.
அருகே வந்தவர் மெகாபோனை விலக்கி மெல்லிய குரலில் சொன்னார், “தம்பி தயவு செஞ்சு கலைஞ்சு போங்க. இதெல்லாம் கவர்மெண்ட் விரோதமான சமாசாரம். பக்கத்துலே போனாலே குற்றம்”.
அதற்குள் பின்னால் இருந்து கூட்டம் முன்னே நகரும்படி அழுத்தியது. நாங்கள் முன்னே கொண்டு செலுத்தப்பட்டோம்.
அதற்குள் உழைப்பின் வெற்றி சிலையை ஒட்டி நின்ற எட்டுப் பேரும் தோள்பையில் இருந்து பழுப்பு காகித நோட்டீசுகளை வீசி கடற்கரையில் எறிந்தபடி, “ஜெயப்ரகாஷ் நாராயணன் வாழ்க” என்று கோஷமிட்டார்கள்.
என் காலடியில் பறந்து வந்து விழுந்த காகிதத்தை நான் எடுத்து படிக்க, அவசரமாக நகலெடுத்த காகிதம். சைக்ளோஸ்டைல் செய்த அந்தக் காகிதத்தில், ’இது தகுமோ’ என்று தலைப்பில் சில வரிகள் :
ஜூன் 25, 1975 எமர்ஜென்சி பிரகடனத்துக்கு அப்புறம் இன்னொரு கருப்பு நாள் – நேற்று – செப்டம்பர் 26: வானளாவிய அதிகாரங்களை பிரதமருக்கு வழங்கிய துக்கதினம். யாரும் கேள்வி கேட்க முடியாத சர்வாதிகார அரசு பீடத்தில் இந்திரா காந்தி. எதிர்ப்பவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் – மிசாவில் கைதாகிச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். எங்கே ஜனநாயகம்?
பாரதியார் பாடல் வரிகள் அதன் கீழ்.
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ”
‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’ என்று தொடங்கும் இந்தப் பாரதியார் பாட்டை கப்பலோட்டிய தமிழன் படத்தில் உணர்ச்சிகரமாக திருச்சி லோகநாதன் பாடி, எ.ஸ்.வி.சுப்பையா பாரதியாக வாயசைத்ததை நினைத்துப் பார்ப்பதற்கு முன், இன்ஸ்பெக்டர் குரல் மறுபடி உயர்ந்தது.
“நோட்டீசை கீழே போடுங்க எல்லோரும். எடுத்தீங்கன்னா உங்களையும் இவங்களோட தீவிரவாதியா கருத வேண்டி வரும்”.