சின்னத்தம்பி அண்ணாவி மெமோரியல் சவிட்டுநாடகக் குழுவின் காந்தி சரித்திரம், சவிட்டுநாடகம்

Excerpt from the famous Malayalam novel LanthanBatheriyile Luthiniakal by N S Madhavan – translated into Tamil as Beerangi Paadalkal by Era Murukan

காந்தி சரித்திரம் வேணுமா? இந்தா பிடியுங்க காந்தி சரித்திரம். சின்னத்தம்பி அண்ணாவி மெமோரியல் சவிட்டுநாடகக் குழுவின் காந்தி சரித்திரம், சவிட்டுநாடகம்.”.

கள்ளுக்கடையில் பின்பகுதியில் இருந்து யாரோ பீங்கான் பாத்திரத்தில் அலுமினியக் கரண்டியால் தட்டியது கடை முழுக்க எதிரொலித்தது. சந்தியாகு காலடி எடுத்து வைத்து ஆடத் தொடங்கினார்: “தித்தரிகிட திந்தா திலாங்கு திம்ருதோம்”.

“சந்தியாகுசேட்டா, இங்கே வந்து இருங்க”, மைக்கேல் கூப்பிட்டான்.

“மோனே, சந்தியாகுவை சும்மா விடு. அவன் இன்னிக்கு நல்ல ஃபார்மிலே இருக்கான்”. பின்னால் இருந்து யாரோ மூத்த குடிகாரர் சொன்னார். அவரும் தாளமாக சொல்கட்டு சொல்லத் தொடங்கினார் : தரிகிட திம்ருததோம்.

“நாடகம் ஆரம்பிக்கட்டும்”. இன்னொருத்தர் சத்தமாகச் சொன்னார். பிரான்சிஸ் வாயில் விரல் வைத்து விசில் அடித்தார். கூக்குரலும் காகித அம்பு விடுவதுமாக அந்த இடம் இருந்தது.

“சரி, முதல்லே விருத்தம். கடவுள் வாழ்த்து. யாருக்குப் பாட்டு தெரியும்?” சந்தியாகு கேட்டார்.

கள்ளுக்கடையில் பேச்சுமூச்சில்லை. சந்தியாகு சொன்னார் : “ஐயோ, நாடகம் செத்துப் போச்சா? யாருக்கும் விருத்தம் தெரியாதா? என் அப்பன் அகஸ்தீஞ்ஞு சொல்லிக் கொடுத்தபடி நானே பாடித் தொலைக்கறேன்”.

சந்தியாகு கண்ணை மூடிக் கொண்டார். சுருதிப் பெட்டி இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அதை மீட்டியபடி அவர் பாடினார் : “அமலனே எங்களை காப்பாற்றிக் கொள்வான். ஆதி பிதா சுதன் யிஸ்பிரிட் பரிசுத்த ஆவி நாமத்தில் ஆமேன்”.

பிரான்சிஸ் சந்தியாகு அருகில் போய்க் கேட்டார் : “அண்ணாவி, இது எந்த புகழ் பெற்ற தலம்?”
”கட்டியக்காரா, இதுதான் சீமையிலே சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மகாராஜாவும் ராணியம்மா மேரியும் அரசாளும் தில்லி தர்பார்”.

சந்தியாகுவை வணங்கிய பின் பிரான்சிஸ் கேட்டார் : “தர்பாரில் எழுந்தருளியிருக்கும் இந்த அரச பிரமுகர்கள் எல்லாம் யார், சக்கரவர்த்தி?”

“இதுதான் பட்டியாலா மகாராஜா. ஒண்ணரை பெக் அளவுன்னு சாராயம் அளந்து தர பட்டியாலா பெக் உண்டாக்கியவர்”.

“இது யாரோ?”

“ஹைதராபாத் நிஜாம். மட்டாஞ்சேரி தக்கிணி முஸ்லீம்களோட மகாராஜா”

“அது யாரு?”

“கொச்சி மகாராஜா. சின்னப் பய”.

குவாலியர் ராஜா சிந்தியாவையும், பரோடா மகாராஜா கெய்க்வாட்டையும் மைசூர் உடையாரையும் வணங்கிய பிறகு கட்டியக்காரன் பிரான்சிஸ் கேட்டான்: “ ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திகளின் தர்பாரில் மேற்கண்ட பிரமுகர்கள் எல்லோரும் எழுந்தருளியிருக்கக் காரணம் எதுவோ? இவங்களுக்கு என்ன வேணுமாம்?”

சந்தியாகு மேஜைக்குத் திரும்பப் போய் ஒரு கிளாஸ் கள் குடித்தபின் பாடினார்: “கட்டியங்காரா, இவங்களுக்கு ரத்தம் வேணும்

மின்னும்மணி மகர கிரீடம் ராத்தல் அறுநூறு
பொன்படை சட்டை எண் திசை புகழ்பெற்ற
கத்தியவார் ராயன் சிரீ காந்திமன்னனின்
சத்திய நெஞ்சு பிளந்து செங்குருதி
வெள்ளமாய்ப் பெருகுதே சூடான காந்தி ரத்தம்”
.
தொடர்ந்து கொஞ்ச நேரம் கள்ளுக்கடையில் நிசப்தம். கள் குடித்துக் கொண்டிருந்தவர்களில் மூத்தவர்கள் சந்தியாகுவோடு கூடச் சுவடு வைத்து ஆடினார்கள்.

அவர்களின் பழைய நினைவுகளில் இருந்து அடவுகளும் அசைவுகளும் தானே மேலெழுந்து வந்தன.

துறைமுகத்தில் அலைகள் மோதித் தகர்ந்து போகக் கரையில்லாமல், அவை முணுமுணுத்துத் திரும்புவது போல் கள்ளுக்கடையின் எல்லாப் பக்கமிருந்தும் முணுமுணுப்பாகப் பாடல் உயர்ந்தது :
“சூடான காந்தி ரத்தம்”.

ஒருத்தன் மேசையின்மேல் தாளம் கொட்டினான். மைக்கேல் பீங்கான் பாத்திரத்தில் தட்டி வாசித்தான். ராகவன்மாஸ்டரும், கணக்கு வாத்தியார் புஷ்பாங்கதனும் ஏழு போத்தல் கள் ஒருசேர வாங்கி மிடறு மிடறாகக் குடித்து, காலிக் குப்பிகளை மேசையில் நிறுத்தி கரண்டியால் தட்டி ஜலதரங்கம் வாசித்தார்கள்.

கயிறு கட்டி வைத்த கள் பரணிகளிலிருந்து கள் வேகமாக வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

குடிக்க வந்தவர்களின் சுருக்கமான பெயர்களை எழுதி அவற்றின் எதிரே அவரவர் குடித்த கள்ளின் அளவைக் குறிக்க ராஜப்பன் வரைந்து வைத்த கட்டங்களில் கணக்குப் பதிவு தறிகெட்டுப் போனது.

கள்ளுக்கடையில் ஆட்டம் உச்சத்தில் இருந்தது.

“எல்லோரும் போய் உட்காருங்க. இப்போ ஃபைட்டிங் சீன், சண்டைக் காட்சி”. சந்தியாகு சொன்னார். அவர்கள் விலகிப் போக, வெறுமையான அரங்கில் நின்று சந்தியாகு பாடினார் : “துப்பாக்கி எடுத்தான் துஷ்டன் கோட்ஸே”.

சந்தியாகு இடப்பக்கம் சாடிக் குதித்துக் குனிந்து நின்று பாடினார்: “தன்னைத் தான் காப்பாற்ற தள்ளி நின்றார் காந்தி மகான்”

பின் வலது பக்கம் அடியெடுத்து வைத்து அவர் பாடினார்: “துப்பாக்கியாலே சுட்டான் துஷ்டன் கோட்ஸே”

சந்தியாகு இடது பக்கம் நீளத் தாண்டிக் குதித்துப் பாடினார்: “உயரப் பறந்தார் உத்தமர் காந்தி”.
வலது பக்கம் சாடி, அவர் பாடினார் : “துப்பாக்கிக் குண்டுகள் சுட்டுத் தீர்த்தான் துஷ்டன் கோட்ஸே”.

”அப்போதான் தடியெடுத்தார் அண்ணல் காந்தி”.

“வேண்டாம் வேண்டாமய்யா காந்தி அய்யா, மன்றாடினான் கோட்ஸே துஷ்டன்”.

“ரெண்டாக அவன் மண்டை உடைத்தார் காந்தி மகான்”.

“செத்து ஒழிந்தான் துஷ்டன் கோட்ஸே”.

“ஹே ராம் என்றார் காந்தி மகான்”.

கள்ளுக்கடையில் கைதட்டலுக்கு நடுவே, நம்பிக்கை இல்லாத ஒருத்தன் கேட்டான் : மெய்யாலும் செத்தது காந்தி இல்லையோ மேஸ்திரி?”

“அது உன்னோட கதையிலே. காந்தி மகானைக் கொன்னுட்டு என்னை ஒப்பாரிப் பாட்டு பாட வைக்கலாம்னு பார்த்தியா? ஆறாம்புரைக்கல் காரங்க யாரும் இதுவரைக்கும் தோத்துப் போய் ஒப்பாரி வச்சதில்லே. எழவுப் பாட்டு எதுவும் இனிப் பாடவும் போறதில்லே. ஒரு காலத்தில் பிரான்சு சக்கரவர்த்தி காற்லமேன் வேஷம் கட்டி, பூமியிலும், ரோமாபுரியிலும் புகழ் பெற்றுப் பேரு வாங்கிய லந்தன்பத்தேரி அகஸ்தீஞ்ஞுவோட…”

“போதும் போதும் சந்துசேட்டா, நாம போகலாம்”.

மைக்கேல் சந்தியாகுவின் தோளில் கைவைத்து வெளியே தள்ளிக்கொண்டு போனான். அவன் பின்னால் பிரான்சிஸும் நடந்தார்.

போனிபேஸ் பாலம் வரும் வரை அவர்கள் பேசவில்லை. பாலத்தில் நின்று அவர்கள் கிழக்கு ஆற்றின் மறுகரையான எரணாகுளத்தில் ஒளிரும் மின்சார விளக்குகளைப் பார்த்தார்கள். மேற்கு ஆற்றின் மறுகரைத் தீவுகளில், இரவுக்கு ஊசி குத்திக் கீறிப் பிளந்து எரியும் சிம்னி விளக்குகளையும் கண்டார்கள்.

எதிரில், ஜபக்கூடத்தில் கடைசி மெழுகுவர்த்தியின் சுடர் மங்கித் தெரிந்தது. சந்தியாகு நான்கு திசையிலும் குனிந்து வணங்கி மங்களம் பாடினார் :
“மங்களம் நித்யஜெய ஆதிகடவுளோனே
மங்களம் நித்யஜெய பிதாசுதனே
மங்களம் நித்யஜெய பரிசுத்த ஆவியே
மங்களம் சமஸ்துதே மங்களம்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன