கெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா

என்.எஸ்.மாதவனின் மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ தமிழாக்கம் இரா.முருகன் ‘பீரங்கிப் பாடல்கள்’ நூலில் இருந்து ஒரு சிறு பகுதி
————————————————————————————-
“கெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா”. பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வருகைப் பதிவின் போது ராகவன்மாஸ்டர் என் பெயரைக் கூப்பிட்டார்.

“ஆஜர்” என்று நான் சொன்னேன்.

“இப்படியே போனா என்ன ஆகும்” எரணாகுளத்திலே இருந்து திருச்சிவப்பேரூர் வரை இருக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களோட பெயர்கள் மாதிரி – எரணாகுளம் தெற்கு, எரணாகுளம் வடக்கு, இடப்பள்ளி, ஆலுவாய், சொவ்வர – நான் இனிமேல் உன்னை ஒரே ஒரு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். ஜெசிக்கா. உன் முகம் ஏன் வாடிப் போச்சு? சரி இன்னொரு பெயரையும் சேர்த்துக்கலாம். என்ன பெயர்?”

சிவப்பாக, உயரமாக, கருப்புத் தொப்பி தலையில் வைத்து, பாதி முகம் மறைய லேஞ்சி தரித்து நிற்கும், பழைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பாட்டனின் மனைவியான அழகி எட்வினா. அவருடைய புகைப்படத்தை அப்பன் மீசை நறுக்கும் சிறுகத்தியால் கத்தரித்துப் பத்திரமாக எடுத்து வைத்திருந்தேன். “எட்வினா, அந்தப் பேரும் சொல்லுங்க”

“அ”. ராகவன் மாஸ்டர் கரும்பலகையில் எழுதினார். உள்ளங்கை எலும்புகள் வலுப்படாத குழந்தைகள் அதை எழுத சிரமப்பட்டார்கள். மூன்றாம் முறை அ எழுதச்சொன்னபோது அவர்களுக்குக் கை வலிக்க ஆரம்பித்தது. ராகவன் மாஸ்டர் கரும்பலகையில் எழுதிய அ-வை அழித்தார்.

“இப்போ நான் ஒரு பாட்டு பாடப் போறேன். எல்லாரும் கூடச் சேர்ந்து பாடணும்”. ராகவன் மாஸ்டர் பாடினார் : “காக்கா, காக்கா உன்கூடு எங்கே?”

“காக்கா காக்கா உன்கூடு எங்கே?” நான் கேட்டேன். காக்கை பதில் சொல்லவில்லை. என் கையில் இருந்த நெய் அப்பம் தான் காக்கைக்கு வேண்டும், இப்படி செல்லம் கொஞ்சுவது இல்லை என்று எனக்குத் தோன்றியது. நான் விடவில்லை. காக்கையின் மென்மையான உணர்வுகளைக் குறிவைத்தேன் :

“காக்கா காக்கா உன்கூடு எங்கே
கூட்டில் காக்காக் குஞ்சு உண்டோ?”

காக்கை என் கையையே பார்த்துக் கொண்டிருந்தது. மட்டில்டாவிடம் நான் கற்றுக்கொண்டது – காரியம் சாதிக்க, அடுத்தவர்களின் குற்ற உணர்வைப் பயன்படுத்திக்கொள்ள வேணும் – நான் இப்போது நெய்யப்பத்தில் ஆசை வைத்த காக்கைக்கு எதிராக அதன் குற்ற உணர்வை ஏவினேன். நான் பாடினேன் :

“குஞ்சுக்குத் தீனி கொடுக்காமல்
குஞ்சு பசித்து அழுதிடுமே”

இந்த வாதத்தைக் காக்கை எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும். இந்தத் தடவை என் குற்ற உணர்வை காக்கை குறிவைத்தது :

”குழந்தே குழந்தே நீ தருவாயோ
குழந்தைக் கையில் நெய்யப்பம்?”

குற்றபோதத்தைப் பயன்படுத்தி நடக்கும் இந்தக் கொடுங்கல் வாங்கலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாட்டேன் என்று முடிவாகச் சொல்ல நான் படிக்க வேண்டியிருந்தது. ”மாட்டேன் தரமாட்டேன் நெய்யப்பம்”.

காக்கை நெய்யப்பத்தைக் கொத்திக்கொண்டு பறந்து போனது. ராகவன்மாஸ்டரும் வகுப்பில் இருந்த மற்ற குழந்தைகளும் சேர்ந்து சொன்னார்கள் : “அய்யோ காக்கை ஏமாற்றிப் போச்சே”.

நான் விம்மியழுதேன். அப்பம் கையை விட்டுப் போனதற்காக இல்லை. ஏமாற்றப்பட்டதற்காகவும் இல்லை. உந்தியும் தள்ளியும் பல இடங்களில் இருந்தும் இனிவரும் நாட்களில் என்னை வெளியேற்றுவார்கள் என்ற முன் ஜாக்கிரதை உணர்வு பயப்படுத்த எழுந்த அழுகை அது.

கடல் கொச்சிக்குக் கொண்டு வந்தது : வெனீஸில் இருந்து நாணயங்கள், ஜெனோவாவில் இருந்து வெல்வெட், ஃப்லாரன்ஸில் இருந்து நேர்த்தியான கம்பளித்துணி, பெல்ஜியத்தில் இருந்து முகம் பார்க்கும் கண்ணாடி, சீனாவில் இருந்து பீங்கான் பாத்திரம், பல துறைமுகங்களிலிருந்து நீலக்கல், அஞ்சனக்கல், ஈயம், தகரம் போன்ற உலோகங்கள். சிந்தூரம், பவளம், கண்ணாடி போத்தல்கள், ஆத்திர அவசரத்துக்கு பிராந்தி….

காற்று கொச்சிக்குக் கொண்டு வந்தது: கதை.1516-ல் இத்தாலியில் மறுமலர்ச்சி இலக்கியத்தின் மகத்தான கதைகளில் ஒன்றான ‘ஒர்லாண்டோ ஃபூரியொஸோ’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை எழுதிய லுடோவிகோ ஆரியெஸ்ட்டாவுக்கு எழுத்து என்பது மீண்டும் மீண்டும் எழுதுவதுதான். பல தடவை மாற்றி எழுதப்பட்டது ஒர்லாண்டோ ஃபூரியொஸோ. அதன் இறுதியான வடிவத்தில் வெளிவந்ததற்கு ஒரே காரணம், அடுத்த வருடம் ஆரியெஸ்ட்டா இறந்து போனார் என்பது தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன