Excerpts from my fourth Arasur novel ‘Vaazhnthu Pothire’
இங்கிலீஷ்காரி.
அகல்யாவுக்குத் தெரியும். இந்தப் பெண் அங்கே, லண்டனோ, வேறே பட்டணமோ, இங்கிலாந்தில் இருந்து வந்து இறங்கி இருக்கிறாள்.
கறுப்பு தான். சரி, மாநிறம். அகல்யா சிவப்பு. சரி, சரி, கூடுதல் மாநிறம். அகல்யாவுக்கு, கற்பகம் பாட்டி சொல்வது போல, கொடி போல் உடல்வாகு. பிள்ளை பெற்றால் ஊதிப் போகலாம். இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும் என்று தோன்றவில்லை. உருண்ட தோளோடு கன்னம் வழுவழுத்து, மார்பு திரண்டு, பூசினால் போல் வடிவாக வந்து நிற்கிறாள். அகல்யாவை விட ஒரு குத்து உயரமும் கூட.
மூக்கில் ஒரு பக்கம் மட்டும் குத்தி, இத்தணூண்டுக்கு ஒரு மூக்குத்தி. மூக்குத்தி கூட இல்லை. மூக்குப் பொட்டு. காதிலே சின்னச் சின்னதாக புஷ்பராகக் கல் வைத்து நேர்த்தியான செய்வேலையோடு தாமரைப்பூ டிசைனில் தோடு.
கழுத்தில் போலாக, அதான், லேசாக, அரை அல்லது ஒரு பவுனில் சின்னச் சின்னதாக வார்த்த முல்லை மொட்டுச் சங்கிலி. சன்னமான பொடிக் கல்வேலை வளையல் இடது கையிலும், வெள்ளிக் காப்பு வலது கையிலும் வம்பு பேசிக் கலகலக்கிறது. வலது கை மோதிர விரலில் நீண்டு சுற்றிய நெளி மோதிரம்.
இதெல்லாம் இவள் இந்தியாக்காரி என்று ஓங்கி அறிவிக்கிறது.
இந்திரா காந்தி மாதிரி பாப் கட் செய்த தலையும், திமிர்த்து வளர்ந்த, இன்னும் பள்ளிக்கூடம் விடாத பெண் போல இறுக்கமான நீல பேண்டும், ஆண்பிள்ளை சட்டையும், வேறே தேசத்துக்காரி என்கின்றன.
அகிலா, ஏய் இவளே, எப்படி இருக்கே?
ஏகக் கூச்சலாகக் கழுத்தைக் கட்டித் தூக்கிச் சுற்றி இறக்கி விட்டாள் பழிகாரி. அகிலாவுக்கு அவளை உடனே பிடித்துப் போனது. யாராக்கும் அவள்?
தெரிசா மதாம்மயை பார்க்க வந்திருக்கீங்களா?
அகல்யா ஒரு சிரிப்பில் முகம் பிரகாசமாக அவளைக் கேட்டாள். பஸ் கண்டக்டர் மாதிரி தோல்பையை இரண்டு தோளியும் வழிய அணிந்தபடி, வந்தவள் அவள் கையைப் பற்றியபடி பதிலாகக் கூவியது –
லூசே, உன்னைப் பாக்கத்தான் வந்தேன். நீ அகல்யாதானே?
விடியல் நேரம் கழிந்து, நாராயணீயம் கோவில் ஒலிபெருக்கியில் கேட்கிற ஆறு மணிப் பொழுது. இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கலாமா அல்லது காப்பிக்கு எழுந்து உட்காரலாமா? நிச்சயமில்லாது திலீப் கண் மூடிக் கிடக்க, வாசலில் எழுந்த திடீர் கூச்சல் அவனை உடனே எழுப்பி உட்கார வைத்தது. யாராக்கும்?
அவசரமாக வாசலுக்கு வர அகல்யாவை இறுக அணைத்தபடி ஜனனி.
அவனைப் பார்த்ததும் அகல்யாவை விட்டுவிட்டு கன்றுக்குட்டி போல ஓடி வந்து திலீப் முகத்துக்கு நேரே கை நீட்டிச் சொன்னாள் ஜனனி –
சொல்லாம கல்யாணம் பண்ணிண்டே? நீ உருப்படவே மாட்டேடா.
அப்போ எனக்கு வெரஸோவாவிலே லாண்டரிக்கடை வச்சுக் கொடு. உருப்படி எண்ணித் துவைச்சு இஸ்திரி போட்டுக் கொடுத்து பிழச்சுக்கறேன். தர்றியா?
திலீப் அவள் தலையை பாசத்தோடு வருடியபடி கேட்டான்.
அவனை இறுகக் கட்டி பிடித்து, மனநிலை மாறி, அழலானாள் ஜனனி.
அப்பா போயிட்டார்டா. போயாச்சு. அப்பா இல்லே.
அழுகைக்கு நடுவே அவள் மறுபடி மறுபடி சொன்னது இது மட்டும்தான்.
வந்திருப்பது யாரென்று அகல்யாவுக்கு அர்த்தமாகியது. கல்யாணத்துக்குக் கூட வரமுடியாமல் வெளி நாட்டில் படிக்கப் போன நாத்தனாரை இப்படி சோகமான செய்தியோடா முதலில் சந்திக்க வேணும்? விடிந்த நேரம் சரியில்லை இன்று.
அழுகிறவளை அழவிட்டு, ஆறுதல் சொல்கிறவனைச் சொல்ல விட்டு அவள் வீட்டுக்குள் போனாள். இருக்கும் பாலில் இன்னும் இரண்டு டம்ளர் சாயா மட்டும் உண்டாக்கலாம். போகிறது. அவள் இன்றைக்கு டீ இல்லாமல் ஆபீஸ் போவாள்.
ஒரு நாள் டீ இல்லாவிட்டால் என்ன? ஜனனி குடிக்கட்டும். உசிருக்கு உசிராக வளர்த்த அப்பாவைப் போக்கடித்திருக்கிறாள் அவள். அகல்யா இன்னும் அப்படி இழக்காவிட்டாலும் அந்த துக்கம் புரியும். ஜனனி மினிஸ்டர் பெரியப்பாவுக்கு ஒத்தைப் பொண்ணு. அகல்யா போல. திலீபை அதிகமாகப் பாதித்த துக்கம் அது.