1975 – ஒரு சினிமாப் படம் உருவாகிற நேரம்

குமரேசன் கடையின் கதவு தள்ள உள்ளே திறந்து கொண்டது. மூன்று சுழல்நாற்காலிகள். வாடிக்கையாளர்கள் தலையையோ, முகத்தையோ குமரேசனிடம் ஒப்படைத்து விட்டு, வெள்ளைத்துணி போர்த்திக் கண்மூடி அவற்றில் இருக்கும் கடை. பெரிய பெரிய நிலைக் கண்ணாடிகள் கடையைப் பிரதிபலித்த பிம்பத்தை மறுபடி பிரதிபலித்து, மகா விசாலமான இடமாகப் பொய் சொல்லிக் கொண்டிருந்தன. பத்து பேர் ஒரே வரிசையில் போனால் அறை நிறைந்து போகிற அகலம் தான் அதற்கு.

நட்டநடு நாற்காலியில் உட்கார்ந்து படுசோகமாகக் கடைச் சுவரில் மேலே வரிசையாக மாட்டி வைத்த காந்தி, நேரு தொடங்கி இந்திரா, ஹேமகாந்த் பருவா, ஜனார்தன் பூஜாரி வரைக்குமான தலைவர்களின் புகைப்படங்களை வெறித்துக் கொண்டிருந்தார் குமரேசன்.

அவர் பார்வை கொஞ்சம் கீழே பட்டால், முந்தானை விலகி பக்கவாட்டு போஸில் எல்லா நடிகைகளும் தரிசனமளிப்பார்கள். லாஜிக் இல்லாமல் ஷம்மிகபூரும் பக்கவாட்டில் எதற்கோ திரும்பிப் போஸ் கொடுத்து கொண்டிருப்பார். டிபிகல் சலூன்கடை படங்கள் அவை. அந்தப் படங்களை உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்க இருபதில் எந்த அம்ச அடிப்படையில் லோன் தரலாம் என்று யோசித்தேன்.

இரு கையும் நீட்டி சுவர்க்கத்திலிருந்து எதையோ விட்டெறியச் சொல்லி மேலே பார்த்து இறைஞ்சும் தோரணையில் குமரேசனின் உள்ளங்கைகள் மன்றாட விரிந்திருந்தன. நான் பக்கத்தில் போக, என்னையும் கடந்து சுவரில் கே.ஆர்.விஜயா மேல் வெறுமனே கவிந்து அதற்கும் பின்னால் சுவரைத் துளைத்து சூனியத்தில் நிலை கொள்ளும் பார்வை அது.

“குருவம்மா, உனக்கு அவங்க செஞ்ச துரோகத்தை ஊர்ப் பொதுவிலே தைரியமாச் சொல்லு. எப்படி நியாயம் கிடக்காம போகும்?”

சலூன்கடையில் இல்லாத யாரோ பெண்ணிடம் ஆதரவாகச் சொன்னார் குமரேசன்.

“குருவம்மா யாரு?”

நான் கேட்டேன், ஜெபர்சன் குமரேசனின் மூக்குக்கு நேரே கை வைத்துப் பார்த்தார். “நாடி சீராத்தான் இருக்கு” என்றார் அவர்.

நான் குமரேசன் தோளைப் பிடித்து உலுக்க, அவர் ‘குருவம்மா, ஊரைக் கும்பிடு” என்று குரல் தழுதழுத்தார்.

கடையில் இருந்த பால்பண்ணை சொசைட்டி தலைவரும், வக்கீல் குமஸ்தா அழகிரியப்பனும் சுருட்டு வாசனையோடு அடிவயிற்றைத் தடவிக் கொண்டு, “யாரோ மலையாள மந்திரம் போட்டு ஆளை அரை ஆளா ஆக்கிட்டாங்க” என்று அங்கலாய்த்தபோது நான் முறைத்தேன். கப்சிப் என்று திரும்பிப் போய்விட்டார்கள் இருவரும். இன்னும் ஒரு வாரம் ‘மலையாள மந்திரம்’ சகாயத்தில் என் கண்ணில் படமாட்டார்கள்.

அவசரமாகக் கதவு திறந்து நிருபர் கார்மேகம் உள்ளே ஓட்டமும் நடையுமாக வந்தார்.

“உங்களைத்தான் தேடிக்கிட்டு வந்தேன். அதுக்குள்ளே சீருடை வழங்கும் விழா பத்தி பேசணும்னு ஆர்.டி.ஓ ஆபீஸ்லே கூப்பிடறதா ஐயம்பிள்ளை சொல்லிட்டுப் போறார். சார், பேங்கு சார்”

அவர் என் தாடையைப் பிடித்து “தயவு பண்ணுங்க போத்தி” என்றார்.

“என்ன ஆச்சு தோழர்?”.

“கல்கத்தா இந்தி தெரியுமில்லையா உங்களுக்கு?. தலை சீவிட்டு வாங்க. கேமரா இருக்கு”

சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச குமரேசனுக்கு மட்டும் உரிமை இருக்கா என்ன? .

“குருவம்மா” என்றபடி எழுந்த குமரேசன், “நீ உத்தமி, நீ உத்தமி” என்றபடி இடைவெளி விட்டு இரண்டு தடவை சொல்லி நாற்காலியில் இடித்துக் கொண்டு தரைக்கு வந்தார்.

“நல்லா செஞ்சேனா?” அவர் என்னைத்தான் கேட்டார். என்னத்தை?

“எங்கேயோ இருந்து பொழுது போய்ப் பொழுது விடிஞ்சா தலைதலையா முடி வெட்டிக்கிட்டு, ரேசரை வச்சு உழுதுக்கிட்டே ஆயுசு முடிஞ்சுடும்னு நினைச்சேன். ஆனா அந்தப் பழநியாண்டி அப்படி இல்லேடா மகனேன்னு வாரி வழங்க வந்திட்டான் அப்பூ”.

என் தோளில் தட்டிச் சிரித்தார் அவர். கொஞ்சம் அதிகமாக ஏதோ கலக்கல் திரவம் உள்ளே போயிருக்கிறது போல. மேலதிக விவரம் விசாரித்தேன்.

“அது, தோழர், ராக்கிப்பட்டியிலே அழ அழ ராம அழ தோட்டம் இருக்கில்லே?”

“என்னதுங்க?”

“அழகாபுரி அழகப்பச் செட்டியார் மகன் ராமநாதன் செட்டியார் மகன் அழகப்பன் அண்ணாச்சி இருக்காரே, அவங்க தோட்டத்திலே ரகசியமா, வெளியே தெரிஞ்சு கூட்டம் எதுவும் கூட்டாம, நடக்குதுன்னு சொல்ல வந்தேன்”.

“என்ன நடக்குதுன்னுதான் கேக்கறேன்”.

“பிறகு சொல்றேன். இன்னும் பத்து நாள் கடையை எடுத்து வச்சிருக்கேன். அப்புறமா சீக்கிரமே மெட்றாஸ் தான். அங்கே கடை எல்லாம் நடத்த நேரம் இருக்காது. ஏதோ பழநியாண்டி சொல்றான். செஞ்சுட்டுப் போவோம். என்ன நான் சொல்றது”,

வாசலில் காரோ ரோடு ரோலரோ வந்து நிற்கிற சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு பழைய காரில் பனியன் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டும் பலதொழில் மனிதர் ஹரன், ஹாரன் அடித்தபடி உட்கார்ந்திருந்தார்.

“யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது.

சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் ரகசியமாக தனியார் தோட்டத்தில் ஊர்க்கூட்டம் நடக்கிற படப்பிடிப்பு. படத்தில் வங்காளி பேசும் ஒரு பெண் கதாநாயகி. கதாபாத்திரத்தின் பெயர் குருவம்மா. அவளை ஊர்ப் பொதுவுக்கு விசாரிக்கக் கூட்டிப் போகும் ஊர்ப் பெரியவர் குமரேசன். டன் கணக்காக வசனம் பேசும் வேடத்தை அவரைக் கொண்டு செய்ய வைத்திருக்கிறார்கள். அல்லது அவராக நிறைய சேர்த்துப் பேசிக் கதாபாத்திரமாகவே ரெண்டு நாளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

”போத்தி சார் வந்தாச்சு, போத்தி சார் வந்தாச்சு”.

எனக்கு முன்னால் குதித்து இறங்கி, மூச்சு விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு ஓடினார் கார்மேகம். தோட்டத்துக்கு உள்ளே புது வேட்டியை மண் தரையில் போட்டுத் தேய்த்து பழசாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அழுக்கு வேட்டி உடுத்தியவர்கள் ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு முக்காலியில் கல்லூரி எலக்ட்ரீஷியனான புலியேறு பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு, தலையை அல்லோல கல்லோலமாகக் கலைத்து விட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“என்ன புலி, வில்லன் கேரக்டரா?” என்றேன் அவர் தோளில் தட்டி.

“இல்லே போத்தி, செகண்ட் ஹீரோ”. அவர் சிரித்தபடி இன்னொருத்தரை அறிமுகப்படுத்தி, “இவர் தான் பர்ஸ்ட் ஹீரோ” என்றார். புலியேறுவையே கதாநாயகனாக்கி இருக்கலாம்.

”உன்னை நான் எப்போ இருந்து வச்சு இருக்கேன் தெரியுமா?”

கடமுடவென்று பள்ளிக்கூட காம்பௌவுண்ட் ஒதிய மரத்திடம் பேசியபடி வலதுகை மணிக்கட்டில் கட்டிய தோசைக்கல்லுக்கு மேல் ரெண்டு முள்ளு வைத்த ரிஸ்ட் வாட்சில் நேரம் பார்த்தார் நெடுநெடுவென்று உயரமாக ஒருத்தர். இரண்டு வினாடிக்கு அப்புறம், “மனசுலே” என்று முடித்தார். ஒத்திகை போல. வில்லனாம்.

ஷூட்டிங் தொடங்க இருப்பதாக நிருபர் என்னிடம் அறிவித்தபடி தேடியது. வங்காளியில் சிரிக்கும் புதுமுகம் ஹீரோயினைத்தான் என்று தெரியும்.

“வில்லன் மேனரிசம், கவனிச்சீங்களா, பேசின வாக்கியம் முடிக்க முன்பு, எப்பவும் வாட்ச்லே டயம் பார்த்துப்பார். கிளைமேக்ஸ்லே வாட்சை..”.

அவர் குஷியாக மேலே போக, “கதையை எல்லாம் பொதுவிலே வைக்க வேணாமே” என்று கத்தரித்துக் கொண்டேன்

“இது கூட நல்ல பஞ்ச் டயலாக் ஆக இருக்கும் சார்” என்றார் புலியேறு.

யாரோ வணக்கம் சொன்னார்கள். தழையத் தழைய வேட்டியும் ஜிப்பாவுமாக, கவிஞர் செம்மண். சின்னச் சின்னதாக பொதுப்பணித்துறை காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதித்து கொண்டிருக்கிறார். ஊரில் ஆபீசில் ட்ரான்ஸ்பர், ரிடையர் ஆவது, பூப்புனித நீராட்டு, காதுகுத்து, கல்யாணம், பத்தாம் நாள் காரியம் என்று வரும்போது தகுந்த முறையில் கவிதை எழுதித்தரச் சொல்லி இவரிடம் தான் போவார்கள்.

எழுதி வந்த கவிதையைச் சித்திரம் போல் அழகாக எழுதிப் படம் போட பள்ளிக்கூட டிராயிங் மாஸ்டரிடம் அடுத்தாற்போல் ஒரு நடை. அதை எடுத்துப் போய், இழவுக்குத் தவிர மற்ற கவிதைக்கெல்லாம் முருகேசன் படக்கடையில் கொடுத்து கண்ணாடிச் சட்டம் போட்டு வாங்குவது அடுத்த வேலை. அப்போது அந்தக் கவிதைக்கு அந்தஸ்து ஏகமாகக் கூடிவிடும். கவிதையை நம்பி இத்தனை உபதொழில் செழிக்கும் சூழ்நிலை.

“என்ன ஆசுகவி பாட வந்திருக்கீங்களா கவிஞரே?” என்று விசாரித்தேன்.

“பீஸு கவி”, அவர் கரன்சி நோட்டை எண்ணுகிற சின்முத்திரை காண்பித்தார். தமிழில் கவிதை எழுதிக் காசு சம்பாதிக்க முடிந்த ஒரே கவிஞராக இருக்கும்.

“இந்த படத்திலே பாட்டு எல்லாம் நான் தான் எழுதறேன்” என்றார் செம்மண் பெருமையோடு.

“காதல் டூயட்லே இருபது அம்சத் திட்டம் வர்ற மாதிரி எழுதினதை டைரக்டர் ஓகே பண்ணிட்டார்”. பூரிப்புடன் சொன்னார் அவர்.

“காதலர்கள் சாத்தனூர் அணைக்கட்டுலே ஓடிப்பிடித்து விளையாடி பாடறபோது இருபது அம்சத் திட்டம் அங்கே ஏன் வரணும்?”

“காற்றும் கடவுளும் கவர்மெண்டும் இல்லாத இடம் எது?”

“அதுக்காக?”

”நாம காதல் பாட்டுக்குள்ளே சோவியத் நாட்டையே கூட்டி வந்திருக்கோம். இருபதும் அஞ்சும் என் டூயட்டுலே வரக்கூடாதா என்ன?

சொல்லிவிட்டு செம்மண் பாட ஆரம்பித்தார். சீர்காழியை போலி செய்ய முயன்று தோற்ற குரல் அது.

சோவியத்தின் பெருமகளே நீ ஆடு எங்கள்
சொந்தத் தமிழ் மருமகளே நீ ஆடு

சீர்காழி கோபித்துக் கொள்வார். அவர் கோபித்துக் கொள்கிறாரோ இல்லையோ, நட்பு நாட்டைப் பரிகசிப்பதை, அதுவும் தேசமே இருபது அம்சத் திட்டத்தை அன்னையின் வழிகாட்டுதலோடு நிறைவேற்றி உழைப்பின் வெற்றியைக் கொண்டாடும் தருணத்தில், சோவியத் யூனியனைப் பற்றி அபஸ்வரமாகப் பாடவைத்துக் கிண்டல் செய்வதை சர்க்கார் ஒருபோதும் அனுமதிக்காது. பாட்டை நிறுத்தி, செம்மண்ணுக்கு வாழ்த்து சொன்னேன்.

“கவர்மெண்ட் திட்டத்துக்கு சினிமாவிலே பிரசாரம் வச்சா உதவித்தொகை கிடைக்குமாம்” என்றபடி கவிஞர் சந்தத்தில் சிந்திக்கப் போனார்.

என்ன மாதிரி இருக்கும் அந்தப் பாடல் காட்சி?

பேங்க் மேனேஜர்கள் எல்லோரும் வரிசையாக, பெரிய பீப்பாய்களில் பணத்தைக் குவித்து வைத்து, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரத்தில் உலக்கையால் தொட்டியில் மூக்குப்பொடி இடித்தபடி காட்சி அளிக்கும் மீசைக்காரன் போல், காலை வினோதமான போஸில் மடித்து வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களைச் சுற்றிச் சுற்றி, ஒண்ணு, ரெண்டு, மூணு என்று இருபது அம்சங்களையும் பாடியபடி ஹீரோவும் ஹீரோயினும் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். காமெடியனும் அவன் காதலியும் ஐந்தம்சத்துக்கு லிஸ்ட் போட்டபடி குறுக்கே புகுந்து ஓடுகிறார்கள். படுபயங்கரமான காட்சியாக இருக்கும் அது.

(என் 1975 நாவலில் இருந்து)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன