ராமோஜியம் நாவலோடு, நான் அண்மைக் காலத்தில் எழுதி வெளியான சிறுகதைகளும், ‘மயில் மார்க் குடைகள்’ என்ற தலைப்பில் தொகுப்பாகின்றன.
அந்தத் தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரை –
———————————————————————-
இவை எல்லாம் இந்த நூற்றாண்டுக் கதைகள் என்று இந்த என்னுரையைத் தொடங்க ஆசைதான். எனில், ஆண்டு 2000-ல் தொடங்கி நான் எழுதிய கதைகள் என்பதே நூற்றாண்டுக் கதைக்கான அடையாளமாக இருக்க முடியாது. மொழியும், சூழலும், சித்தரிப்பும் தற்காலத் தன்மையைச் சிறுகதைக்கு ஓரளவுக்குத் தரலாம் தான். ஆனால் அவை மட்டும் போதாதே.
இன்னொன்று, இருபது வருடம் முன்னால், ஆண்டு 2020-ஆம் ஆண்டு சென்னையைக் களமாக வைத்து எழுதிய கதை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் கதையா, கடந்து போன நூறாண்டுகளின் கதையா? காலமும் சூழலும் சொல்லாமல் நிகழ்ந்து முடியும் ஒரு சிறுகதையை எந்த நூற்றாண்டு எழுத்து என்று எப்படி வகை பிரிக்கக் கூடும்?
இந்த விவாதங்களுக்குள் நுழையாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் நான் எழுதிய கதைகளில் சில இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன என்பதை முன்மொழிந்து இதுவும் கடந்து போகலாம்.
வங்கியியல் செயல்பாட்டுக்கான கம்ப்யூட்டர் மென்பொருள் வடிவமைத்து உருவாக்குதல், திட்ட நிர்வாகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டிருந்த என் கிட்டத்தட்ட 35 வருடக்காலப் பணியிடச் சூழல் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் – குறிப்பாக பிரிட்டன் – நிகழிடமாகவும், நிகழ்வாகவும் வரும் சில சிறுகதைகள் இந்தத் தொகுப்பிலும் உண்டு. என் முந்தைய சிறுகதைத் தொகுப்புகளில் இந்தச் சூழல் சித்தரிக்கப்பட்டதை விட ஆகக் குறைவாகவே அதை இங்கே காணலாம். 2014-இல் நான் பதவி ஓய்வு பெற்றதே அதற்கான முக்கியக் காரணம். பணியிடமும், செய்யும் தொழிலும் என் தற்போதைய நாவல், சிறுகதையைக் கனமாகப் பாதிப்பதில்லை இப்போது.
இந்தத் தொகுப்பில் விட்ட குறை தொட்ட குறையாகப் பணியிடச் சூழல் சற்றே தட்டுப்படுகிறவையாக பாதுஷா, தேங்காய் ரம், இசக்கி, மாது என்றோர் மானுடன், நன்றி வாடை, திமித்ரிகளின் உலகம் ஆகியவற்றைச் சொல்லலாம். இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் மேஜிக்கல் ரியலிசத்தின் பூச்சு இருப்பது தற்செயலானதல்ல. இருபது வருடம் முன்னால் நான் எழுதிய சிலிக்கன் வாசல், லாசரஸ் 40 போன்ற சிறுகதைகள் தொழில்நுட்பத்தைச் சற்றே ஆழமாகச் சித்தரித்தன என்றால் இந்தத் தொகுப்புக் கதைகள் புரிதலோடு விலகி நின்று பார்த்ததைப் புனைவு கலந்து சொல்லும்.
நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான் எழுதிப் பார்த்த ஒரே ஒரு கதை, ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம். ஜப்பானில் ஒரு ரயில் நிலையம் இப்படி இயங்குவதாகப் படித்த பத்திரிகைச் செய்தி கதைக்கு சூழலும், காலமும், கருவும் அளித்தது. எழுதும்போது மனதில் செய்து வைத்திருந்த கதை மாறித்தான் போனது. எழுத்தின் ரசவாதம் இது. இந்தக் கதையில் ஒரு சோதனை – மொழிபெயர்ப்புக் கதையின் தோற்றமும் நெசவுமாக இதை எழுதிப் பார்த்தேன்.
இத்தொகுப்பில் இடம் பெற்ற ‘பொடி’ என்ற கதை 2019-ல் எழுதி வெளிவந்த, 1940-களின் சென்னை பற்றிய கதை. என் அண்மைக்கால நாவல் (2020-ம் ஆண்டு) ராமோஜியம், இந்தச் சிறுகதையை வித்தாக வைத்து விருட்சமாகத் தழைத்தது. சிறுகதை எழுதியிருக்காவிட்டால் நாவல் பிறந்திருக்காது. எனினும் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நாவலைத் தேட முடியாது.
மயில் மார்க் குடைகள் கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப் படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பாடச் சொல்லி, இருமலோடு பாதிப் பாட்டில் குரல் உடைந்து நின்ற அவருக்கு இருநூறு ரூபாய் சம்மானம் தந்து அனுப்பியது தவிர நான் வேறெதுவும் செய்யவில்லை. ராகி தந்தீரா தான் பாடினார் அவர்.
தீவு, புத்தகன் ஆகியவை முழுக்க மாந்திரீக யதார்த்தவாதக் கதையாடலைக் கொண்டவை. நாவலிலும் சிறுகதையிலும் நான் மேஜிக்கல் ரியலிசத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறேன் என்பதைச் சொல்லியாக வேண்டும். இவையும் விட்ட குறை தொட்ட குறையாக எழுதிப் பார்த்தவை.
இசை, கல்யாணி, மீசை, மூடல் மஞ்சு, புலி அம்சம் ஆகிய கதைகள் சம்பிரதாயமான கதையாடல் கொண்டவை. காலம் இக்கதைகளில் பெரும்பாலும் 1930-களில் இருந்து 1960-கள் வரையான அண்மைக்கால பழமை. புலி அம்சம் புலிக் கலைஞனை விட்டு வெகுவாக விலகியது.
கொட்டி time-space continuum bubble நேர வெளித் தொடர்ச்சிக் குமிழ் பற்றி மரபிசையின் பின்னணியில் நான் எழுதிப் பார்த்தது. அழகுப் பிள்ளை மேஜிக்கல் ரியலிசமும், அறிவியல் புனைவும் சந்திக்கும் இடம். முரகாமியின் பூனைகளின் நகரம், ஸ்டார் ட்ரெக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் சின்னத்திரை அறிவியல் புனைவுத் தொடரைச் சந்திப்பது போல இது.
ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்ட ரசனை அனுபவங்களை இக்கதைகள் தரும். என்ன எழுதினாலும் வாசிக்க சுவாரசியமாக எழுத வேண்டும் என்று நான் இத்தனை நாள் கடைப்பிடித்து வரும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இக்கதைகளைப் பிரசுரித்த கல்கி, இந்து தமிழ் திசை, காமதேனு, குமுதம் தீராநதி, அந்திமழை ஆகிய பத்திரிகைகளுக்கு என் நன்றி. கனலி (www.kanali.in) இணையத் தளத்துக்கும்.
கிருஷ்ணார்ப்பணம்.
இரா.முருகன்
சென்னை
ஜூலை, 2020