வெளிவர இருக்கும் என் சிறுகதைத் தொகுதி ‘மயில் மார்க் குடைகள்’ நூலில் இடம் பெற்றிருக்கும் ‘கொட்டி’ சிறுகதையிலிருந்து சில பகுதிகள்
————————————————————————————————–
தாடையில் வடிந்த வெற்றிலை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி அடுத்து நடந்து வந்த ஜெபராஜ் நாயனக்காரனைப் பார்த்தார் சிவத்தையா. அவன் ஜெபராஜ் இல்லை. கல்யாண வீட்டுக்கு வாசிக்கப் போகும்போது ஜெயராஜ் ஆகிவிடுவான். ஜெயராஜுக்கு எதுவுமே தெரியாது. வாசிப்பும் சுமார் தான். நூறு ரூபாய் கிடைத்தால் போதும் அவனுக்கு. சிவத்தையாவுக்கு மூன்று புத்ரிகள். நூறு ரூபாயில் ரெண்டு நாள் தள்ளுவது கூட கஷ்டமானது. அந்தக் காசும் வரவிடாமல் கேரளத்து இறக்குமதிகள். பத்து பேராக நின்று என்ன சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் விடிகாலை நேரத்தில்கூட.
தாடையில் வடிந்த வெற்றிலை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி அடுத்து நடந்து வந்த ஜெபராஜ் நாயனக்காரனைப் பார்த்தார் சிவத்தையா. அவன் ஜெபராஜ் இல்லை. கல்யாண வீட்டுக்கு வாசிக்கப் போகும்போது ஜெயராஜ் ஆகிவிடுவான். கிறிஸ்துவன் வாசித்துத் தாலி கட்டுவதை சம்பிரதாயக் கிழவர்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தராவது இப்படி பிழைப்பைக் கெடுக்க பென்ஷன் வாங்கி உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை பத்தடி தூரத்திலேயே சிவத்தையா கண்டுபிடித்து விடுவார். ஜெயராஜுக்கு எதுவுமே தெரியாது. வாசிப்பும் சுமார் தான். நூறு ரூபாய் கிடைத்தால் போதும் அவனுக்கு. சிவத்தையாவுக்கு மூன்று புத்ரிகள். நூறு ரூபாயில் ரெண்டு நாள் தள்ளுவது கூட கஷ்டமானது. அந்தக் காசும் வரவிடாமல் கேரளத்து இறக்குமதிகள். பத்து பேராக நின்று என்ன சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் விடிகாலை நேரத்தில்கூட.
இரண்டு நாளைக்கு முன்னால் கோவில் வாசலில் சிவத்தையா நின்றபோது மலையாளி புரோக்கரும் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான். விலகிப்போ என்று சைகை காட்டினார் அவர். தமிழ் தெரியாதது போல பாவனை செய்து கொண்டு , கோவில் உள்ளே இருந்து அர்ச்சனைத் தட்டும் அதில் கல்யாணப் பத்திரிகையுமாக வந்து கொண்டிருந்தவர் முன்னாடி போய்த் துள்ளி விழுந்தான் அந்த அயோக்கியன். விலகி நின்றார் வந்தவர்.
சிவத்தையா விஸ்தாரமாகக் கும்புடு போட்டு ‘ராஜராஜேஸ்வரி கிருபையிலே அதிவிமர்சையா நடக்கும் ஐயா உங்க வீட்டுக் கல்யாணம். நூறு வருஷம் நல்லா இருப்பாங்க’ என்று இலக்கைக் குறிவைத்து நற்சொல் அருளத் தொடங்க, தட்டோடு வந்தவர் சொன்னார், “இப்பவே எம்ப்ளது. இன்னும் நூறா, தாங்காது”. யாருக்கோ எண்பது வயது முடிந்து சதாபிஷேகத்துக்கு மேளம் அடிக்கக் கசக்கவா செய்யும் சிவத்தையாவுக்கும் குழுவுக்கும்? ‘நல்ல விதமா, சம்பிரதாயம் மாறாம முழுநாள் வாசிக்கறோம் ஐயா, பார்த்துக் கொடுங்க”.
அவர் சொல்லி முடிக்கும் முன்னால், தட்டுக்காரர் ‘நாள் முழுக்க வேணாம். காலையிலே அஞ்சரைக்கு தொடங்கி பத்துக்கு இலை போடறாதோட ஏறக்கட்டினா போதும்”. அவர் பேசிப்போக, கூட வந்த பெண், ‘அச்சானியமா பத்துக்கு சாப்பாடுன்னு பேச வேணாம். சுபகாரியம் சதாபிஷேகம் நடக்க இருக்கு’ என்று அவரை அடக்கினாள். நூறு ரூபாய் அட்வான்ஸும், வாசித்து முடித்ததும் நானூற்றைம்பது ரூபாயும் என்று அப்புறம் முடிவானது.
“செண்டை மேளத்தையும் பிக்ஸ் பண்ணிடுங்கோ. மாமி பூர்வீகம் பாலக்காடு ஆச்சே. என்னமா ரசிப்பா தெரியுமோ. எந்திருந்து கூடவே ஆடுவாளாக்கும்”.
இதில் என்ன பெருமையோ. பாலக்காட்டுக்காரர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது? சிவத்தையா தவில்காரருக்குப் புரியவில்லை என்றாலும், கேரளத்தான் சப்ஜாடாக வந்து கொட்டுவதற்கு வெகுமுன்னால் புறப்பட்டு மங்கல இசை பொழிய முடிவெடுத்தார். தூக்கக் கலக்கத்தோடு ஜெயராஜையும் ஒத்துக்காரனையும் இழுத்து வருவதற்குள் அவர் பட்டபாடு.. இங்கே வந்தால், மலையாளத்தான் அதற்கு முன் வந்து சேர்ந்து காட்டடி மாட்டடியாகக் கொட்டி அடித்துக் கொண்டிருக்கிறான்.
“நடையை எட்டிப் போடுங்கய்யா”, அவர் தவிலோடு முன்னால் ஓடினார்.
தாடிக்காரர்கள் அகலமாகக் கால் பரப்பி நின்று, நீட்டிப் பிடித்த மத்தளங்களில் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்க, அந்த விடிகாலையிலும் விவஸ்தையே இல்லாமல் சின்ன வயசுப் பெண்களும், வாலிபர்களும் சந்நதம் வந்து சாமியாடுவது போல கொட்டுக்குக் குதித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் களேபரத்தில் தவுலோடு உள்ளே போய் என்னத்தை வாசிக்க, யாருக்கு வாசிக்க? சிவத்தையாவுக்குப் புரியவில்லை.
நல்ல வேளையாக, ஒரு வடக்கத்தி ஜிப்பாக்காரர் இந்தக் கோஷ்டியை இனம் கண்டு உள்ளே அழைத்துப் போய் முதிய மாப்பிள்ளை பெண்ணுக்காக அக்னி வளர்த்துக் கொண்டிருந்த மேடை ஓரமாக புரோகிதர்களின் பின்னால் உட்கார்த்தி வைத்தார். அவர் கால் தரையில் பாவாமல், ஐந்து மில்லிமீட்டர் உயரத்தில் மிதந்து வந்த மாதிரி சிவத்தையாவுக்குத் தோன்றியது. காயப்போட்டுக் கிடந்த வெறும் வயிறு இப்படியும் காட்டும், இன்னும், எல்லோரையுமே மிதக்க வைத்துக் குறக்களி வித்தையும் காட்டும்.
சிவத்தையாவுக்கு கண் இருண்டு வர, யாரோ ’மாமி எங்கே?’ என்று யாரிடமோ கேட்டார்கள். செண்டையர்களைக் காட்டிப் போனார் அவர். சிவத்தையா அங்கே பார்க்க, தீவிரமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ’நாட்டாமை நடையை மாத்து’ என்று ஒரு குரல். ஏற்று வாங்கி, டகரடகர என்று ஏதோ தாளத்தில் செண்டை கோஷ்டி அடிக்க, ஏகத்துக்குக் கைதட்டு, சிரிப்பு.
’டிபன் காப்பி ரெடி’ என்ற அழைப்பைத் தொடர்ந்து ஆட்டம் ஓய, ”நீங்க வாசிக்கலாம்”, பெரியவர் சிவத்தையாவிடம் சொன்னார். புகையில் பிடித்து வைத்த மாதிரி அவருடைய புருவமும் நரைத்த தலைமுடியும் இருந்தது. செண்டைக்கார்கள் தேசலாகத் தொடர்ந்து முழங்கினார்கள்