அந்திமழை – நவம்பர் 2020 தீபாவளி சிறப்பிதழில் என் குறுங்கட்டுரை
மகிழ்ச்சியான தருணம் இரா.முருகன்
நான் வசித்த ஹாலிபாக்ஸ் என்ற பிரிட்டானியச் சிறு நகரில் ஒரு குளிர்காலம். விடிகாலையில் தொடங்கி கனமான பனிப் பொழிவோடு ஞாயிற்றுக்கிழமை ஊர்ந்து செல்ல, நான் மடிக் கணினியில் அக்கறையாக ’அரசூர் வம்சம்’ நாவலின் இறுதி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருந்தேன். மாயச் சுழலாக கதைப்போக்கு என்னை அடித்துப் போக, ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தபோது வெளியே இன்னும் பெய்யும் பனி.
தொலைக்காட்சியை இயக்கினேன். ராத்திரி ஒன்பது மணி செய்தி அறிக்கை. அடித்துப் பிடித்து பாகிஸ்தானி உணவு விடுதியான கம்ரான் மாடிப்படி ஏறினேன். பியரர் அகமத் ஷட்டரை இறக்கிக் கொண்டிருந்தார்.
“முதலாளி பிராட்ஃபோர்ட்லே உறவில் விசேஷம்னு போயிருக்கார். நீங்க வந்து போனதும் கடையடைக்கச் சொன்னார். வாங்க, பெஷாவரி னான் செய்து வச்சிருக்கு. பிண்டி மசாலாவும் உண்டு. சூடாக்கி கொடுத்திடறேன்”.
நன்றி சொல்லி உட்கார்ந்தேன். மனம் முழுக்க மகிழ்ச்சி. நாவல் நல்லபடியாக வளர்ந்து முடிந்திருக்கிறது.
விரைவில் அச்சுக்குக் கொடுத்து விடலாம்.
”என்ன சார், ஆபீஸ் வேலையா? சாப்பிடறபோது கூட கம்ப்யூட்டரோடு இருக்கீங்க”.
ரொட்டி கொண்டு வந்த அகமது கேட்டார். ”நாவல் எழுதி முடிச்சிருக்கேன் அகமது” என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
”எதைப் பத்தி சார்?”
”என் முன்னோர் பற்றி எழுதியிருக்கேன்”.
”என் பூர்வீகம் பற்றியும் நாவல் எழுதறீங்களா?”
அகமது வெண்டைக்காயை வைத்துவிட்டுக் கேட்டார். சிரித்தேன்.
அகமது உள்ளே போனார். ஸ்டெயின்லெஸ் டப்பாவோடு திரும்பியவர் எடுத்துக்குங்க என்று டப்பாவைத் திறந்தார். குலாப்ஜாமூன்.
”லாகூர்லே இருந்து என் குடும்பம் அனுப்பியது. ஒவ்வொரு ஜாமூனுக்கும் ஒரு முத்தம்னு என் அஞ்சு வயசு மகள் சாய்ரா எழுதியிருக்கா. நாவல் எழுதி முடிச்ச அங்கிளுக்கு ரெண்டு முத்தமாவது தரவேண்டாமா அவள் சார்பிலே?”
அந்தச் சிறுமி கொடுத்த குலாப்ஜாமூன்களோடு அரசூர் வம்சம் நிறைவு பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடினோம். அகமதுவை அடுத்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக்கத் தீர்மானித்தேன்.
அகமது இன்னும் என் நாவல்களுக்குள் வரவில்லை.
குலாப்ஜாமூன்களோடு அவர் தன் மகளின் குழந்தைகளை மகிழ்ச்சியாகக் கொஞ்சிக் கொண்டிருப்பார். அவரும் நாவல் எழுதுவாரோ.